கொடுங்கல்லூர் ஸ்ரீ பகவதி திருக்கோயில், கேரளா
முகவரி
கொடுங்கல்லூர் ஸ்ரீ பகவதி திருக்கோயில், தேக்கனடா சாலை, கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680664.
இறைவன்
இறைவி: பத்திரகாளி
அறிமுகம்
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்திரகாளி “கொடுங்கல்லூரம்மை” என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள். கேரளாவில் திருச்சூரில் இருந்து 45 கிலோமீட்டர், குருவாயூரில் இருந்து 52 கிலோமீட்டர், எர்ணாகுளத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொடுங்கலூர்.
புராண முக்கியத்துவம்
கேரளாவைத் தோற்றுவித்த பரசுராமரையும், அங்கிருந்த மக் களையும் தாரகன் எனும் அரக்கன் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். அரக்கனால் பாதிக்கப்பட்ட மக்களும், பரசுராமரும் அங்கிருந்த சிவபெருமான் கோவிலுக்குச் சென்று, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து பத்ரகாளியாகத் தோன்றிய சக்திதேவி, தாரகனை அழித்தாள். அதனைத் தொடர்ந்து, பரசுராமர் அந்த இடத்தில் சக்திதேவிக்குத் தனியாக ஒரு கோவிலை நிறுவி பகவதியம்மனாக வழிபட்டார். தொடக்கத்தில் சிவன் கோவிலாக இருந்த ஆலயம், பரசுராமரால் அம்மன் கோவிலாக மாற்றமடைந்ததாக தல வரலாறு சொல்கிறது. பாண்டியனின் தவறான தீர்ப்பால் மதுரையை எரித்த கண்ணகி, சினம் தனியாது சேரனின் ஆளுகைக்குட்பட்ட கேளரத்திற்குச் சென்றாள். சேர மன்னன், கண்ணகியின் கற்பு நெறியை அறிந்து வியந்து, அவளை தெய்வமாக வழிபட நினைத்தான். அதற்காக கொடுங்கலூரில் கண்ணகிக்கு ஒரு கோவிலைக் கட்டினான். அந்தக் கோவிலே, பகவதி கோவிலாக மாற்றமடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். கோபத்தோடு கேரளம் வந்த கண்ணகி, இந்த ஆலயத்தில் இருந்து பகவதி அம்மனை வழிபட்டு, முக்தியை அடைந்தாள் என்பதும் சிலரது கூற்றாக இருக்கிறது. வைசூரிமாலை அம்மன் : கொடுங்கலூர் பகவதி அம்மனுக்கு, லோகாம்பிகை, கன்யகாதேவி என்று வேறு பெயர்களும் உண்டு. மனோதரி என்பவர் ஆதிசக்தியிடம் சென்று, கன்யகாதேவியிடம் இருந்து தனது அசுரக் கணவனைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றாள். ஆதி சக்தியும் தனது உடலிலிருந்து வெளியான சில வியர்வைத் துளிகளை மனோதரியிடம் கொடுத்து, ‘இந்தத் தீர்த்தத்தைப் பயன்படுத்திக் கொள்’ என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அதற்கு முன்பாகவே கன்யாதேவி, அசுரனை கொன்றுவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த மனோதரி, தன்னிடம் இருந்த தீர்த்தத்தை கன்யாதேவி மீது தெளிக்க அவளது உடல் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டது. பின்னர் சிவபெருமானால், கன்யாதேவியின் வெப்ப நோய் நீங்கியது. மனோதரிக்கு இத்தலத்தில் சன்னிதி உள்ளது. அவளே வைசூரிமாலை என்று அழைக்க ப்படுகிறாள். இந்த அன்னையை வழிபட்டால், வெப்ப நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீசக்கரத்தால் வந்த அமைதி: கொடுங்கலூர் கோவிலில் அருள்பாலிக்கும் பகவதி அம்மனின் சிலை உருவம், முன் காலத்தில் பார்ப்பதற்கு பயமூட்டும் வகையில் அமைந்திருந்ததாம். இதனால் அங்கிருந்த மக்கள் அன்னைக்கு உயிர்ப் பலியிட்டும், கள் படைத்தும் வழிபட்டு வந்திருக்கின்றனர். பிற்காலத்தில் ஆதிசங்கரர் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சக்கரம் ஒன்றை நிறுவி, அம்மனை அமைதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆலயத்தில் உயிர்ப் பலியிடுவது நிறுத்தப்பட்டு, குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளுக்குப் பதிலாக இளநீரில் மஞ்சள் கலந்து படைத்தும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
நம்பிக்கைகள்
வெப்ப நோய், கண் பார்வை கோளாறு, மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல அம்மனை வழிபட்டால் அவை அனைத்தும் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ‘துலாபாரம்’ செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், விரைவில் அவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
கிழக்கு நோக்கிய நிலையில் சிவ பெருமான் சன்னிதி, மறுபுறம் விநாயகர், ஏழு கன்னியர்கள் சன்னிதி அமைந்திருக்க, நடுவில் பகவதி அம்மன் வீற்றிருக்கிறார். கருவறையில் இருக்கும் அம்மன் உருவம் எதிரியை அழிக்கும் கோப முகத்துடன் காணப்படுகிறது. எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, ஆறடி உயரத்துடன், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். அன்னையின் சிலை, பலா மரத்தினால் செய்யப்பட்டது. எனவே அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. ‘சாந்தாட்டம்’ என்ற சிறப்பு அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது.
திருவிழாக்கள்
கும்பமாதத்து பரணி விண்மீன் தொடங்கி, மீனமாதத்துப் பரணி வரை நிகழும் பரணி விழா, கேரளத்தின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். “கோழிக்கல்லுமூடல்” எனும் உயிர்ப்பலியுடன் பரணி விழா ஆரம்பிக்கும். கொடுங்கல்லூர் மன்னரின் மேற்பார்வையில், இங்கு நிகழும் “காவு தீண்டல்” பரணி விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு ஆகும். இதன்போது, கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே, ஆலயத்தைச் சுற்றிப் பக்தர்கள் ஓடி வலம்வருவது காவுதீண்டலின் முக்கிய அம்சம். “சந்தனப்பொடி சார்த்தல்” எனும் இன்னொரு நிகழ்வும் இதன்போது இடம்பெறுவதுண்டு. மகர மாதத்தில் (யனவரி – பெப்பிரவரி) நான்குநாட்கள் இடம்பெறும் தாலப்பொலி, இன்னொரு முக்கியமான விழா. மகர சங்கிராந்தியன்று மாலை தொடங்கி, நான்கு நாட்கள் இடம்பெறும் தாலப்பொலியில், குடும்பி குலத்துப் பெண்டிரும், ஏனைய பக்தையரும், யானைகள் முன்செல்ல, பஞ்சவாத்தியம் முதலான வாத்தியங்கள் முழங்க, தேங்காய், அரிசி, தீபம் என்பன கொண்ட தாலத்தை (தட்டு) ஏந்தியவர்களாக ஊர்வலமாக ஆலயம் வருவர்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடுங்கல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இரிஞ்ஞாலகுடா
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி