Sunday Nov 24, 2024

குத்துக்கல் வலசை ராமன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு ராமன் திருக்கோயில்,

குத்துக்கல் வலசை,

திருநெல்வேலி மாவட்டம் – 627803.

இறைவன்:

ராமன்

அறிமுகம்:

       தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகிலுள்ள குத்துக்கல் வலசை கிராமத்தில் அமைந்துள்ள வளர்மலை ராமர் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பாறை மற்றும் இயற்கை சூழலைக் கொண்டது இந்த கிராமம். குத்துக்கல் (பாறை) எனப்படும் அசாதாரண பாறை உருவாக்கம் குத்துக்கல் வலசையிலிருந்து திருமலைக்கோவில் கோவில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

குத்துக்கல் வலசை கிராமம் தென்காசி – மதுரை நெடுஞ்சாலையில் 4வது கிலோமீட்டரில் நான்கு சாலை சந்திப்பில் உள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்கே 1 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது. குத்துக்கல் வலசை தென்காசியில் இருந்து சுமார் 4 கிமீ, குற்றாலத்தில் இருந்து 9 கிமீ, திருநெல்வேலியில் இருந்து 65 கிமீ, தூத்துக்குடியில் இருந்து 112 கிமீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தென்காசியில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் தூத்துக்குடி, திருவனந்தபுரம் மற்றும் மதுரை.

புராண முக்கியத்துவம் :

ராமபிரான் சீதாபிராட்டியாரோடு இங்கு வந்து தங்கினார். அதை நினைவூட்டும் வகையில் தனது வில், அம்புகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். அப்போது அவர் வந்தமர்ந்த பகுதி-வளமலைக் குன்றுகளாய் அமைந்திருந்தது. ராமபிரானோடு இலக்குமணனும் வந்ததால் எங்களது மூதாதையர் இலக்குமணனின் சிலையையும் சேர்த்து ஆலயம் அமைத்ததோடு… ராமர் வந்தமர்ந்த வளமலையின் பெயரும் நீடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாலயத்துக்கு வளமலை ராமபிரான் ஆலயம் என்ற சிறப்புப் பெயரையும் வைத்தார்கள்.

நம்பிக்கைகள்:

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

                  இயற்கையிலேயே ராமரின் பாதம் பட்டதால் இந்த இளமலைப் பாறையின் பக்கம் சுனை ஒன்று உள்ளது. கோடையிலும் வற்றாத தண்ணீரையும் தித்திக்கும் தன்மையையும் கொண்ட சுனை அது. முந்தைய காலங்களில் மக்களின் வாழ்க்கைக்கும், குடிநீருக்கும் ஆதாரமாகவே இந்த சுனை இருந்திருக்கிறது. பெருமானின் அருளால் அந்தப் பகுதி பசுஞ்சோலையாய்க் காட்சி தருவதோடு, அதனை ஒட்டியுள்ள வயல்களில் நல்ல விளைச்சல் உள்ளது. தேங்காயை உடைத்துப் பிளந்ததைப் போன்று பிளவுபட்டு நிற்கும் இந்தப் பாறையை ஒட்டித்தான் ராமரின் ஆலய மூலஸ்தானம் அமையப் பெற்றுள்ளது. குன்றுகளைப்போல உள்ள இந்தப் பாறைகளில் ரிஷிகள் அடங்கியுள்ளார்கள். காசி, சிவகாசி, தென்காசி என வந்த ராமபிரான், கடைசியாக இங்கு வந்தபோதுதான் இந்த இளமலைப் பக்கம் வந்து அமர்ந்தார். அவரைத் தியானித்து ரிஷிகள் தவம் மேற்கொண்டார்கள். அதனை நினைவுறுத்துவதுதான் இந்தப் பாறைகள்.

அதோடு காவடி மடம் என்று ஒன்று இதனடியில் அமைந்திருக்கிறது. முந்தைய காலங்களில் ஊருக்குள் மக்களிடம் உணவு வாங்கி வரும் அன்னக்காவடிகள், இந்த மடத்தில்தான் வந்து தவம் செய்வது வழக்கம். ராமபிரான் பாதம்பட்ட இந்த மண்ணில் அவர்கள் தங்கும்போது, அவர்களின் உடல்நோயும் தீர்ந்து சுகப்பட்டிருக்கிறார்கள். அன்னக்காவடிகளைப் பின்பற்றியே அப்போதைய காலங்களில் உடல் நலமில்லாதவர்கள் இங்கே வந்து தங்கி குணமாகிச் சென்றிருக்கிறார்கள். ராமபிரானின் பாதம்பட்ட இந்த மண்ணின் தனிச்சிறப்பு அது. அடிப்பகுதி சரிந்து விடுமோ என்று மயிர்க்கூச்செறியும்படி, சிறிய பிடிமானத்தின்மீது, ஓங்கி உயர்ந்து நிற்கும் தடிமனான உயர்ந்த பாறை ஒன்று, ராமபிரானை நோக்கி காலம் காலமாய் நிற்கிறது. ஒற்றைக் காலில் கடும் தவம் மேற்கொள்பவரின் தன்மையை வெளிப்படுத்தும் அந்த ஒற்றைப் பாறை, ராமபிரானை நோக்கித் தவம் செய்வதைப் போன்று மோன நிலையிலிருப்பது பார்ப்பவர்களை சிலிர்க்க வைப்பதோடு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தவநிலையில், குத்துக்கல்லைப் போன்று இந்தப் பெரும் பாறை நிற்பதால் தான் குத்துக்கல் வலசை என்ற பெயர் ஏற்பட்டது.

திருவிழாக்கள்:

ராம நவமி, அனுமன் ஜெயந்தி

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குத்துக்கல் வலசை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி, திருவனந்தபுரம் மற்றும் மதுரை.

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top