சாத்தங்குடி விசுவநாத சுவாமி சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
சாத்தங்குடி விசுவநாத சுவாமி சிவன் கோயில், சாத்தங்குடி கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 205 .
இறைவன்
இறைவன்: விசுவநாத சுவாமி
அறிமுகம்
மணல்மேடு- வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் உள்ள திருவாளப்புத்தூர் சென்று அங்கிருந்து குறிச்சி செல்லும் சாலையில் ஐந்து கிமி வடக்கில் சென்றால் சாத்தங்குடி உள்ளது. புலவர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊர் இந்த சாத்தங்குடி. சிவாலயங்களில் அம்மன் சந்நிதி அமைப்பதை மூன்று விதமாக சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்மனை பிரதிஷ்டை செய்வது பொதுவான விஷயம். அநேகமான கோயில்களில் இப்படித்தான் செய்திருப்பார்கள். இதற்கு வீரசக்தி அமைப்பு என்று பெயர். சுவாமியும், அம்மனும் ஒரே திசை நோக்கியபடி அமைப்பதில், ஒரு சில கோயில்களில் சுவாமிக்கு வலப்புறமும், சில கோயில்களில் இடப்புறமும் சந்நிதி அமைந்திருக்கும். வலப்புறம் இருப்பதை கல்யாணக் கோலம் என்றும், இடப்புறம் இருப்பதை அர்த்தநாரீஸ்வர அமைப்பு என்றும் கூறுவர்.சில கோயில்களில் இறைவன் இறைவி நேருக்கு நேர் இருப்பார்கள் இதனை ஆனந்த கோலம் என்பர். பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் விக்கிரகம் கறுப்பு வண்ணத்தில் இருப்பது இயல்பு. அபூர்வமாக சில ஆலயங்களில் மரகத லிங்கம், பவள லிங்கம் இருப்பது உண்டு. ஆனால் பாணம் ‘மதுவர்ணம்’ என அழைக்கப்படும் தேன் நிறத்தில் காணப்படுவது மிகவும் அற்புதமான அமைப்பாகும்.ஆம். இப்படிப்பட்ட ஒரு பாணம் உள்ள லிங்கம் சாத்தங்குடி இறைவனாக விசுவநாத சுவாமி என்ற பெயரில் சாத்தங்குடி ஆலயத்தில் அருள்புரிகிறார்.
புராண முக்கியத்துவம்
இங்கு இறைவனும் இறைவியும் ஒரே முகமாக கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு, இறைவனின் இடப்புறம் இறைவி உள்ளதால் இது அர்த்தநாரீஸ்வர அமைப்பு என அழைக்கப்படுகிறது. . இறைவன் -இறைவி சன்னிதிக்கு இடையே கயிலாசநாதர் சன்னிதி உள்ளது சிறப்பு. கிழக்கில் சூரியன் நான்கு அடி உயரத்தில், நான்கு கைகளுடனும் திருவாட்சியுடனும் ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளது சிறப்பு. ஆயிரம் சிறப்புக்கள் இருந்தென்ன, ஊர்மக்களும், அடியார்களும் கண்டுகொள்ளாத திருக்கோயிலாக இப்போது உள்ளது. இருநூறு வருடங்களாக பிராமணர் குடியிருப்பாக இருந்து தற்போது ஓரிரு குடும்பத்தினர் தவிர அனைவரும் வெளியேறிவிட ஓர் அற்புதமான கோயில் பழையபடி கல்லாய், மண்ணாய் மாற ஆரம்பிக்கிறது. அதிட்டானம், பிரஸ்தரம் வரை கருங்கல் கட்டுமானம், அதன் மேல் துவிதள விமானம் கொண்டது இறைவனின் வீடு. அம்பிகையின் விமானம் வேசர வடிவம் கொண்டுள்ளது. ஆறுகால பூஜைக்கும் கிராமத்தினை எழுப்பிக்களித்த கண்டாமணி ஊமையாகிப்போனது. நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் செய்த வித்தை இது. தென்முக கடவுள் மட்டுமே உள்ளார் அந்த பெரும் பிரகாரத்தில்…. . அம்பிகையின் எதிரில் திருமஞ்சன கிணறு நீர் இறைக்க தான் ஆளில்லை. இறைவனின் முன் மகா மண்டபம் உள்ளது விரிசல் விழுந்த கற்களை தாங்க மாட்டாமல் திணறுகின்றன தூண்கள். ஆங்காங்கே கருங்கற்கள் சிதறி கிடக்கின்றன. இத்தனை இல்லைகளுக்கு மத்தியிலும் ஒரு அர்ச்சகர் தம்பதிகள் இதனை இருவேளை பூஜை செய்து வருவது போற்றத்தக்கது, அர்ச்சகர் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற அவரது மனைவியின் நல்ஒத்துழைப்பே காரணம், இந்த சக்தி இல்லையேல் இக்கோயிலில் சிவம் இல்லை. அவர்தம் இல்லம் கோயிலின் வாயில் அருகே உள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி