கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
முகவரி
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், பெரிய கோவிலூர் அஞ்சல், வளப்பூர் நாடு, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம் – 637411
இறைவன்
இறைவன்: அறப்பளீஸ்வரர் இறைவி: தாயம்மை, அறம்வளர்த்தநாயகி
அறிமுகம்
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். நாமக்கல்லிலிருந்து சுமார் 52 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. கொல்லிமலையின் ஒரு பகுதியான அறப்பள்ளிக்குச் செல்ல மலைப்பாதை வசதி உள்ளது. சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.
புராண முக்கியத்துவம்
உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, “அறப்பளீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்து விட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. சித்தர் பூமி: பசுமையான மலையின் உச்சியில், அற்புதமாக அமைந்த கோயில் இது. கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால், இம்மலைக்கு இப்பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் தற்போதும் பல சித்தர்கள் சிவனை பூஜிப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலம் மிகவும் தொன்மையும் பெருமையும் வாய்ந்து திகழ்கின்றது. இக்கோயில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னரே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவார பாடல்களில் பாடி இருப்பதில் இருந்து இத்தலத்தின் தொன்மையும் பெருமையும் புலனாகிறது. கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “”அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது. இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன. கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர். மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர்ணீ ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது. பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லி மலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது.
நம்பிக்கைகள்
காசி தரிசனம்: கோயில் பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாயகங்கை, பஞ்சநதி தீர்த்தங்கள் புண்ணியம் தருபவை என்பதால், அதில் நீராடி விஸ்வநாதரையும், தனிச்சன்னதியிலுள்ள பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஜேஷ்டாதேவி சிலை உள்ளது. அறம்வளர்த்தநாயகி: அம்பிகை அறம்வளர்த்தநாயகிக்கு எதிரேயுள்ள சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகன் இருக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற இவர் முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். எதிரில் தாயை பார்த்துக்கொண்டும், அருகில் தேவியருடனும் இருப்பதால் இவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவராக அருளுகிறார். குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
ஆடிப்பெருக்கு: அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஐந்து நாட்கள் விசேஷமாக நடக்கும். இந்நாட்களில் சுவாமி மாலையில் புறப்படுவார். ஆடிப்பெருக்கன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு உண்டு. பொதுவாக சிவனின் அம்சமான அஸ்திரதேவர் தான், தீர்த்தவாரி காண்பார். ஆனால், இங்குள்ள பஞ்சநதி தீர்த்தத்தில் நடராஜர் தீர்த்தவாரி காண்கிறார். மீனுக்கு நைவேத்யம்: ஒருசமயம் அறப்பளீஸ்வரரைத் தரிசிக்க வந்த பக்தர்கள், கோயில் அருகே ஓடும் பஞ்சநதி தீர்த்தத்திலுள்ள மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவதரிசனத்திற்கு பிறகு அதை சாப்பிடலாம் என்றெண்ணி, மீன்குழம்பை தீர்த்தக்கரையில் வைத்தனர். அப்போது சமைக்கப்பட்ட மீன்கள் உயிர்பெற்று நதிக்குள் குதித்தன. அவ்வேளையில் ஒலித்த அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவனே வசிப்பதாக கூறியது. இந்நிகழ்வின் அடிப்படையில் சுவாமிக்கு “அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது. தினமும் காலையில் சுவாமிக்கு படைத்த நைவேத்யத்தை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு போடுகிறார்கள். ஆகாய கங்கை: கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மலைப்பகுதியின் மத்தியில் ஆகாய கங்கை தீர்த்தம் அருவியாகக் கொட்டுகிறது. ஆகாயத்திலிருந்து