கீழவிடையல் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கீழவிடையல் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில்,
கீழவிடையல், வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612601.
இறைவன்:
சிதம்பரேஸ்வரர்
இறைவி:
சிவகாமசுந்தரி
அறிமுகம்:
வலங்கைமானில் இருந்து குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி 5 கிமீ தூரம் பயணித்தால் கீழவிடையல் கிராமத்தை அடையலாம். கீழவிடையல் கிராமம், பல தமிழ் சமஸ்கிருத புலமை கொண்டவர்களை பெற்றது. சிறிய ஊர் தான் இரண்டு மூன்று தெருக்கள். வடக்கில் குடமுருட்டி ஆறு, அக்காலத்தில் குடமுருட்டியில் நீர் ஓடும்போது கிணற்றில் கையால் நீரை மொண்டு எடுக்கலாம். பெரியதாக இரு குளங்கள், மேற்கில் உள்ள குளக்கரையில் மேற்கு நோக்கிய சிவாலயம். சோழநாட்டு கருங்கல் கட்டுமானத்துடன் கம்பீரமாக நிற்கிறது. உயர்ந்து நிற்கும் கோட்டை சுவர் போல் மதில்கள், ஒவ்வொரு சிலைகளும் அப்படியொரு அழகு!!
புராண முக்கியத்துவம் :
இறைவன் சிதம்பரேஸ்வரர் கருவறை விசாலமாக காட்சியளிக்கிறது. கருவறை ஒட்டியபடி அர்த்த மண்டபம் உள்ளது. இறைவனின் முகப்பில் ஒரு உயர்ந்த சிமென்ட் மண்டபம் நீண்டு நிற்கிறது. அதன் வெளியில் ஒரு சிறிய மண்டபத்தில் காட்சி தருகிறார் நந்தியெம்பெருமான். தெற்கு நோக்கி சிவகாமசுந்தரி தனி கோயில் கொண்டுள்ளார். அதிட்டான அளவு வரை கருங்கல்லும் அதற்குமேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இறைவனும் இறைவியும் சற்றே பெரிய அளவிலான மூர்த்திகளாக உள்ளனர். கருவறை சுற்றில் முதலில் வடக்கு நோக்கிய துர்க்கை அன்பே உருவாய் மெல்லிய புன்னகையுடன் சாந்தரூபிணியாக கையில் சங்கும் சக்கரமும் ஏந்தி விஷ்ணு அம்சத்துடன் உள்ளார். அடுத்து பிரம்மன் வடக்கு நோக்கியுள்ளார். கருவறை பின்புறம் ரிஷபத்துடன் அர்த்தநாரீஸ்வரர், வாஞ்சையுடன் தடவி கொடுக்கும் இறைவனின் கையை நாக்கை நீட்டி நக்க பார்க்கிறது. தென்புறம் மெலிதான புன்முறுவல் காட்டுகிறார் தக்ஷ்ணமூர்த்தி, அடுத்து நர்தன விநாயகர் கோட்டம். பல கல்வெட்டுக்கள் தகவலின்றி உள்ளன. கருவறை சுற்றி அகழி அமைப்பு உள்ளது. குடமுருட்டியில் நீர் வரும்போது அகழியமைப்பில் நீர் நிரம்பி இருக்கும், அதன் ஓரத்தில் வைத்திருக்கும் அகல்விளக்கின் தீபஒளி அலையும் நீரில் பட்டு கருவறை புறசுவர்களில் ஒளி தீற்றல்கள் அதி அற்புதமாக இருக்கும்.
தென்மேற்கு மூலையில் விநாயகர் அடுத்து ஒரு லிங்கம் உள்ளது வடமேற்கில் நீண்ட மண்டபம் உள்ளது அதில் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் அருகில் காலஸ்தினி அம்பிகையும் உள்ளனர். அடுத்து சுந்தரர் பரவையாருடன் உள்ளார். அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அதனை ஒட்டி ஜுரஹரேஸ்வர லிங்கமும் மகாலட்சுமியும் உள்ளனர். வடக்கில் ஒரு கிணறும், வடகிழக்கில் பைரவர், மற்றும் சூரியன் உள்ளனர். பிற கோயில்களினின்றும் அரிதினும் அரிதாக இங்கே நான்கு முகங்களுடன் பிரம்மசண்டேசர் உள்ளார், கிருதயுகத்தில் தான் நான்கு முக சண்டிகேசுவரர் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழவிடையல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி