Wednesday Dec 18, 2024

கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91- 4366- 273 050, 238445, 99762 15220

இறைவன்

இறைவி: சரஸ்வதி

அறிமுகம்

கூத்தனூர் சரஸ்வதி கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் இக்கோயில். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாகக் கோயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இக்கோயில் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்தராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார். இத்தலத்தில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.

புராண முக்கியத்துவம்

பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால் தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார். இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி பிரம்மனும், சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு,” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள். தமிழகத்தில் சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் கூத்தனூர் மட்டுமே. பிரம்மாவுக்கு அதிகமாக கோயில்கள் அமையாததால் அவரது மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவுக்கு சிலை இல்லை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

நம்பிக்கைகள்

கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் திகழ்வார்.

சிறப்பு அம்சங்கள்

இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் “கூத்தனூர்’ ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோயிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது. இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி உள்ளனர். ஒட்டக்கூத்தருக்கு சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர் “சுயம்புமூர்த்தி’யாக இருக்கிறார். சரஸ்வதி சிலை அமைப்பு: மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், “ஞானச்சஸ்’ என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி’ கோயில் இருக்கிறது. இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது. சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து “ருத்ர கங்கை’ என பெயர் பெற்றது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது “அரிசிலாறு’ என்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு இந்நதி மிகச்சிறந்த நதியாகும். தற்போது இந்நதி பலநாட்கள் காய்ந்தே கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது.

திருவிழாக்கள்

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களுக்கு பின் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்குரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகளும், ஆண்டு தோறும் தமிழ் வருடப்பிறப்பிலிருந்து 45 நாட்களுக்கு லட்சார்ச்சனையும் நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூத்தனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பூந்தோட்டம், திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top