கோவில்களின் தொன்மை குறித்த அறிவு இல்லை: முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் காட்டம்
செங்கல்பட்டு: -செங்கல்பட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாளீஸ்வரர் கோவில் உள்ளது.
ஓராண்டாக, அந்த பகுதியைச் சேர்ந்த சிவா சங்கீதா, கோவில் பற்றி தெரிவித்தார். இந்த கோவில் கருவறை, விமானம் ஆகியவை, தற்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
சுற்றுச்சுவர்கள், உள்ளே இருந்த கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அந்த கோவிலை பார்க்கும்போது, 15 லிருந்து 20 ஆண்டுகளில் இந்த பொக்கிஷம் மறைந்துவிடும்.உடனடியாக, இதை பாதுகாக்க வேண்டும்.
இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட கோவிலை கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். இந்த கோவிலை பொறுத்தவரை, தஞ்சை பெரிய உடையார் கோவில் கட்டுவதற்கு, 400 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கும். முற்கால சோழர்கள் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கலாம்.
இந்த கோவிலை புனரமைக்காமல் விட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த கோவிலுக்கான செயல் அலுவலர் ஓராண்டாக நியமிக்கப்படவில்லை.
கோவில் தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. வசூல் அடிப்படையில் கோவில்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை அக்கறை கோவில்கள் மீது இருந்தால், அதன் தொன்மையை வைத்து பிரித்து இருக்க வேண்டும்.
அமைச்சருக்கு அக்கறை இல்லை என்பதை விட, அவருக்கு தொன்மை ரீதியாக அடிப்படை அறிவு கூட இல்லை என, தைரியமாக சொல்ல முடியும்.
தொன்மையாக இருக்கும் இந்த கோவிலை, இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பிற துறைகள், மக்கள் வரிப்பணத்தால் இயங்குகிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலைத்துறை மட்டும் கோவில் சொத்துக்களாலேயே இயங்குகிறது.
ஆயிரம் கோவில்கள் புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதில், 165க்கும் மேற்பட்ட கோவில்களை, பழமை மாறாமல் புனரமைக்க வேண்டிய சூழல் உள்ளது.
தொல்லியல் துறைக்கு, 5 கோடி 3 கோடி என, நிதி ஒதுக்குகின்றனர். அதற்கு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். தமிழக கோவில்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் உள்ளன. 36 ஆயிரம் கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்