Wednesday Oct 02, 2024

கொளப்பாடு சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

கொளப்பாடு சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,

கொளப்பாடு, திருக்குவளை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.

இறைவன்:

சுந்தரேஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 15 வது கிமீல் உள்ள சூரமங்கலம் வந்து 4 கிமீ கிழக்கில் சென்றால் கொளப்பாடு அடையலாம். கீவளூர் – கச்சனம் சாலையில் வந்தால் வலிவலம் அடுத்து உள்ளது. குளப்பாடு என்றால் குளத்தங்கரை அருகில் உள்ள பகுதி என பொருள்; குளப்பாடு கொளப்பாடு ஆகி உள்ளது. ஊர் பெயருக்கு ஏற்றாற்போல் பெரியது சிறியதுமாக ஐந்தாறு குளங்கள் உள்ளன, அதில் ஒரு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது

பெரிய வளாகமாக நந்தவனம் போன்ற தோட்டத்தின் நடுவில் கோயில் உள்ளது. முகப்பில் குறைந்த உயரமுடைய ஒரு செப்பு கொடிமரம் கோயிலுக்கு அணி செய்கிறது. கொடிமரத்தின் முன் ஒரு மாடத்தில் சிறிய கொடிமர விநாயகர் உள்ளார். கொடிமரத்தின் முன்னர் பலிபீடம் நந்தி உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்ட சோழகட்டுமானம் கருவறை இடைநாழி என உள்ளது. இதன் விமான கட்டுமானம் கூட சமீபத்தியதாக உள்ளது.

இறைவன் – சுந்தரேஸ்வரர் இறைவி – அகிலாண்டேஸ்வரி அழகிய நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக இறைவன் உள்ளார், அவரின் முன்னம் சதுர அளவிலான முக மண்டபம் உள்ளது. இது சமீப கால கான்கிரீட் கட்டிடம்தான். இதற்கு வெளியில் தெற்கு நோக்கிய தனி கோயிலாக அம்பிகை கருவறை உள்ளது. இக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கனின் நான்காம் ஆட்சியாண்டான 1229-ல் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் தொடர்பான கல்வெட்டு கருவறை மேற்புற பட்டிகையில் உள்ளது சில துண்டு கல்வெட்டுக்களும் உள்ளன. இந்த சிவன் கோயில் 800 ஆண்டுகள் பழமையான கோயில் எனலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் ஆட்சியாண்டின் 35 வது நாளில் அழகிய கூத்தர் எழுந்தருவிக்கபட்டதையும் இரண்டாம் ராஜேந்திரனது 4வது ஆட்சியாண்டில் அந்த அழகிய கூத்தருக்கு திருவமுது வேண்டும் நிவந்தங்களுக்கு இறையிலியாக கொடுத்த நிலம் பற்றி குறிக்கிறது.

கொளப்பாடு சிவாலயத்தில் உள்ள திரிபுரவிஜயர் சிலையே மிகப் பழைய திரிபுராந்தகர் செப்புப்படிமம் எனப்படுகிறது. பல்லவர் காலத்ததாகக் கருதப்படும் இந்தப் படிமம் சிவபெருமான் தனது இடது காலை சற்றே தூக்கி கீழே உள்ள அபஸ்மாரத்தின் மீது வைத்திருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசின் பாதுகாப்பில் உள்ளது என்கின்றனர். இந்த சிலை தான் அழகிய கூத்தரா என்பதும் தெரியவில்லை. கருவறை கோட்டங்களில் பழமையான மூர்த்தி தக்ஷ்ணமூர்த்தி ஆவார். அவருக்கு அருகாமை கோட்டத்தில் ஒரு அகத்தியரை வைத்துள்ளனர். பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் லிங்க பாணன் ஒன்றை வைத்துள்ளனர் துர்க்கையும் பழமையானவர் போலத்தான் உள்ளார்.

பிரகார சிற்றாலயங்கள்; முதலில் சித்தி விநாயகருக்கு . உள்ளது, அடுத்து நீண்ட மண்டபம் போல திருமாளிகைப்பத்தி அமைந்துள்ளது, அதில் வரதராஜபெருமாள் உள்ளார் அருகில் இருபுறமும் பூதேவி ஸ்ரீதேவி உள்ளனர் அருகில் ஆண்டாள் உள்ளார். அடுத்த அங்கணத்தில் ஜகதீஸ்வரர் நால்வர்கள், காசி விஸ்வநாதர் சரஸ்வதி, மகாலட்சுமி உள்ளனர். அழகிய அம்பிகையின் வண்ண ஓவியம் பெரிதாக உள்ளது. வடமேற்கு மூலையில் பழமையான நாகர விமானம் கொண்ட சன்னதி ஒன்றில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்ளார். அவரின் நேர் எதிரில் தென்கிழக்கு மூலையில் முருகனை நோக்கியவாறு இடும்பன் உள்ளார் அவரின் அருகில் ஒரு பழமையான அம்பிகையின் சிலை, பெரிய பைரவரின் சிலையும் கிடத்தப்பட்டு உள்ளது. புதியதாக இரு மாடங்களில் சிறிய அளவில் பைரவரும், சூரியனும் வைக்கப்பட்டு உள்ளனர். நவக்கிரக மண்டபம் ஒன்றும் உள்ளது. அம்பிகை சன்னதியை ஒட்டி சனி பகவானுக்கு சிறிய சன்னதி ஒன்றை கட்டியுள்ளனர்.

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கொளப்பாடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top