குன்னம் பூமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
குன்னம் பூமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
குன்னம், நாகப்பட்டினம் மாவட்டம்
மொபைல்: +91 9487033094
இறைவன்:
பூமீஸ்வரர்
இறைவி:
அருண வித்ருமநாயகி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் அமைந்துள்ள பூமீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் பூமீஸ்வரர் என்றும், தாயார் அருண வித்ரும நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரம், தீர்த்தம் சக்கர தீர்த்தம். பூம்புகாரைத் தலைநகராகக் கொண்ட இந்தப் பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், சங்கமன் என்ற மன்னன் இந்தக் கோயிலுக்குச் சில வரலாற்றுக் கண்டுபிடிப்புகளின்படி பல திருப்பணிகளைச் செய்தான். இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.
சிதம்பரம் மார்க்கத்தில் சீர்காழியிலிருந்து 6 கி.மீ தொலைவில் புதூர் உள்ளது. குன்னம் கிராமத்தில் உள்ள கோயில் புதூரில் இருந்து மேற்கே 6 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழியிலும், அருகிலுள்ள விமான நிலையம் திருச்சியிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பிரம்மாவின் புத்திரர் மரீசிமுனிவர். இவருக்குப் பிறந்த புத்திரர் காஸ்யபர் என்ற முனிவர். காஸ்யபமுநிவரின் மனைவியின் பெயர் திதி. காஸ்யபர் ஒருநாள் ஸந்தியா காலத்தில் யோக நிலையில் இருந்த போது மாயையில் அகப்பட்டுத் தன் யோக நிலையிலிருந்து வழுவி காம இச்சைக்கு ஆட்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகத் திதியின் கர்ப்பத்தில் இரண்டு அசுரர்கள் உருவானார்கள். காலப்போக்கில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற பெயர்களைத் தாங்கி இப்பூமியில் பிறந்த இந்த இரண்டு அசுரர்களும் பிரம்மனை நோக்கிக்கடும் தவம் புரிந்தனர். அரக்க சகோதரர்களின் தவ வலிமையினால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் அருளினார் பிரம்மனிடம் அளவில்லா வரங்களைப் பெற்ற அசுர சகோரர்கள் பூவுலகையும், பாதாளலோகத்தையும் வெற்றி கொண்டு ஸ்வர்க்கலோகத்தைக் கைப்பற்றத் தங்கள் படையுடன் சென்றனர்.
அசுரர்களின் வலிமையை எதிர்க்க முடியாத தேவேந்திரன் மகாவிஷ்ணுவைச் சென்று சரணடைய, மஹாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தைப் பிரயோகம் செய்து அசுரர் கூட்டங்களை அழித்தார் ஹிரண்யாசுரன் மகாவிஷ்ணுனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டு மூர்ச்சை அடைந்தான். ஹிரண்யகசிபு மாய உடல் எடுத்து வந்து காயமடைந்த ஹரிண்யாசுரனை யுத்தகளத்திலிருந்து மீட்டு எடுத்துச் சென்றான். தேவர்கள் மீண்டும் ஸ்வர்க்கலோகம் சென்றனர்.
