Friday Nov 15, 2024

கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)

முகவரி

சீனா கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாடு

இறைவன்

இறைவன்: பரமசிவன், கைலாயநாதர், இறைவி: பார்வதிதேவி

அறிமுகம்

சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி.

புராண முக்கியத்துவம்

பூ உலகின் பதிகளில் மிகச் சிறப்பு வாய்ந்த பதி. இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். (இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு.) இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது. 29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன. ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார். அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் “போற்றித் திருத்தாண்டகங்கள்” என்று போற்றப்படுகின்றன. இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, “தானெனை முன்படைத்தான்” என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. சேரமான் பெருமாள் நாயனாரால் ஆதியுலாப் பாடப்பெற்ற பதி. (திருக்கயிலாய ஞான உலா.) காரைக்காலம்மையாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் சென்ற வரலாற்றை நாமறிவோம்.

சிறப்பு அம்சங்கள்

இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது; என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும். இந்தியாவில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றன.

காலம்

2000-3000 ஆண்டுகள் பழமையானது.

நிர்வகிக்கப்படுகிறது

சீன அரசு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திபெத்து

அருகிலுள்ள இரயில் நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள விமான நிலையம்

டேராடூன்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top