கீழ ஆம்பூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,
கீழ ஆம்பூர்,
திருநெல்வேலி மாவட்டம் – 627418.
போன்: +91 98946 48170, 94420 27013, 99420 16043.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
விசாலாக்ஷி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள கீழ ஆம்பூர் (சிநேகபுரி) அன்பு நகரில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரம்.
அம்பாசமுத்திரம் தென்காசியிலிருந்து 37 கிமீ, வீரவநல்லூரில் இருந்து 12 கிமீ, திருநெல்வேலியிலிருந்து 47 கிமீ, மதுரையிலிருந்து 206 கிமீ, திருவனந்தபுரத்திலிருந்து 143 கிமீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
கீழஆம்பூரைச் சேர்ந்த காசிவிஸ்வநாத பிள்ளை, விசாலாட்சி தம்பதியின் மகன் மதனராஜன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜாங்கம் மற்றும் பாண்டித்துரை உட்பட எட்டு ஆண்களும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். நாளடைவில் ராஜாங்கமும், பாண்டிதுரையும் வசதி வாய்ப்பை இழந்து, திரிசூல மலையில் விறகு வெட்டி குடும்பம் கழித்தனர். ஒரு ஆவணி மாதத்தில் விறகு வெட்டச் சென்றவர்கள், அத்தியூத்து கரை அருகிலுள்ள ஆலமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. வருத்தப்பட்ட சகோதரர்கள், நம்முன்னோர் காசி சென்று தானம், தர்மம் செய்தனர், ஆனால் நாம் மழையில் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்காதா? என்று சிவபெருமானை வேண்டினர். அந்நேரத்தில் ஆலமரம் சாய்ந்து பூமி அதிர்ந்தது. ஆனால், அந்த இடத்தில், சலங்கை ஒலி ஒலிக்க, பூமியிலிருந்து மேல் நோக்கி ஒரு சிவலிங்கம் வந்தது. மின்னல் ஒளி லிங்கத்தின் மேல் விழுந்தது. லிங்கத்திலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சகோதரர்களுக்கு காட்சி அளித்தனர். உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், தைரியமாக இருங்கள், என்று கூறி மறைந்தனர். உடனே ஏழு செப்பு அண்டாக்கள் பூமியிலிருந்து மேலே வந்தன. அவற்றில் பொற்காசுகள் இருந்தன. பொற்காசுகளுடன் சிவலிங்கத்தையும் ஊருக்கு கொண்டு வந்து கோயில் கட்டி வழிபட்டனர். முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.
நம்பிக்கைகள்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து காப்பதாக நம்பிக்கையுள்ளது.
திருவிழாக்கள்:
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழ ஆம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை மற்றும் திருவனந்தபுரம்