கோழிக்கோடு வலயநாடு ஸ்ரீ பகவதி தேவி திருக்கோயில், கேரளா
முகவரி
வலயநாடு ஸ்ரீ பகவதி தேவி திருக்கோயில், வலயநாடு, கோவிந்தபுரம், கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673007.
இறைவன்
இறைவி: பகவதி தேவி
அறிமுகம்
வலயநாடு தேவி கோயில் என்பது இந்தியாவின், வட கேரளத்தின், கோழிக்கோடு அருகே உள்ள வலையநாட்டில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் ஆகும். பகவதிக்கு கட்டபட்ட வலையநாடு தேவி கோவிலானது கோழிக்கோடு நகரில் மங்காவ் கோவிந்தபுரம் பாதையில் வலையநாட்டில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. வலையநாடு தேவி கோயிலானது தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பிற தேவி கோயில்களிலிருந்து பல அம்சங்களில் வேறுபட்டது. ருருஜித் வழிபாட்டு முறைப்படி பூஜைகள் செய்யப்படும் சாக்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலின் முதன்மைத் தெய்வம் காஷ்மீரைச் சேர்ந்த தெய்வம், சண்டிகா என்று அழைக்கப்படுகிறது, இது மகாரதம் மற்றும் கலசர்பினி என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய சிவயோகியான தையவூர் சிவசங்கர் வடிவமைத்த ஸ்ரீ சக்கரம், கருவறைக்குள் உள்ளது. இந்த கோவிலில் சிவன், தேவாரா பகவதி, ஐயப்பன், விக்னேஸ்வரன், க்ஷேத்ராபாலர் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. சப்தமாதர் சிலைகள் தெற்கு சுவர் பகுதியில் அமைக்கபட்டுள்ளன. இந்த கோவிலில் நடத்தப்படும் ஒரு முக்கியமான சடங்கு குருதி தர்பனம் ஆகும். இந்த கோயிலில் ” சக்தேயா ” முறைப்படி பூஜை செய்யும் அர்ச்சகர்கள் பிதரர் பிராமணர்கள் ஆவர்.
புராண முக்கியத்துவம்
இடைக்காலத்தில் கோழிக்கோட்டை ஆண்ட சாமூத்திரி மன்னர்களின் (பதின்ஹரே கோவிலகம்) குடும்ப தெய்வம் வலயநாடு பகவதி. சாமூத்திரி மற்றும் வள்ளுவ கோனாதிரி ( வள்ளுவநாட்டின் மன்னர்) இடையேயான போரில், சிறந்த படையும், நிதி வலிமையும் கொண்டிருந்தபோதிலும் சாமூத்திரி தோற்கடிக்கப்பட்டதாக தொன்மங்கள் கூறுகின்றன. இது குறிது யோசித்த சாமூத்திரி பகவதியின் அருளாசி வள்ளுவகோனாதிரிக்கே இருப்பதாக முடிவு செய்தார். இதையடுத்து சாமூத்திரி மன்னர் திருமந்தகுன்னு கோயிலுக்கு சென்று தேவி தன்முன் தோன்றும்வரை தவம் மேற்கொண்டார். தன்முன் தோன்றிய பகவதியை சாமூத்திரி மன்னர் தனது இராச்சியத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி பகவதி மன்னனுடன் அவனது நாட்டுக்கு சென்றுகொண்டிருந்தாள்.அப்படி செல்லும்போது, தேவி தன்னுடன் வருகிறாளா என்று அறிய மன்னன் திரும்பிப் பார்த்தான். அதற்கு தேவி மீண்டும் இவ்வாறு திரும்பிப் பார்த்தால் தான் வரமாட்டேன் என்று சாமூத்திரியிடம் கூறினாள். சில மணி நேரம் கழித்து, தேவியின் சலங்கை ஒலிகளைக் கேட்காமல் போகவே, சாமூத்திரி திரும்பிப் பார்த்துவிட்டான். உடனே தேவி அவனிடம் தான் இனி வர இயலாது என்றாள். என்றாலும் சாமூத்திரியின் பக்திக்கு பரிசாக, அவள் தன் வளையலை எறிவதாகவும், அது விழுந்த இடத்தில் தங்கி இருப்பதாகவும் கூறினாள். அதன்படி தேவி வீசிய வளையல் ஒரு வாரம் சுழன்று கோயில் தற்போது உள்ள இடத்தில் விழுந்தது . ஒரு வாரம் வளையல் சுழன்ற இடம் அழச்சவட்டம் என்றும், வளையல் விழுந்த இடம் திருவலையநாடு என்றும் ஆனது.
திருவிழாக்கள்
கோயிலின் ஆண்டுவிழா ஒவ்வொரு ஆண்டும் மகரத்தின் கார்த்திகை நாளில் தொடங்கி ஏழு நாட்கள் தொடர்கிறது. தேவியின் உற்சவர் சிலையானது தளி மகாதேவர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு (உற்சவம்) சில நாட்களுக்கு முன்பு இது வலயநாடு கோயிலுக்கு கொண்டு வழப்படுகிறது. சிலைக்கு மங்காவுவில் உள்ள திரிசால குளத்தில் ‘ஆராட்டு’ நடத்தப்படுகிறது. ஆண்டு விழாவின் போது மத்யமா (சக்தேயா) பூசை இருக்காது. உத்தம பூஜை செய்ய பிராமணர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வலயநாடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோழிக்கோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோழிக்கோடு