குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில், தென்காசி
முகவரி :
குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில்,
குருசாமிபுரம், பாவூர்சத்திரம்,
தென்காசி மாவட்டம் – 627808.
இறைவி:
அருணாலட்சுமி அம்மன்
அறிமுகம்:
இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அருணாலட்சுமி அம்மன் வீற்றிருந்து மழலை செல்வத்தை பகதர்களுக்கு அருள்கிறாள்.
புராண முக்கியத்துவம் :
குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனினைந்தபெருமாள், சண்முகவடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன் பயனாக சண்முக வடிவம்மாள் கருவுற்றாள். அவளுக்கு அழகான பெண் குழுந்தை பிறந்தது. அவளுக்கு அருணா லட்சுமி என பெயரிட்டார். அவளது 19 வயதில் கல்லூரணி ஊரிலுள்ள முத்துக்குமார் நாடார் மகன் ராமச்சந்திரனுக்கு மணமுடித்து வைத்தனர். திருமணம் முடிந்த மறு வருடம் அருணா லட்சுமி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
பிரசவ கால மூலிகை மருந்துகளை சாப்பிட கொடுக்கையில் தாயுக்கும், மகளுக்கும் தகராறு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிரசவம் ஆன பத்தாவது நாளில் கணவர் வீட்டுக்கு புறப்பட்டாள். ஊர் எல்லையில் கல் தடுக்கி கீழே விழுந்தாள். எழுந்திருக்க முடியாமல் கடின முயற்சியில் எழுந்த அருணா, தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கு சென்ற நாள் முதல் உடல் நலம் குன்றி, உணவு உண்ண முடியாமல் அவதி பட்டாள். ஒட்டிய முகத்தோடும் மெலிந்த தேகத்தோடும் உருமாறியிருந்த அருணா, தாய் வீட்டிற்க்கு அழைத்து வருப்படுகிறாள்.
வீட்டிற்கு வந்த அருணா மறுநாள் காலை தனது சித்தப்பா மார்களை அழைத்தாள்.‘‘மூனு சித்தப்பாக்களும் வந்திட்டீங்களா, நான் தாய் பேச்ச கேக்காம போனதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டேன். ஆளு அரவம் இல்லா இடத்தில என்ன யாரோ தள்ளிவிட்டாங்க, வரும் செவ்வாய் மதிய பொழுதில் நான் கயிலாசம் போயிருவேன். என் புள்ளையும் கூட்டிட்டுத்தான். என் தங்கச்சி கல்யாணிய என் புருஷனுக்கு கட்டி வைங்க. என்னை, நம்ம வழக்கப்படி எரிக்க வேண்டாம். அடக்கம் பண்ணுங்க. அந்த இடத்தில எனக்கு நடுகல் வச்சு, எனக்கு பூச பண்ணுங்க. எந்த வாதையும் உங்களயும், நம்ம குடும்பத்தயும் சீண்டாம காவல் காப்பேன். அது மட்டுமல்ல என்னை மதிச்சு யார் என்னை வணங்கினாலும் அவங்களுக்கும், அவங்களை சார்ந்தவங்களுக்கும் காவலாய் இருப்பேன்.’’ என்ற படி ம்ம்…ம்…ம் என்று மூச்சிறைக்க குரல் கொடுத்தவாறு உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டாள்.
அருணா லட்சுமி கூறியபடியே அவளை அடக்கம் செய்த இடத்தில் நடுகல் நட்டு பூஜை செய்தனர். பின்னர் கையில் குழந்தையுடன் நிற்கும் பெண் ரூபத்தில் சிலை கொடுத்து கோயில் கட்டி கொடை விழா நடத்தி பூஜித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புணரமைக்கப்பட்டது. கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் அருணா லட்சுமி அம்மன் சிலையும், அருகில் சிறுமி வடிவில் அம்மனின் மகள் சிலையும் உள்ளது. ஆதி மூலஸ்தான கருவறையில் அம்மன், மற்றும் சிறுமியின் சிலைகளுடன், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. புற்றுமாரியம்மன், சுடலைமாடன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. கோயில் வளாகத்தில் நின்ற நிலையில் காயத்ரி சிலை பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கைகள்:
இக்கோயிலில் புத்ரதோஷத்திற்கு தீர்வு கிடைக்கிறது.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடை விழா நடத்தப்படுகிறது. மாதம்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் காயத்ரி அம்மனுக்கு ராகு காலபூஜையும், சிறப்பு யாகமும் நடைபெறுகிறது.
காலம்
500ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருசாமிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாவூர்சத்திரம்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி