Wednesday Dec 25, 2024

சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், தெலுங்கானா

முகவரி

சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், சில்க்கூர், ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா மாநிலம் – 500075

இறைவன்

இறைவன்: வெங்கடேஸ்வரப் பெருமாள் இறைவி: பூதேவி மற்றும் ஸ்ரீதேவி

அறிமுகம்

சில்க்கூர் பாலாஜி கோயில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உஸ்மான் சாகருக்கு அருகே அமைந்த காந்திப்பேட்டைக்கு அருகில் உள்ள சில்க்கூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் மாநகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் மூலவர் பெயர் வெங்கடேஸ்வரப் பெருமாள். சிறப்புப் பெயர்கள்:பாலாஜி மற்றும் விசா பாலாஜி, தாயார் பெயர்கள்: பூதேவி மற்றும் ஸ்ரீதேவி.

புராண முக்கியத்துவம்

பல நூற்றாண்டுகளுக்கும் முன்னர் இங்கு வெங்கடேஸ்வரப் பெருமானின் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு வருடமும், அறுவடை முடிந்ததும், அவர் திருப்பதியை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். திரும்பியதும், தமது நிலத்தின் விளைபொருட்களில் பெரும்பாலவற்றை தானமளிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். தமது நிலத்தை உழுகையில் கோவிந்தனின் திருப்பெயரை உச்சரித்த வண்ணமே இருந்தார். முதுமை அடைந்ததும், முன்போல உழைக்கவோ, திருப்பதிக்குச் செல்லவோ இயலாது அவர் வருந்தலானார். ஒரு நாள் அவர் தமது வயலில் சுருண்டு படுத்திருக்கையில், எம்பெருமானே தமது திருமணத் திருக்கோலத்தில் அவர் முன்னர் தோன்றி திருப்பதிக்கு அவர் வரத்தேவையில்லை எனவும், தாமே அவரது வயலில் உள்ள ஒரு எறும்புப் புற்றினுள் குடி கொண்டிருப்பதாகவும் கூறுவதாகக் கனவு கண்டார். விழித்தெழுந்து பார்க்கையில், எம்பெருமானின் ஒளியுரு மறைந்திருக்கக் கண்டார். பெருமான் கூறிய வண்ணம், எறும்புப் புற்றினைத் தோண்டிப் பார்க்கையில், அங்கு தமது இருபுறமும், பூதேவி மற்றும் ஸ்ரீதேவியைக் கொண்டு, பாலாஜியின் திருமணத் திருக்கோலச் சிலையை கண்டார். விரைவில், செய்தி பரவ ஊர் மக்கள் கூடித் தொழலாயினர். பின்னர், இது ஆகம விதிகளின்படி, கோயிலாக உருவெடுத்தது. 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பக்த இராமதாசின் மாமன்மார்களான வெங்கண்ணாவும் அக்கண்ணாவும் இக்கோயிலைக் கட்டமைத்தவர்கள் என்று கூறுவர்.

நம்பிக்கைகள்

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை பகவான் பாலாஜியிடம் முறையிட்டு நிறைவேறிய பின்ன்ர் அல்லது அதற்கு முன்னர் இக்கோயிலில் அங்கப்பிரதட்சனம் செய்வது வழக்கம்.[1] வெளிநாடு செல்ல விசா பெற விரும்புவோர், இக்கோயில் மூலவரான பாலாஜியை பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்தம் விருப்பம் நிறைவேறும் என்பது தனிச்சிறப்பு. இக்கோயிலில் அர்ச்சகப்பணி புரிவோரில் பலர் தமிழர்கள். திருப்பாணாழ்வார் உற்சவம் இக்கோயிலில் சிறப்புடன் நடைபெறுகிறது.

சிறப்பு அம்சங்கள்

• கேட்டவர்க்கு கேட்ட வரமளிக்கும் கமலநாயகனாக எம்பிரான் எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு, ஒவ்வொரு வேண்டுதலையும் மனதில் கொண்டு 18 முறை சுற்றி வரவேண்டும் என்றும், அவ்வாறு சுற்றிவரின், அப்பிரார்த்தனையானது நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. வேண்டுதல் நிறைவேறிய பின்னர் மீண்டும் இத்தலப் பெருமானை 108 முறைகள் சுற்றி நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதுபோல, எத்தனை பிரார்த்தனைகள் உண்டோ, அத்தனை முறைகள் பெருமானைச் சுற்றிப் பயன் பெறுவோர் பலருண்டு. • இந்தக் கோயிலில் எந்த விதமான கட்டணங்களோ, சலுகைகளோ கிடையா. எவராக இருப்பினும், வரிசையில் நின்று பெருமானைத் தரிசித்துச் செல்ல வேண்டும். ஏழை, செல்வந்தர், செல்வாக்குடையோர், சாமானியர் என எப்பேதமும் இன்றி, தன்னை சரணடைவோரைக் காத்து நிற்கும் எம்பெருமானின் கோயிலாக இது விளங்குவது இதன் தனிச் சிறப்பு. • வெளிநாடு செல்லவிரும்புவோர், இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்தம் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை மிக பலமாக நிலவுகிறது. இதன் காரணமாக, பாலாஜியின் திரு நாமம், விசா பாலாஜி என வழங்கப்பெறுகிறது. • இங்கு குழுமும் அடியவர் கூட்டம் வாரத்திற்கு சுமார் ஒரு இலட்சத்தையும் தாண்டுவதாக உள்ளது. விழாக் காலங்களில் இது இன்னமும் மிகுவதாகும். • இக்கோயிலினுள், சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக ஒரு சிறிய சிவன் கோயிலும் உள்ளது.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சில்க்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹிமயாத் நகர்

அருகிலுள்ள விமான நிலையம்

ஹைதராபாத்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top