கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
மடத்து தெரு, கும்பகோணம்,
கும்பகோணம்,
தமிழ்நாடு – 612001
இறைவன்:
காளஹஸ்தீஸ்வரர்
இறைவி:
ஞானாம்பிகை / ஞானபிரஹலாம்பிகை
அறிமுகம்:
காளஹஸ்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் காளஹஸ்தீஸ்வரர் என்றும், தாயார் ஞானாம்பிகை / ஞானபிரஹலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் திருவிழாவுடன் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று.
புராண முக்கியத்துவம் :
ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் இடையே யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. மேருமலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ள, வாயுபகவான் அதை அசைக்க வேண்டும் என்பது போட்டி. இந்த போட்டியில் மேரு மலையின் மூன்று சிகரங்கள் பெயர்ந்தன. அவை தென்னாட்டில் வந்து விழுந்தன. அவையே காளத்திமலை, திருச்சிராப்பள்ளி மலை, திரிகோண மலை ஆகியவை ஆயிற்று. இங்கு சிவபெருமான் எழுந்தருளினார். காளத்தீஸ்வரர் என வழங்கப்பட்டது. கும்பகோணம் தீர்த்தநகரம் என்பதால் இங்கும் எழுந்தருளினார். காளஹஸ்தியில் ராகு தோஷத்தை தீர்த்து வைப்பதைப்போல இத்தலத்து காளத்தீஸ்வரரும் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்காக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இந்தகோயில் அமைக்கப்பட்டது. இத்தலத்து ஞான பிரகலாம்பிகையை தரிசித்தால் காளஹஸ்தியில் வழிபட்ட பலன் கிடைக்கும்.
நம்பிக்கைகள்:
இங்கு சிவபெருமானுக்கும் ஞானபிரஹலாம்பிகைக்கும் செய்யப்படும் பிரார்த்தனைகள் காளஹஸ்தியின் வாயு லிங்கத்திற்கு சமம். ஜ்வரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, காய்ச்சலை தணிக்கும் இறைவனை சாந்தப்படுத்த, மிளகு மற்றும் வில்வ இலைகளுடன் புழுங்கல் அரிசியை பிரசாதமாக வழங்குவது வழக்கம். கடுமையான மற்றும் நீண்டகால நோய்களில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
பல பெரிய கோயில்களில் ஜுரதேவருக்கு சன்னதிகள் உள்ளன. ஆனால், இந்த கோயிலில் உள்ள ஜுரஹரேஸ்வரருக்கு மூன்று கால்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கால்களை கீழே ஊன்றியும் ஒரு காலை மட்டும் மடித்தும் இவர் காட்சியளிக்கிறார். எலும்பு, தோல், நரம்பு ஆகியவையே நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இம்மூன்றாலும் வரும் நோய்களை குணப்படுத்துவதால் இவருக்கு மூன்று கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இத்தலத்தில் சிவசூரியன் மேற்கு பார்த்து அமர்ந்துள்ளார். இங்குள்ள நடராஜர் சன்னதியில் மிக அருமையான சிலை இருக்கிறது. அருகில் சிவகாமி அம்பாளும், மாணிக்கவாசகரும் அருள்பாலிக்கின்றனர். மகாமக தீர்த்தவாரி கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவிழாக்கள்:
மகர சங்கராந்தி அன்று இவருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இதன்பின் நித்ய கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். மகாமகத்தை ஒட்டி தீர்த்தவாரிக்காக சுவாமி எழுந்தருள்வார். ராகு காலங்களில் துர்க்கைக்கு பூஜை நடத்தப்படுகிறது.
காலம்
18 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி