Wednesday Dec 18, 2024

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி – 605 007 கடலூர் மாவட்டம். போன்: +91- 413-261 8759

இறைவன்

இறைவன்: லட்சுமி நரசிம்மர் இறைவி: கனகவல்லி தாயார்

அறிமுகம்

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் (அ) சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. இங்கே பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில், புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில், புதுச்சேரி பகுதியான அபிஷேகப்பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பாக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு நரசிம்மர் பதினாறு கைகளுடன் தோன்றும் இடங்கள் இரண்டு. ஒன்று சிங்கிரிகுடி மற்றொரு தலம் இராஜஸ்தானில் உள்ளது. மே மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா இங்கு மிகச் சிறப்பாக நடைபெறும்.

புராண முக்கியத்துவம்

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்தார். இதைக் குறிக்கும் வகையில், இங்கு மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். இத்தலம் மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது. குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

நம்பிக்கைகள்

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இரண்யனின் துன்புறுத்தலைக் கண்டு அஞ்சி நாட்டை விட்டு அகன்று காட்டில் ஒளிந்து வாழ்ந்த தவயோகிகள், தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் நரசிம்ம அவதாரமெடுத்து இரண்யனை வதம் முடித்த பின்பு பெருமாளிடம் நரசிம்ம அவதாரக் கோலத்தைத் தங்களுக்கும் காட்டியருளுமாறு கோரினர். பெருமாளும் இந்த வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலத்தை முனிவர்களுக்கு தமிழ்நாட்டில் காட்டிய எட்டு இடங்கள் அட்ட நரசிம்ம தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த எட்டு தலங்களில் நடுவில் அமைந்துள்ள பூவரசன் குப்பத்தைச சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கிரி கோவில், சித்தனைவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கிரி கோவில், பூவரசன்குப்பம், பரிக்கல், ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு. வசிஷ்டர் சிங்கிரிக் குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். இத்திருத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள். • 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர்; . • சிறிய உருவில் யோக நரசிம்மர் • சிறிய வடிவில் பாலநரசிம்மர். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது. தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் நரசிம்ம மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன இராஜராஜ சோழன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் கோவில் திருப்பணிகள் பல செய்துள்ளனர். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

திருவிழாக்கள்

சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா நடக்கிறது. அதற்கு 9 நாள் முன்பாக கொடியேற்றி பிரமோற்ஸவம் தொடங்குகிறது. மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை, ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிங்கிரி கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வில்லியனூர், புதுச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top