போரில் மகாவிஷ்ணுவினால் தாக்கப்பட்டுக் காயம் அடைந்த ஹிரண்யாக்ஷன் மகாவிஷ்ணுவைப் பழி வாங்குவதற்காக பூமியைப் பாய்போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் பூமாதேவியையும் சிறைப்பிடித்து எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொண்டான். ஹிரண்யாசுரனால் கவரப்பட்ட பூமாதேவியை மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கு அடியில் சென்று ஹிரண்யாசுரனை வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவியானவள் அப்பொழுது மகாவிஷ்ணுவை நோக்கி, பகவானே ஹிரண்யாசுரன் போன்ற வலிமை மிக்க அரக்கர்கள் வருங்காலத்திலும் இந்த உலகத்தில் உருவாக்கக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எனக்கும். பூலோகத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் மறுபடியும் இப்படிப்பட்ட துன்பம் வராமலிருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டாள். அப்பொழுது மகாவிஷ்ணு பூமா தேவியிடம், நீ பூலோகம் சென்று சர்வேஸ்வரரான பரமசிவனையும் பார்வதியையும் கணபதியையும், சுப்பிரமணியரையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து விட்டு வந்தால் எதிர்காலத்தில் அசுரர்களால் உனக்கு எந்த விதமான துன்பமும் நேரிடாது என்று கூறினார். பூமாதேவியும் பூலோகம் வந்து பல இடங்களில் சுற்றிய பின்பு கடைசியில் இரண்டு காவேரிக்கு மத்தியில் உள்ள இந்த போதிகாந்தாரம் என்ற பிரதேசத்தையடைந்தாள். அந்தத்தருணத்தில் வானத்திலிருந்து தவம் செய்! தவம் செய்! என்ற அசரீரி சப்தம் எழுந்தது.
பூமாதேவியானவள் அந்த இடத்தில் பூமி விக்னேஸ்வரர் என்ற விநாயகரையும், முருகனையும் ஒரு சிவலிங்கத்தையும் அம்பாளையும் பிரதிஷ்டை செய்தாள். தான் நீராடுவதற்காக ஓர் தீர்த்தத்தையும் உண்டாக்கி அதன் கரையில் அமர்ந்து பஞ்சாக்ஷரஜபம் செய்யத் தொடங்கினாள். பன்னிரெண்டு. ஆண்டு காலம் பூமாதேவி இவ்விதம் கடும் தவம் இயற்றினாள். பன்னிரெண்டாவது ஆண்டு முடிவில் சிவபெருமான் பார்வதி தேவியோடும், கணபதியோடும், வள்ளி தேவஸேனை சமேத சுப்பிரமணியரோடும் பூமாதேவிக்கு முன் பிரத்தியக்ஷமானார். சிவபெருமான் பூமாதேவியை நோக்கி தேவியே! நாம் உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தோம். நீ வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று கூற, பூமாதேவியானவள். எம்பிரானே! இனி எக்காலத்திலும் அசுரர்களால் எனக்குத்துன்பம் வராமல் இருக்க வேண்டும். தாங்கள் காட்சியளித்த இந்த சிவலிங்கம் பூமீஸ்வரர் என்ற பெயரோடு விளங்க வேண்டும். தாங்கள் இந்த சிவலிங்கத்தில் ஆவாஹனம் ஆகியிருந்து கொண்டு இங்கு வந்து உங்களைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களையும் அளிக்கவேண்டும்.
என்னால் உண்டாக்கப்பட்ட இந்தத்தீர்த்தத்தில் நீராடுபவர்களின் சகல பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகி அவர்களுக்கு மோக்ஷம் கிட்டவேண்டும். தங்கள் ஸிரஸில் இருக்கும் கங்கையானவள். இந்த தீர்த்தத்தோடு என்றும் கலந்திருக்க வேண்டும். தாங்கள் எனக்குக் காட்சியளித்த இந்த வைகாசி பூர்ணிமையில் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து தங்கள் மூதாதையர்களுக்குச் செய்யப்படும் பரிகாரங்கள் அவர்களின் மூதாதையர்களை என்றென்றும் கைலாசத்தை விட்டு நீங்காமல் இருக்குமாறு செய்யவேண்டும். தங்களுடன் சேர்ந்து இன்று இங்கு எனக்குக் காட்சியளித்த பார்வதியானவள் பவழத்தின் நிறத்தோடு விளங்குவதால், அந்த தேவியானவள் பவழாம்பாள் (வித்ரும நாயகி) என்ற பெயரோடு இங்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். அம்பிகையுடன் உடனிருக்கும் கணபதி. பூமி விக்கேனஸ்வரர் என்ற திருப்பெயரோடும் அவரின் தம்பி சுப்ரமணியர் தன் தேவிகளோடு இங்கு எப்போதும் வாசம் செய்ய வேண்டும். இவர்கள் அனைவருக்கும் காவல் தெய்வமாகப் பைரவர் இங்கு விளங்க வேண்டும். எனக்கு இந்த வரங்களை அருள வேண்டும் என்று வேண்டினாள். சிவபெருமானும் அவ்வாறே வரங்களையளித்துவிட்டு மறைந்தார்.
பூமாதேவி தேவ சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து இறைவனுக்கு ஒரு ஆலயம் அமைக்கக் கட்டளையிட்டாள். விஸ்வகர்மா பூமீஸ்வரரை மத்தியில் வைத்து அவருக்கு இடது பாகத்தில் வித்ருமநாயகியையும், திருதிதிக்கில் (தென்மேற்கு) கணேசரையும், மேற்கு திக்கில் வள்ளி, தேவஸேனா சமேத சுப்பிரமணியரையும், ஈசான திசையில் (வடகிழக்கு) பைரவரையும் கொண்ட சந்நிதிகள் அமைத்துக்கோயிலை அழகுற உருவாக்கினான். அப்படி விஸ்வகர்மாவினால் உண்டாக்கப்பட்ட அந்தக் கோயிலில் பூமாதேவி பிரார்த்தனை செய்து, பிறகு தன் இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டம் சென்றடைந்தாள்.
நம்பிக்கைகள்:
அனைவருக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களையும், சகல பாவங்களும் தோஷங்களும் நிவர்த்தியாகவும் பிரார்த்திக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
ஜமதக்னி என்ற முனிவரின் பத்தினிரேணுகாதேவி. அவள் தினமும் காவேரியில் நீராடி மண்ணினால் குடம் செய்து அதில் தீர்த்தம் எடுத்து வந்து ஜமதக்னி முநிவரின் பூஜைக்கு அளித்து வந்தாள் ஒருநாள் அவள் நீராடுகையில், வானத்தின் வழியே சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல் நீரிலே விழுந்தது. அந்த கந்தர்வனின் அழகில் மயங்கி ஒரு நிமிடநேரம் ரேணுகாதேவி அந்த நிழலை உற்று நோக்கினாள். அதனால் அவளுக்கு மண்ணினால் குடம் சமைக்கும் சக்தி அவளைவிட்டு நீங்கியது. பூஜைக்கு நேரம் ஆன நிலையில் முனிவர் தன் ஞானதிருஷ்டியினால் என்ன நடந்தது என்பதையறிந்தார். தன் மனைவியின் பேரில் கடும் கோபம் கொண்ட முனிவர் தனது குமாரர்களை அழைத்து ரேணுகாதேவியின் தலையை வெட்டும்படி ஆணையிட்டார். ஆனால் அதற்கு. அவர்கள் தங்கள் தாயின் தலையை வெட்டச் சம்மதிக்கவில்லை. ஆனால் கடைசி மகனாகிய பரசுராமர் தன் கையிலிருந்த கோடாலியினால் தன் தாயாரின் தலையைத் துண்டாக்கினார்.
அதனால் மனம் மகிழ்ந்த ஜமதக்னி முனிவர். பரசுராமரை நோக்கி நீ வேண்டும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்குப் பரசுராமர் என் தாயார் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்ற வரம் கேட்க, ஜமதக்னி முனிவரும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அருளினார். ரேணுகாதேவியும் உயிர் பெற்று எழுந்தாள். ஆனால் தகப்பனாரின் உத்தரவுப்படித் தாயின் தலையைக் கொய்ததினால் பரசுராமரைத் தோஷம் தாக்கியது. அந்தத் தோஷத்திலிருந்து விடுபட, பரசுராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, பல இடங்களுக்கும் சென்றுவிட்டு இந்த பூமிஸ்தலத்தை அடைந்தார். அங்குள்ள பூமி குண்டத்தில் (கோயிலுக்கு முன்புள்ள குளம்) ஸ்நானம் செய்து பூமீஸ்வரரைத் தியானம் செய்ய அமர்ந்தார்.
அப்பொழுது ஒரு புலி அங்கு வந்து அவரைப் பார்த்து விட்டு அவர்மேல் பாய வந்தது. பரசுராமர் விரதம் இருந்து சிவதியானம் செய்து கொண்டிருந்ததால் அந்தப் புலியைக் கொல்ல விரும்பவில்லை. அதனால் தன் தாயாரை மனதில் தியானம் செய்து அவரை அங்கு அழைத்தார். ரேணுகாதேவி உடனே அங்கு பிரத்யக்ஷமாகி மண்ணினால் குடம் செய்து அதில் தண்ணீரை எடுத்து அதிலிருந்து ஒரு கை நீரை எடுத்து அதை அந்தப் புலியின்மீது தெளித்தாள். உடனே புலி தன் சரீரத்தை விடுத்து ஒரு தேவனாக மாறியது. அந்தத் தேவன் ரேணுகாதேவி. பரசுராமர் ஆகிய இருவரையும் வணங்கி விட்டுத் தேவலோகம் சென்றான்.
பரசுராமர் தன் தாயாரை நோக்கி, அம்மா! என்னைக் காப்பாற்ற இங்கு பிரத்யக்ஷம் ஆன நீ இனி என்றும் கடேஸ்வரி (குடவரசி-மண்ணைஎடுத்துக் கடம் செய்தவள்) என்ற பெயரோடு இந்த இடத்தில் விளங்கி வருவாயாக! மாசிமாதம் வெள்ளிக்கிழமையில் யார் இந்தத் தீர்த்தத்தில் குளித்து உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்குச் சகல ஐஸ்வர்யமும் உன் மூலம் கிடைக்க அருள் புரியுங்கள் என்று வேண்ட ரேணுகாதேவியும் அவ்வாறே இருக்கச் சம்மதித்தாள். பின்பு பரசுராமர் பூமீஸ்வரரைக் குறித்துத் தவம் செய்ய ஆரம்பித்தார். ஒரு கார்த்திகை மாதம் சோமவாரத்தில் பூமீஸ்வரர் பரசுராமருக்குக் காட்சி கொடுத்து அவர் தோஷத்தைப் போக்கியருளினார்.
முன்னொரு காலத்தில் பிரம்மபுரத்தில் ஹரசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவனுக்கு மூன்று புத்திரர்கள். அவர்களில் மூத்த மகன் மந்த புத்தி உள்ளவனாகவும், முரடனாகவும் இருந்தான். உலக ஞானம் தன் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹரசர்மா அவனைத் தீர்த்தயாத்திரை சென்று வா என்று அனுப்பி வைத்தான். ஊரை விட்டு கிளம்பிய அந்த அந்தணச் சிறுவன் கண்வர் என்ற ரிஷியின் ஆஸ்ரமம் வந்தடைந்தான். கண்வர் அவனுக்கு பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசம் செய்து. பூமிஸ்தலம் சென்று அங்கு கணேசரை நோக்கித் தவம் செய்து, அவரருளால் சகல வித்தைகளையும் கற்று வருமாறு கூறி வழி அனுப்பி வைத்தார். அந்த அந்தணச் சிறுவனும் பூமி ஸ்தலத்தையடைந்து ஒரு வருஷம் கடும் தவம் செய்தான். கணேசரும் அந்தச் சிறுவனின் தவத்திற்கு மகிழ்ந்து சிரவணமாதம் சுக்லபக்ஷசதுர்த்தியில் அவனுக்குக் காட்சி கொடுத்து சகலஞானங்களையும் அருளினார்.
ஞானம் பெற்ற சிறுவன் தன் பெயரை வரதன் என்று மாற்றிக் கொண்டு காஞ்சிபுரம் சென்று அங்கு ராஜ சபையில் சகல பண்டிதர்கள் முன்பு தன் புலமையை வெளிப்படுத்தி அரசனிடமிருந்து ஏராளமான சன்மானங்கள் பெற்றுத் திரும்பவும் பூமிஸ்தலத்தை அடைந்தான். அங்கு தனக்கு அருள் கொடுத்த கணபதிக்கு புதிதாக ஒரு ஆலயம் நிர்மாணித்து அதில் கணபதியைப் பிரதிஷ்டை செய்து வணங்கி விட்டுத் தன் தகப்பனார் இருந்த பிரம்மபுரம் சென்று நெடுங்காலம் சுகமாக வாழ்ந்திருந்தான்.
பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவைப் பார்ப்பதற்காக நாரதர் ஒரு நாள் அங்கு வந்தார். அப்பொழுது மகாவிஷ்ணு நாரதரிடம் நாரதரே! உலகத்தைக் காத்து ரக்ஷிக்கும் எனக்கு மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து இருந்தால் தான் சக்தி உண்டு. ஆனால் நான் மஹாலக்ஷ்மியை விட்டுப் பிரிய நேரிடும் சந்தர்ப்பம் இதுவரை இரண்டுமுறை ஏற்பட்டுள்ளது. முதன் முறை துர்வாஸ முனிவரின் சாபத்தால் லக்ஷ்மி என்னைவிட்டுப் பிரிந்தாள். இரண்டாவது முறை தக்ஷன் யாகத்தில் நான் கலந்து கொண்டபோது வீரபத்திரர் கதையினால் நான் மார்பில் அடிக்கப்பட்டேன். அந்த அடியின் வலியைப் பொறுக்க மாட்டாமல் லக்ஷ்மி சமுத்திரத்தினுள் விழுந்தாள். பிறகு நான் மிகுந்த கஷ்டப்பட்டு லக்ஷ்மியைய மீண்டும் அடைந்தேன். இனிமேல் நான் மஹாலக்ஷ்மியை விட்டுப் பிரியாமல் நிரந்தரமாக இருப்பதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு நாரதர் பிரபுவே! ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவராக இருக்கும் கணேசருடைய அருளினால்தான் மஹாலக்ஷ்மியை அடைந்தீர்கள். ஆனால் அருள் கொடுத்த அவரின் நினைவை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆகவே பிரிவு என்கிற விக்னம் உங்களுக்கு ஏற்பட்டது. நீங்கள் இருவரும் கணேசரை மறுபடியும் பூஜித்து அவரைச் சந்தோஷம் அடையச் செய்தால் உங்களுக்குள் பிரிவு என்பது இனிமேல் என்றும் ஏற்படாது என்று கூறினார். நாரதரின் அறிவுரைப்படியே மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும், பூலோகம் வந்து பூமி ஸ்தலத்தை அடைந்தனர். மஹாவிஷ்ணுதன் சக்கரத்தினால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். அதற்குச் சக்கரதீர்த்தம் என்று பெயரிட்டு அந்த தீர்த்தத்தின் அருகில் ஒரு விநாயகரை ஸ்தாபித்து அவரும் மஹாலக்ஷ்மியும் அந்த இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இருந்தனர். அவர்கள் தவத்தினால் மகிழ்ச்சியடைந்த விநாயகர் அவர்கள் முன்பு பிரத்தியக்ஷமாகி மஹாவிஷ்ணுக்கு அவர் விரும்பிய வண்ணம் மஹாலக்ஷ்மி என்றும் அவரை விட்டுப்பிரியாத வரத்தை அருளிவிட்டு மறைந்தார். மஹாவிஷ்ணு விஸ்வர்கமாவை அழைத்து அங்கு ஒரு ஆலயம் நிர்மாணித்து அதில் வினாயகரைப் பிரதிஷ்டை செய்து அவருக்கு மாசிமாத சுக்லபக்ஷ சதுர்த்தியில் மஹோத்சவம் முதலியவைகளைச் செய்து சிறப்பித்து வைகுண்டம் ஏகினார். அன்று முதல் மகாவிஷ்ணுவிற்கு மஹாலக்ஷ்மியை விட்டுப் பிரிதல் என்பதே ஏற்படாமல் போனது.
விஸ்வரூபன் என்ற அந்தணச் சிறுவன் இளமைப் பிராயத்திலிருந்தே விஷ்ணுபக்தியில் சிறந்தவனாய் இருந்தான். தென்னாடு முழுவதையும் சுற்றி எல்லா விஷ்ணுக்ஷேத்திரங்களையும் தரிசித்துக் கொண்டு பூமி க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள வடரங்கத்தையும் சேவித்து விட்டுக் காழிச்சீராமவிண்ணகரத்தை நோக்கிச் செல்லுகையில் இந்த பூமீஸ்வரர் க்ஷேத்திரத்தை அடைந்தான். அங்கு கணேசமூர்த்திக்கு வடதிசையில் மஹாலக்ஷ்மியோடு கூடிய மஹாவிஷ்ணு இருப்பதாக அறிந்து அவர்களைச் சேவிப்பதற்காக அங்கு வந்தான். ஆனால் மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் உள்ள திருக்கோயில் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆகவே அவன் இந்த பூமிக்ஷேத்திரத்தில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் தனக்குத் தரிசனம் தரவேண்டும் என்ற பிரார்த்தனையோடு மஹாவிஷ்ணுவை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தான்.
அந்த விஸ்வரூபனின் ஸ்தோத்திரத்தினால் மகிழ்ச்சியடைந்த மஹாவிஷ்ணு அரூபமாக நின்று அந்த அந்தண சிறுவனை நோக்கி, பக்தனே! நீ இதுவரை நான் இருக்கின்ற பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று என்னைத் தரிசித்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீ இப்பொழுது இருந்து கொண்டு என்னைப் பிரார்த்திக்கும் இந்த பூமி தேசம் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு ஸ்தலம். இந்த இடத்தில் தான் நான் மஹாலக்ஷ்மியை விட்டுப் பிரியாமல் இருக்கும் அருள் பெற்றேன். ஆகையால் நீ இங்கேயே இருந்து கொண்டு என்னைத் தொடர்ந்து பூஜை செய்து கொண்டு வருவாயாக! நான் உனக்குக் கூடிய சீக்கிரமே வைகுண்டபதவியை அளிக்கிறேன். என்று கூறினார். விஸ்வரூபன் அந்த இடத்திலேயே தங்கி வெகுகாலம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் பூஜை செய்து வந்தான். ஒரு மாசிமாதம் சுக்லபக்ஷ ஏகாதசியில் வைகுண்டத்தில் இருந்து ஒரு விமானம் விஸ்வரூபன் பூஜை செய்த அந்த பூமி ஸ்தலத்திற்கு வந்து அவனை ஸ்ரீவைகுண்டம் அழைத்துச்சென்றது.
கேரள தேசத்திலிருந்த ஹரிகிருஷ்ணன் என்ற விஷ்ணுபக்தன் தீர்த்தயாத்திரையாகப் பல க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்து விட்டு பூமி க்ஷேத்திரத்திற்கு அருகிலுள்ள வடரங்கம் வந்து அங்கு மஹா விஷ்ணுவைச் சேவித்து விட்டுத் தில்லை கோவிந்த ராஜப்பெருமாளைக் காண்பதற்காக பூமிஸ்தலம் வழியாக வந்தான் அப்பொழுது ஓநாய்கள் கூட்டமாக வந்து அவனை வழிமறித்தன. ஹரிகிருஷ்ணன் உடனே தன் குலதெய்வமான ஸ்ரீசாஸ்தாவைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தான். ஹரிகிருஷ்ணனின் பிரார்த்தனையைக் கேட்ட ஸ்ரீசாஸ்தா தன் கையில் உள்ள சூலாயுதத்தை அனுப்பி வைத்து ஓநாய்கள் கூட்டத்தை அழித்தார். பின்பு தன் பக்தனுக்காக பூர்ணா, புஷ்கலாவுடன் சேர்ந்து தன்னுடைய தரிசனத்தை அளித்தார்.
தன் குலதெய்வத்தை நேரில் தரிசித்தஹரிகிருஷ்ணன் ஸ்ரீசாஸ்தாவை வணங்கி இந்த ஸ்தலத்தில் எனக்குக் காட்சியளித்த நீங்கள் இனி என்றும் இங்கேயே இருந்துகொண்டு எல்லா பக்தர்களுக்கும் அருள் வழங்க வேண்டும் என்று வேண்டினான். ஸ்ரீசாஸ்தா தன்பக்தனிடம் நீ என்னுடைய விக்கிரகத்தை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய். அதில்நான வந்து ஆவாஹனம் ஆகி எல்லோருக்கும் அருள்புரிவேன் என்று சொல்லி மறைந்தார். ஹரிகிருஷ்ணனும் ஸ்ரீசக்கரதீர்த்தத்தின் வாயுதிக்கில் (வடமேற்கு) பூர்ணா, புஷ்கலாவுடன் கூடிய ஸ்ரீசாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். பிறகு சிதம்பரம் சென்று ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டு சிறிதுகாலம் அங்கிருந்து, பின்பு பரமபதம் சென்றடைந்தான்.
அயோத்தி அரசனான தசரதனின் புத்திரன் ஸ்ரீராமன் தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தன் மனைவி சீதாவோடும், தம்பி லஷ்மணனோடும் பதினான்கு வருஷங்கள் வனவாசம் செய்வதற்காகக் காட்டுக்குப் புறப்பட்டான். தண்டகாரண்யம் என்ற இடத்தில் அகஸ்திய மாமுநிவரும் ஸ்ரீராமனைச் சந்தித்தார். ஸ்ரீராமன் அகஸ்தியரிடம், ஸ்வாமி! ஒரு விகார ரூபிணியான ஸ்திரியின் முகம் அடிக்கடி என் கண்களில் நிழலாடுகிறது. அதன் காரணம் என்ன? என்று கேட்க அகஸ்தியர். ஸ்ரீராமா! நீ மகரிஷி விஸ்வாமித்திரர் யாகத்தைக் காப்பாற்றுவதற்காகச் சென்றிருந்த சமயத்தில் தாடகை என்ற அரக்கியை வதம் செய்தாய். அந்த ஸ்திரிஹத்திதோஷம் உன்னைப்பீடிபீ த்துள்ளது. அதைப் போக்கிக்கொள்ள நீ சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய் நீ இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதை இறைவனே உனக்கு வெகு சீக்கிரத்தில் உணர்த்துவார் என்று கூறினார். ஸ்ரீராமர் பல இடங்களில் தீர்த்தயாத்திரை செய்துவிட்டு பூமிக்ஷேத்திரம் என்ற இடத்தை வந்தடைந்த போது வானத்தில் அசரீரி, ஸ்ரீராமா! நீ இந்த இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்தால் உன்னைப் பிடித்திருக்கின்ற ஸ்திரிஹத்திதோஷம் விலகும் என்று கூறிற்று. உடனே ஸ்ரீராமன் இந்த பூமிக்ஷேத்திரத்தில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதைப் பூஜை செய்து தன் ஸ்திரிஹத்திதோஷம் நீங்கப்பெற்றார்.
திருவண்ணாமலையில் சந்திரசூடன் என்ற மன்னன் இருந்தான். அவன் மகன் மாறுவேடமிட்டு நகர் சோதனை செய்து கொண்டிருந்த போது ஒரு முரடன் சில ஜனங்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்ததைக் கண்டான். உடனே அரச குமாரன் அவனைக்கொன்றான். அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக அவன் இந்த பூமிக்ஷேத்திரம் வந்து இறைவனை வணங்கி பிரம்மஹத்திதோஷம் விலகப் பெற்றான்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீதரன் என்ற பிராமணச்சிறுவன் வறுமையில் வாடித் திருட்டுத் தொழில் செய்யவாரம்பித்தான். ஒரு சமயத்தில் அவன் ஒரு யோகியைச் சந்தித்தபோது அவன் அவனிடம் ஒரு போதும் பொய்சொல்ல மாட்டேன் என்ற சத்தியம் செய்துவாங்கிக் கொண்டார். ஒரு நாள் அவன் அரண்மனையில் திருடச் சென்ற சமயத்தில் காவலர்களால் பிடிக்கப்பட்டு அரசனின் முன்பு விசாரனைக்காக நிறுத்தப்பட்டான். அப்போது அவன் சத்தியத்தின் பால்கொண்டிருந்த உறுதியைக் கண்டு வியந்து அவனை மந்திரியாக்க எண்ணினான். ஆனால் ஸ்ரீதரன். நான் திருட்டு தோஷம் உள்ளவன். முதலில் அந்த தோஷத்தைப் போக்கிவிட்டு வருகிறேன். பின்பு மந்திரி பதவியை ஏற்கிறேன் என்று கூறி ஸ்தலயாத்திரையைத் தொடங்கினான். வழியில் அவன் இந்த பூமிக்ஷேத்திரம் வந்தடைந்தான். அப்பொழுது வானத்தில் ஒரு அசரீரி உண்டாயிற்று. ஏ பக்தா! நீ இந்த க்ஷேத்திரத்தை அடைந்த மாத்திரத்தில் உன்னைப் பற்றி இருந்த பாவங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகி நீ பரிசுத்தமானவனாக ஆகிவிட்டாய். ஆகையால் நீ உடனே உன் ஊருக்குச் சென்று மந்திரி பதவியை ஏற்று நாட்டு மக்களுக்குச் சேவை செய் என்று கூறிற்று. ஸ்ரீதரனும் இறைவனைப் பூஜித்துப் பின்பு காஞ்சி சென்று மந்திரி பதவியில் அமர்ந்தான்.
மகாபாரதம் நடந்து கொண்டிருந்த போது தர்மர், கண்ணன் கூறியபடி அசுவத்தாமா என்ற யானை இறந்தான் என்று கூறினார். ஆனால் அந்த ஒரு கூற்று துரோணர் இறக்கக் காரணமாக அமைந்ததால் பொய்பேசிய பாவம் அவரைப் பீடிபீ த்தது. அதன் காரணமாகப் பூமியைவிட்டு ஒரு அடி உயரத்தில் எப்போதும் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அவரது தேர் பூமியில் இறங்கி மண்ணின் மேல் செல்ல ஆரம்பித்தது. இந்தப் பாவத்தைப் போக்க என்ன வழி என்று தர்மர் வியாசரைக் கேட்க, வியாசர் தர்மரைப் பூமிக்ஷேத்திரம் சென்று நீராடி இறைவனைத் தரிசித்தால் அந்தப்பாவம் போகும் என்று கூற, தர்மர் இந்த பூமி க்ஷேத்திரம் வந்து ஸ்ரீ பூமீஸ்வரரை வணங்கித் தன் பாவம் நீங்கப் பெற்றார்.
காவேரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த போது சங்கமன் என்ற அரசன் இந்த பூமிஸ்தலத்திற்குப் பல திருப்பணிகள செய்தான் என்பது ஒரு சில சரித்திரக் குறிப்புகள் மூலம் நமக்குத் தெரியவருகிறது.
திருவிழாக்கள்:
சிவ சம்பந்தமான அனைத்து விழாக்களும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி