Wednesday Dec 18, 2024

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில், தேனி

முகவரி

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம் – 625 515. போன்: +91- 4554 247 285, 97895 27068, 94420 22281

இறைவன்

இறைவன்: சனீஸ்வரர்

அறிமுகம்

வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான். சனீஸ்வர பகவான் வனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக் கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று. அதன் பிறகு, சனி தோஷம் பிடித்துத் துன்பப்படும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுத் துன்பம் நீங்கிச் செல்கின்றனர். புராண வரலாறு: வர்க்கலா தேவியும் சாயா தேவியும் சூரியனின் மனைவியான சுவர்க்கலா தேவிக்கென்று சிவசக்தி இருந்தது. தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க தன் நிழலையே தன்னைப் போன்ற ஒரு பெண்ணாக மாற்றி சாயாதேவி என்று பெயர் சூட்டினார். பின்னர் சுவர்க்கலா தேவி சாயா தேவியை நோக்கி நான் சூரிய பகவானுடன் இல்லறம் நடத்தும் சக்தியை இழந்து விட்டேன். மீண்டும் அச்சக்தியைப் பெற கானகம் வந்துள்ளேன். எனவே, சூரியனுக்கு என்னைப் போலவே மனைவியாக இருந்து என் குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வரவேண்டும் என்று ஆணையிட்டாள். அவள் வேண்டுகோளை ஏற்று சூரியனுக்கு மனைவியாகப் புறப்படும் முன் தங்கள் சொற்படியே நடக்கின்றேன்’, ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை’த்தவிர வேறு வழியில்லை என்றாள். அதற்கு சுவர்க்கதேவி உடன்பட்டாள். சுவர்க்கதேவி தன்னை யார் என்று அறியா வண்ணம் குதிரை வடிவு கொண்டு தவம் செய்யத் தொடங்கினாள், அங்கே சாயாதேவி சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த ஆரம்பித்ததில் அப்பொழுது சூரியனுக்கு 1. கிருதத்வாசி 2. கிருதவர்மா என்று ஆண்பிள்ளைகளும், தபதி என்ற மகளும் பிறந்தனர். கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவான் ஆக மாறினார். தபதி சனீஸ்வரனின் சகோதரி ஆவார். இன்றும் தபதி நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். சூரியனும் சனியும்: சனிபகவான் கருமை நிறம் உடையவன். சனிபகவான் செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிரிடையாக இருப்பதாலும் தந்தை மகன் சனியுடன் காழ்ப்புணர்வு கொண்டு பகையுணர்வு ஏற்பட்டது. சனிபகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலை அடைய வேண்டுமென்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்குச் சென்றார். சனீஸ்வரன் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து கடுமையாகப் பல ஆண்டுகள் தவம் செய்தார். அவர் முனைப்பான பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் சிவபெருமான் பார்வதியுடன் காட்சி அளித்தார். அப்போது சிவபெருமான் சனிபகவானை நோக்கி உமக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். எனக்கு தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும் என்றார். உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்று விட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும் பலசாலியாகவும் ஆகவேண்டும் என்று கேட்டார் சனிபகவான். இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு கொடுத்து அருள் செய்ய வேண்டும் என்றார். அவர் வேண்டுகோளை ஈஸ்வரன் ஏற்றதால் சனீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். பெயர் பெற்று விட்டால் போதுமா? நவக்கிரகங்களில் தான் அதிக பலத்துடன் இருக்க வேண்டும், அத்துடன் தன் பார்வைபட்டால் எல்லாப் பலமும் இழந்துவிட வேண்டும் என்றும் வரம் கேட்டார். முழுமுதல் கடவுள் சிவபெருமான் சனிபகவான் வேண்டுகோளை மீண்டும் ஏற்றார். அன்றுமுதல், நவக்கிரகங்களில் அதிக பலத்தையும் விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளானார் சனிபகவான். மாந்தி – குளிகை: சனிபகவானுடைய புதல்வர்கள் மாந்தி, குளிகை என இருவரும் ஒருவரே! எமகண்டம், இராகுகாலம் போல குளிகை காலங்களில் எல்லா தீயதேவதைகளும் குளிகை நேரத்தில் நிலவுலகில் பிரவேசிக்கும். அக்காலங்களில் நல்ல காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. சனிபகவான் போல் ஆற்றல் இவருக்கும் உண்டு. எமதர்மனுடைய தனிச்செயலர் என்றும் இவரைக் கூறுவார்கள்.

நம்பிக்கைகள்

சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு. காகத்திற்கு முதல்மரியாதை நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்தபின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர். தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும். இது மிகவும் சிறப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்தது என எள் பொங்கலும் வைக்கப்படும்.

திருவிழாக்கள்

5 வார ஆடிப் பெருந்திருவிழா இரண்டரை வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர். ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மூன்றாம் சனிக்கிழமை மிகவும் பிரசித்தமாகும். அன்று கம்பளத்தார் மேல்ப்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோவிலில் சிறப்பு பூஜை செய்வார்கள். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆளுகைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குச்சனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை, தேனி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top