சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில், கடலூர்
முகவரி :
சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில்,
சந்தவெளிப் பேட்டை, குறிஞ்சிப்பாடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607303.
இறைவி:
உருப்பிடி அம்மன்
அறிமுகம்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட வீரமுண்டனார், சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர். வீரமுண்டனார் தன்னிடம் கப்பம் வசூலிக்கும் பணியை செய்து வந்த தனது தளபதியாருக்கு தன்னுடைய ஒரே மகளை மணமுடித்து கொடுத்தார்.
இந்த கோட்டைப்பகுதியின் மேற்குப்பகுதி வழியாக ராஜராஜன் பெருவழி, சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இது தற்போது சென்னை – கும்பகோணம் சாலையாகும். இந்த பெருவழியின் குறுக்கே கன்னியாக்கோயில் ஓடை செல்கிறது. இதன் குறுக்கே பாலம் ஒன்றை கட்ட சந்தவெளிப்பேட்டை தலைவனான வெற்றிகளித்த வீரமுண்டனாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். உடனே பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், பாலம் உடைந்து போனது. வழிப்போக்கர்கள் பலர் வெள்ளத்தால் இறந்து விட்டனர்.
சோழ மன்னனிடம் இருந்து கடிதம் ஒன்று வீரமுண்டனாருக்கு வந்தது. அதில் தாங்கள் இந்த பாலத்தை வலிமையாக கட்டவேண்டும். அப்படி கட்டவில்லையானால் உமது வருவாய் தலைவர் உரிமை பறிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். நண்பர் ஒருவர் ஆலோசனையின் பேரில் ஒரு மந்திரவாதியை சந்தித்தார். மந்திரவாதி வீரமுண்டனாரிடம் தலைப்பிள்ளை சூலியை பாலத்தின் முன் வைத்து பலி கொடுத்துவிட்டு பாலம் கட்டினால் அது உடையாமல் ஸ்திரத்தன்மையோடு இருக்கும் என்றான். இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. வீரமுண்டனாரின் மகளுக்கும் தெரிந்தது. இந்நிலையில் வீரமுண்டனாரின் மகளுக்கு வளைகாப்பு நடந்தது. அன்றிரவு அமாவாசை. தந்தையை அழைத்தாள் மகள். ‘‘அப்பா, இன்றிரவு இடிந்து விழுந்த பாலம் அருகே நம்ம குல தெய்வத்தை நினைத்து நான் பூஜை செய்யப்போகிறேன். உத்தரவிடுங்கள்’’ என்றாள். ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
நள்ளிரவு நேரம் கண்மாய் அருகே உடைந்த பாலம் பகுதியில் எட்டு வீரர்கள் தீப்பந்தத்துடன் நிற்க பூஜைக்கான படையல்கள் தலை வாழை இலைகள் மீது வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முன் இருந்து பூஜைகள் செய்தாள் வீரமுண்டனார் மகள். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டு பெண்கள் ஐந்து பேர் அப்பகுதியில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அர்த்த சாம பொழுதானது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் தான் மறைத்து கொண்டு வந்த உடைவாளை எடுத்து தனது வயிற்றை கீறி, கருவை எடுத்து தன் முன் வைக்கப்பட்டிருந்த இலை மீது வைத்துவிட்டு தன் வயிற்றில் தானே குத்தி குருதி கொப்பளிக்க, உயிரற்ற பொருளாய் அவ்விடம் சாய்ந்தாள் வீரமுண்டனார் மகள்.
அவள் சாகும் முன், தனது தந்தையிடம் உடனே பாலத்தை கட்டவேண்டும். என சத்தியம் வாங்கிய பின்னரே உயிரை விட்டாள். மகளுக்கு கொடுத்த சத்தியத்தின் படி வீரமுண்டனார் அவ்விடத்தில் பாலம் கட்டினார். பாலத்தின் அருகே மகளுக்கும் கோயில் கட்டினார். அந்த பாலம் வலிமைத் தன்மையோடு நிலைபெற்று இருந்தது. உருவம் கொண்டு பிடிக்கப்பட்ட அம்மன் என்பதால் உருப்பிடி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். உருப்பிடியம்மன் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு வேண்டும் அளவு பிள்ளைச்செல்வம் கொடுத்து பெருவாழ்வு அளிக்கிறாள்.
நம்பிக்கைகள்:
உருப்பிடியம்மன் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு வேண்டும் அளவு பிள்ளைச்செல்வம் கொடுத்து பெருவாழ்வு அளிக்கிறாள்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சந்தவெளிப் பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி