சத்திரம்நெடார் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
சத்திரம்நெடார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், சத்திரம்நெடார், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 206
இறைவன்
இறைவன்: ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை
அறிமுகம்
தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெடார் கிராமம். வெட்டாற்றங்கரையோரமுள்ள இந்த கிராமத்தில்தான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்து உள்ளது. சிறிய இரு தெருக்களை மட்டும் கொண்ட ஊர் இதுவாகும் இங்கு முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் இருக்கிறது. துர்வாசர் காலஹஸ்தி இறைவனை பூஜிக்கும்போது, பூஜையின்போது சிதறி விழுந்த மலர்கள் ஒவ்வொன்றும் ஒரு காலஹஸ்தீஸ்வரர் ஆக உருவானார்கள் அவற்றில் ஒன்று இந்த வெட்டாற்றின் கரையில் உள்ள கோயில் ஆகும். கோயில் இருப்பிடம் அறிந்து சென்றால் அங்கே காத்திருப்பது அதிர்ச்சி தான். ஆம் கோயில் மிகவும் சிதைந்து இன்றோ நாளையோ என இருக்கும் காட்சி காண மனம் தாங்காது. . ஆலயம் சிதைந்துபோனாலும் காளஹஸ்தீஸ்வரரின் பாணமும் ஆவுடையாரும் கம்பீரமாக நிற்கிறது. தினமும் தன்னைக் குளிர்விக்க கையளவு எண்ணெயும் தண்ணீரும் கொண்டுவரும் குருக்களின் வரவுக்காக காத்திருக்கிறார் இந்த காளஹஸ்தீஸ்வரர்.
புராண முக்கியத்துவம்
ஆலயம் பெருமளவுக்குப் பழுதுபட்டிருந்தாலும் அதன் கட்டுமானத்தையும், அமைப்பையும் வைத்துப் பார்க்கும்போது ஒரு காலத்தில் பெருங்கோயிலாக விளங்கிய கோயில் இது என்பதை அறிய முடிகிறது. ஒரு காலத்தில் பெரும்விழாக்களும் நடந்தேறிய கோயில் தான் இது. கும்பகோணத்தில் நடக்கும் மாசி மகம் வைபவத்துக்கு இங்கிருந்து இறைவன் புறப்பட்டுச் செல்லும் வழக்கம் அந்த நாளில் இருந்திருக்கிறது. நெடார் காளஹஸ்தீஸ்வரர் ஊர்வலமாகப் போய் கும்பகோணத்தை அடைந்ததும் ஒன்று சேர்ந்து மற்ற ஊர் சுவாமிகள் மகாமகக் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி கொடுக்குமாம். ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்துக்கு நிகரான பெருமை இந்தத் தலத்துக்கும் உண்டாம். ராகு மற்றும் கேது தோஷங்களுக்கு இந்த ஆலயத்திலும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். விவரம் தெரிந்த சிலர் இப்போதும் இங்கு வந்து பரிகாரம் தேடிச் செல்கிறார்களாம். ராஜ கோபுரம் சுற்று சுவர் பிரகார கோயில்கள் என எதுவும் தற்போது கிடையாது. பலிபீடம், கொடிமரம் போன்றவையும் இங்கு இல்லை. நீண்ட மண்டபத்தின் ஒரு புறம் கிழக்கு நோக்கிய இறைவன், அருகில் தெற்கு நோக்கிய இறைவி சன்னதி . இருக்கிறது. காளஹஸ்தீஸ்வரரின் விமானம் மூன்று அடுக்குகள் கொண்ட த்ரிதள விமானம். அம்பிகையின் விமானம் ஓர் அடுக்கு ஏகதள விமானம். விமானங்களில் சுதைச் சிற்பங்கள் எதையும் நிறுவாமல் தெளிவாக உள்ளது. ஆலயம் சோழர்காலம், பிற பரிவார மூர்த்திகள் பிற்கால நாயக்கர்கள் காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம் என்பதும் பொதுவான கருத்து. சிதிலமடைந்த கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன. தற்போது திருப்பணி என்ன காரணத்தாலோ நின்று போயுள்ளது. இறைவன் காலஹஸ்தீஸ்வரர் கருவறை எதிரில் நீண்ட மண்டபம் ஒன்று கட்டப்பட்டு குறையுடன் நிற்கிறது. அதில் நந்தியும் பலிபீடமும் மட்டும் உள்ளன. இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். கருவறை கோட்டங்களில் தெய்வங்கள் இல்லை, சிற்றாலயங்கள் இல்லை. மதில் சுவர்கள் தென்புறம் மட்டும் இடிந்து காணப்படுகிறது, பழமையான கோபுரத்தின் நுழைவாயில் பகுதிமட்டும் முன்பகுதியில் காண முடிகிறது. 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவே எண்ணுகிறேன். மீதமுள்ளவற்றினை முடிக்க , நிதி அளிக்கும் நிலையில் உள்ளோர் ஊர்காரர்களை நேரில் சந்தித்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
சிறப்பு அம்சங்கள்
திருமணத் தடை உள்ள ஆண் மற்றும் பெண் இங்கு வந்து வழிபட்டால் திருமணம் உடனே கைகூடுமாம். அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகி, விரைவில் திருமணம் கைகூடுமாம். காளம் வழிபட்டதால் நாக தோஷம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ஈஸ்வரனே தோஷ நிவர்த்தி மூர்த்தியாக இருப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கென தனி சந்நிதி இல்லை.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சத்திரம்நெடார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி