சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்
முகவரி
சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: ஞானபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை
அறிமுகம்
நீண்ட நாட்களின் பின்னர் இன்று காலை தோளில் மூன்றாவது கண்ணை மாட்டிக்கொண்டு, நானும் இரும்புகுதிரையும் கிழக்கு நோக்கி பயணமானோம். Long long ago துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட கொட்டைகள் துர்வாசர் மீது விழ முனிவரின் தவம் கலைந்தது. மிகுந்த கோபத்தில் அவர் கந்தர்வனை, பழக்கொட்டைகளை பறவை போல் உதிர்த்ததால் நாரையாகப் போக சாபமிட்டார். சாபவிமோசனம் வேண்டிய நாரையிடம் அங்கேயே தங்கியிருந்து கங்கை நீர் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். சாப விமோசனம் தர இறைவன் விரும்பினார்,பரீட்சை வைத்து தானே பாஸ் போட முடியும். அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன. அவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம், ’சிறகிழந்த நல்லூர்’ என வழங்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் நாரை ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது. இந்த வரலாறு நிகழ்ந்த தலமான சிறகிழந்த நல்லூரை காண்போம் வாருங்கள். காட்டுமன்னார்கோயில்- சிதம்பரம் பிரதான சாலையில் ஒன்பதாவது கிமி ல் தெற்கு நோக்கி செல்லும் பாதையில் சென்று பெரிய ஓடை ஒன்றினை தாண்டினால் சிறகிழந்த நல்லூர் தான். இங்கு கிழக்கு நோக்கிய அழகிய சிறிய கோயிலில் ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். 1929ல் திருநாரையூர் திருப்பணியின் போது இக்கோயிலையும் நாட்டுகோட்டை செட்டியார்கள் திருப்பணி செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பணி துவங்க பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகர், அடுத்து தர்மசாஸ்தா, அடுத்து ஒரு லிங்கம், வள்ளி தெய்வானை சமேத முருகன், தண்டாயுதபாணி, கிருஷ்ணன், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. வடமேற்கில் பைரவர்,சனைச்சரன்,சூரியன் உள்ளனர். காலை மாலை என இரு கால பூசைகள் நடைபெறுகின்றன. எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப்பது இழுக்கு எனும் வள்ளுவர் வாக்கினை மெய்ப்பித்த கந்தர்வனின் விடாமுயற்சியின் சாட்சியாக விளங்கும் இத்திருக்கோயிலை காண வாரீர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காட்டுமன்னார்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி