குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 609504.
இறைவன்
இறைவன்: கோளிலிநாதர்
அறிமுகம்
குவளைக்கால் என ஏன் பெயர் வந்தது? குவளை மலர்கள் நிறைந்திருக்கும் குளங்கள், வாய்க்கால்கள் கொண்ட ஊராதலால் இப்பெயர். திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஓடும் வளப்பாற்றினை தாண்டி சென்று இடதுபுறமாக திரும்பும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் குவளைக்கால் அடையலாம். திருவாரூரில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ஊரின் மையத்தில் உள்ளது சிவாலயம், கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் வடபுறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. ஏனோ கிழக்கு வாயிலை அடைத்து விட்டு தென்புறம் வழி வைத்துள்ளனர். இதனால் கோயிலின் முன்பார்வை அழகு குறைந்துள்ளது. ஈசான்யம், கிழக்கு, தென்கிழக்கு பகுதிகள் சுவர்கள் மறைப்பதால் இறைவனின் சக்தி ஈர்ப்பு குறையும் என்பது உறுதி. ஊர்க்காரர்கள் கிழக்கில் உள்ள சுவரை எடுத்துவிட்டு இரும்புகம்பி கொண்டவாயில் அமைக்கவேண்டும். இறைவன் பெயர் கோளிலிநாதர்; திருக்குவளை கோயில் இறைவனும் பெயரும் அதுவே, கோள்களின் குற்றங்களை இல்லாமல் செய்த இறைவன் என்பதாகும். கோள்கள் அனைத்தும் ஈசனின் அடியார்க்கு நல்லதே செய்யும். அதனால் இக்கோயிலில் வழிபடுவோர்க்கு நவகிரகம் தோஷம் இல்லை.
புராண முக்கியத்துவம்
இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இறைவனின் சன்னதிக்கு செல்லும் வழியில் சித்தி விநாயகர் சன்னதி உள்ளது. இறைவன் சதுர பீடம் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது சன்னதி வாயிலில் சிறிய விநாயகர், மற்றும் வள்ளி தெய்வானை முருகன் மற்றும் தென்முகன் உள்ளனர். வெளியில் இருந்தால் பாதுகாப்பில்லை என தென்முகன் இங்கு உள்ளார் போலிருக்கிறது. இறைவன் எதிரில் அழகிய நந்தியும் பலிபீடமும் உள்ளது. வழமைபோல் சண்டேசர் கோமுகத்தின் அருகில் உள்ளார். கோயில் வெளிப்புறத்தில் ஒரு லிங்கமும், சிறிய நந்தியும், இரு நாகர்களும், ஒரு லிங்க பாணமும் வெட்டவெளியில் உள்ளன. தென்புறம் உள்ள வாயில் அருகில் ஒரு சூலக்குறியீடு இட்ட கருங்கல் ஒன்றுள்ளது. இத்தகைய நிலைக்கற்கள், கோயில் நிலங்களின் எல்லைகளை பிரிப்பதற்காக அமைக்கப்படுவது, சிவன் கோயில் நிலங்களின் எல்லை கல் என்றால் சூலக்கல் எனவும், வைணவ கோயிலின் எல்லை கல் என்றால் வாமனக்கல் நடப்படுவதும் வழக்கம். சிறப்பு மிக்க இக்கோளிலி இறைவனை வணங்குவதன் மூலம் தங்களது நட்சத்திர நாளில் வழிபடுவதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கபெறலாம்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குவளைக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி