Thursday Dec 26, 2024

கும்பகோணம் இராமசாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

கும்பகோணம் இராமசாமி திருக்கோயில், மணிக்கார தெரு, வளையாபேட்டை அக்ரகாரம், கும்பகோணம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் – 612001

இறைவன்

இறைவன்: இராமசாமி இறைவி: சீதாலட்சுமி

அறிமுகம்

கும்பகோணம் இராமசாமி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள கலைச்சிறப்பு மிக்க பழைமையான வைணவ திருத்தலம். அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது. காரணம் கோயில் மட்டுமல்ல ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும். இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது. முன் மண்டபம் 62 தூண்களுடன் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. பெருமாளின் பல்வேறு அவதாரங்களும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மகா மண்டபம் என்று பெயர். கோயிலின் உள் பிரகாரத்தில் இராமயணம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. சுமார் 200க்கு மேற்பட்ட சித்திரங்கள் வரயப்பட்டு சித்திரகூடம் சிறக்கிறது. இக்கோயிலின் உற்சவமூர்த்திகள் மிகப் பழங்காலத்தவை. அவை தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும் கி.பி.16 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட அச்சுதப்பெருமாள் தோன்றி அச்சிலைகளை எடுத்து பிரதிஷ்டை செய்து தனக்கு கோயில் அமைக்குமாறு கூறியதாக வரலாறு கூறுகிறது. சுவாமியின் கருவறை பழைய முறைப்படி அமைந்துள்ளது. ஸ்ரீ இராமபிரானும் அன்னை சீதாதேவியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பரதர் குடைபிடிக்க சத்ருக்குனர் சாமரம் வீச இலக்குமணர் வில்லேந்திய வண்ணம் இராமர் கட்டளையை எதிர்பார்த்து நிற்பது போன்ற பட்டாபிஷேக காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் கையில் வீணையுடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் இராமாயண பாராயணம் செய்வது போன்ற திருமேனி ஒரு தனியழகு. இக்கோயிலின் பெருமாள் கோதண்டபாணியாக உள்ளார்.

புராண முக்கியத்துவம்

அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதி அவரது பிறந்த நாளாகும். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா அந்த தெய்வ மகனைப் பெற்ற புண்ணியவதி. இதையடுத்து விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம் பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள் பூசம் நட்சத்திரத்தில், இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில்அவதரித்தது. விஷ்ணுபூமிக்கு வந்த போது அவருடன் ஆதிசேஷனும் வருவேன் என அடம் பிடித்தது. தன்னை தினமும் தாங்கி தூங்க வைக்கும் சேவை புரிந்த சேஷனின் சேவையைப் பாராட்டி, விஷ்ணுஅதை தன் தம்பியாக ஏற்றார். மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு ராமன் பிறந்த மூன்றாம் நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் அக்குழந்தை பிறந்தது. அதே நாளில் சுமித்திரையின் வயிற்றில் சத்ருக்கனன், விஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் அவதாரமாக அவதரித்தார். இவர்களில் லட்சுமணன் ராமனை மிகவும் நேசித்தார். குழந்தையாக இருந்த போது இவர் நான்காம் தொட்டிலில் கிடந்தார். ராமன் முதல் தொட்டிலில் படுத்திருந்தார். லட்சுமணக் குழந்தை அழுதது. எவ்வளவோ ஆறுதல்படுத்தியும் முடியவில்லை. அதன் கண்கள் ராமனின் தொட்டிலை நோக்கி திரும்பியிருந்ததைக் கண்ட வசிஷ்டர், ஒரே தொட்டிலில் இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தார். ராமனை தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்ட அக்குழந்தை அழுகையை நிறுத்தியது. அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர் ராம சகோதரர்கள். ராமன் காட்டுக்கு போன வேளையில், அதற்கு காரணமான தன் தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும், அண்ணனுக்கு பதிலாக தற்காலிக ஆட்சி நடத்திய போது, அவரது பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து மரியாதை செய்து வந்தார். சத்ருக்கனன் தன் அண்ணன் ராமன் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு இணை சொல்லமுடியாது. அண்ணன் காட்டில் இருந்த போது, அங்கிருந்து தன்னால் நகர முடியாது என அந்த குட்டித்தம்பி அடம் பிடித்தார். ராமனின் ஆறுதலின் பேரிலேயே ஊர் திரும்பினான். ஒருமித்த சகோதரர்களுக்கு, ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத சத்ருக்கனருக்கு ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புத்திரிகளான மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும், ஆசை வார்த்தைகள் காட்டினாலும் இந்த அன்புச் சகோதரர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை. பட்டாபிஷேக நாளன்று தன் தம்பிகளுடனும், எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்கு சேவை செய்த அனுமானுடனும், காட்டில் தன்னோடு கஷ்டப்பட்ட மனைவி சீதையுடனும் கொலு வீற்றிருந்தார். அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னக மக்களும் காண வேண்டும் என தெற்கிலிருந்து பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற மன்னர்கள், தீர்த்த நகரும், புனித இடமும் ஆன கும்பகோணத்தில் இக்காட்சியை வடிவமைத்தனர்.

நம்பிக்கைகள்

அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர். ராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றுக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி, என்றும் தியாக மனப்பான் மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர். அது மட்டுமல்ல, ஒரே ஆசனத்தில் ராமனும் சீதையும் அமர்ந்திருப்பர். மற்ற கோயில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும். ராமனின் இடதுபுறம் சத்ருக்கனன், வலதுபுறம் பரதன் மற்றும் அனுமானைக் காணலாம். லட்சுமணன் வழக்கம் போல் வில்லுடன் இருக்கிறார். அனுமானைக் கதாயுதத்துடன் தான் எங்கும் காண முடியும். இங்கோ அனுமான் தனது போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ராமனின் காது குளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார். கல்வியில் வல்லவரான அனுமான், இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்காட்சி உள்ளது. மற்றொரு கையில் ராமாயண காவியத்தை வைத்துள்ளார். ராமாயணத்தை வீணை மீட்டி பாடுவதாக ஐதீகம். இக்கோயிலின் உள்பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம். இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன் மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன.

திருவிழாக்கள்

ராமநவமியன்று இங்கு விசேஷ பூஜைகள் உண்டு. மாசிமகத்தன்று ராமனும், சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர். கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் கருட சேவை கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

காலம்

16 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top