விழுவது போல இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு இத்தீர்த்த நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். அருவிக்குச் செல்ல படிக்கட்டு உள்ளது. ஆகாயகங்கை அருவியிலிருந்து சற்று தூரத்தில் கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் தங்கிய குகைகள் உள்ளன. வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்புடன் சென்றால் இக்குகைகளை தரிசித்து திரும்பலாம். இவ்விடங்களுக்கு அழைத்துச் செல்ல வழிகாட்டிகள் உள்ளனர். நீதிக்கு பிரார்த்தனை: சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள லிங்கம், “ஆருஷ லிங்கம்’ என்றழைக்கப்படுகிறது. சுவாமி சன்னதி விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சுவாமிக்கு திருவரப்பள்ளியுடையார் என்றும் பெயருண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத் தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார். சுவாமி அறத்தின் வடிவமாக உள்ளதால், பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நீதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். அஷ்டலட்சுமி ஸ்ரீசக்ரம்: அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வவளம் தரும் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. சித்தர்கள் மேற்கொண்ட யோக முறைகளை அம்பாள் சன்னதி சுற்றுச்சுவரில் சிற்பங்களாக வடித்துள்ளனர். மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயர்: பெருமாள் கோயில்களில் சுவாமி சன்னதியில் அவரது பக்தரான ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால், இங்குள்ள மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். சரஸ்வதிக்கும் சன்னதி உண்டு. இவள் அட்சரமாலை, ஏடு, வீணையுடன் நின்றிருக்கிறாள். மன்னனுக்கு விழா: வல்வில் ஓரி மன்னன் ஆண்ட மலைப்பிரதேசம் இது. இம்மன்னனுக்கு இங்கிருந்து 11 கி.மீ., தூரத்திலுள்ள செம்மேடு என்ற இடத்தில் சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று மன்னனுக்கு ஓரி விழா விமரிசையாக நடக்கும். மன்னனுக்கு மரியாதை செய்யும் விதமாக நடக்கும் இவ்விழாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை சிறப்பை வெளிப்படுத்தும்படியான கலைநிகழ்ச்சிகள் நடக்கும். கொல்லிப்பாவை கோயில்: தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர். எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு “கொல்லிப்பாவை’ என்ற பெயர் ஏற்பட்டது. அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, “எட்டுக்கை அம்மன்’ என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோயில் உள்ளது. சங்க காலத்தில் விளங்கிய வள்ளல்கள் பலருள் வல்வில் ஓரி எனும் அரசன் கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த நிலப்பகுதிகளை ஆண்டு வந்தான். ஓரி எனும் கொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஈசன் அறப்பளீஸ்வரர் ஆவார். சதுரகிரி வளர் அறப்பளீஸ்வரர் தேவனே என அறப்பளீஸ்வர சதகத்தில் பாடல் ஒன்றுள்ளது. இச்சதகத்தைப் பாடியவர் அம்பலவாண கவிராயர் என்றும் பாடப்பெற்றவர் மோழை கவுண்டர் மகன் கருமகவுண்டர் எனவும் கூறப்படுகிறது. பிரதோஷ காலத்தில் ஈசனுக்கும் நந்திகேஸ்வரருக்கு ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடப்பதும் பிரதோஷ மூர்த்தி மூன்றுமுறை உட்பிரகாரத்தில் வலம் வருதலும் சிறப்பு அம்சமாகும்.
திருவிழாக்கள்
ஆடி 18ம் பெருக்கு, மகா சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம், திருவாதிரை. இத்தலத்தில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம் என விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடி 18ம் பெருக்கு திருவிழா இத்தலத்தின் தலையாய வருட முக்கிய வைபவம் ஆகும். ஆடி 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு, கொடியிறக்கம் என ஐந்து நாட்களும் பெருவிழா காலங்கள் தான். கொல்லிமலையில் உள்ள அத்தனை ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வர். மேலும் இங்கு வாழும் பூர்வ மலைவாழ் மக்கள் தமக்கே உரித்தான பல வண்ண உடைகளில் கலந்து கொண்டு கொண்டாடுவது கண்களுக்கு விருந்தாக அமையும்.
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொல்லிமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி