Wednesday Dec 25, 2024

கொல்லம் சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா திருக்கோயில், கேரளா

முகவரி

சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா திருக்கோயில், சாஸ்தாம்கோட்டை, கொல்லம் மாவட்டம், கேரள மாநிலம் – 690521

இறைவன்

இறைவன்: ஐயப்பன் இறைவி: பிரபா

அறிமுகம்

சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் என்பது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். பரசுராமரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் அமைந்துள்ள சாஸ்தாம்கோட்டை பகுதியின் மூன்று புறங்களும் கேரளாவில் உள்ள மிகப் பெரிய ஏரியான சாஸ்தாம்கோட்டை ஏரியால் சூழப்பட்டுள்ளது. இக்கோவிலைச் சுற்றி ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.

புராண முக்கியத்துவம்

இக்கோவில் இராமாயணம் எழுதப்பட்ட காலகட்டம் வரையில் பழமை வாய்ந்தது என்றும் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் வானரப்படையுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இங்கு வந்து ஐயப்பனை (தரும சாஸ்தாவை) வணங்கியதாக தொன்ம நம்பிக்கை உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் ராமர் பித்ரு தர்ப்பணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராமரின் வானரப்படைத் தலைவர் நீலன் என்ற குரங்கை ஐயப்ப சேவைக்காக சாஸ்தாம்கோட்டையில் விட்டுச் சென்றதாகவும், நீலனின் பரம்பரையில் உள்ள குரங்குகள் தான் இன்று அங்கு காணப்படுகின்றன என்பதும் இங்குள்ளவர்களின் தொன்ம நம்பிக்கை. பந்தள நாட்டு இளவரசர்களில் ஒருவர், அதிக வசதிகள் கொண்ட காயங்குளம் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர், பந்தளத்தை விட்டுக் காயங்குளத்திற்குச் செல்ல நேரிட்டது. இதனால் மாதந்தோறும் வழிபட்டு வந்த சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாத நிலை இளவரசருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அரச குடும்பத்தில் ஐயப்பன் அதிருப்திக்கான அறிகுறிகளாகச் சில நிகழ்வுகள் நடைபெற்றன. தன் தவறை உணர்ந்த இளவரசர், சபரிமலைக்குச் சென்று, தனது தவறுகளை மன்னிக்க வேண்டியும், தான் சபரிமலைக்கு மாதந்தோறும் வந்து வழிபடுவதில் இருக்கும் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியும் ஐயப்பனை வழிபட்டு வந்தார். அதில் இருந்து பன்னிரண்டாம் நாளில், அவரது கனவில் தோன்றிய ஐயப்பன், இனி சபரிமலைக்கு வந்து வழிபடுவதற்குப் பதிலாக சாஸ்தாம்கோட்டை எனுமிடத்திற்கு வந்து தன்னை வழிபடும்படி சொன்னார். அந்த இடத்தைக் காயங்குளம் அரண்மனையில் நடைபெறவிருக்கும் வில்வித்தைப் போட்டிக்கு வரும் இளைஞர் ஒருவர் உனக்கு அடையாளம் காட்டுவார் என்றும் சொன்னார். காயங்குளத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில், இளவரசரும், இளைஞர் ஒருவரும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி இருந்தனர். போட்டிக்கான நடுவர்கள், “இருவரும் கிழக்கு திசையில் அம்பை எய்திட வேண்டும். அதிகத் தூரம் அம்பு எய்தவர் போட்டியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்” என்று அறிவித்தனர். அதன்படி இளவரசரும், இளைஞரும் கிழக்குத் திசையில் அம்பைச் செலுத்தினர். இருவரது அம்புகளில் அதிக தூரம் சென்ற அம்பைத் தேடிச் சென்றவர்கள், அழகிய ஏரிக்கரை ஒன்றை அடைந்தனர். அந்த ஏரியின் நடுவில் அமைந்திருந்த நிலப்பரப்பில் இளைஞர் செலுத்திய அம்பு கண்டறியப்பட்டது. அம்பு இருந்த இடத்தின் அருகில் மேடைப்பகுதியில் சுயம்புவாக இருந்த சிலையை, ஒரு குரங்கு வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த இளைஞர் மறைந்து போனார். இளவரசருக்குச் சபரிமலை ஐயப்பன் கனவில் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த இடத்தில் தற்போதிருக்கும் கோவிலை இளவரசன் கட்டியதாக கோவில் கட்டப்பட்ட வரலாறு சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்

கேரளக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவிலில், தர்மசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் கோவில் கொண்டிருக்கிறார். மேலும் கணபதி, சிவபெருமான், நாகயட்சி, நாகராஜா, யட்சி, யோகீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன. ஆலய வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் குரங்குகள் அதிக அளவில் உலாவிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் ராமர், சாஸ்தா வழிபாட்டுக்காக விட்டுச் சென்ற நீலன் மரபு வழியிலான குரங்குகள் எனும் தொன்ம நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்

பிப்ரவரி – மார்ச் மாத கால அளவில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் நடைபெறும் கெட்டு காழ்ச்சா என்ற வழிபாட்டின்போது மாடு, குதிரை, அலங்காரம் செய்யப்பட்ட தேர் போன்ற உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ஊர்வலம் செல்வது வழக்கம். இது தவிர திருவோணம், நவராத்திரி, மண்டல மகோற்சவம் (41 நாட்கள்), மகர சம்கிரம பூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பத்தாம் உதயம் போன்ற விசேஷ நாட்களிலும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாஸ்தாம்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

சாஸ்தாம்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top