கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவில், மதுரை
முகவரி :
கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவில்,
கீழமாத்தூர்,
மதுரை மாவட்டம் – 625234.
இறைவன்:
மணிகண்டேஸ்வரர்
இறைவி:
உமா மகேஸ்வரி
அறிமுகம்:
மதுரை மாநகரிலும் அதைச் சுற்றியிருக்கும் திருத்தலங்களும் சிவனாரின் திருவிளையாடல்களால் உருவானவை. திருஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு வென்று சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலங்கள் மதுரையில்தான் உள்ளன. மதுரையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் மேலக்கால் சாலையில், வைகை நதிக்கு அருகில் சாலையோரம் பிரமாண்ட மணியுடன் அமைந்துள்ளது கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம்.
புராண முக்கியத்துவம் :
சமணர்களுக்கும் ஞானசம்பந்தருக்கும் அனல்வாதம் புனல்வாதம் நடைபெற்றன. வைகை ஆற்றில் ஞானசம்பந்தரின் ஏடு விடப்பட்டது. அந்த ஏடு ஆற்றின் போக்கில் பயணப்படாமல் எதிர்த்திசையில் பயணப்பட ஆரம்பித்தது.
அப்போது கீழமாத்தூர் கிராமத்தின் அருகே ஏடு ஆற்றில் சென்றபோது, பலத்த ஓசையுடன் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு வியந்த மன்னனும் திருஞான சம்பந்தரும் அந்தத் தலத்திற்குச் சென்றனர். அப்போது குடில் அமைக்க வேலை ஆட்கள் மண்ணைத் தோண்டும் போது முதல் தோண்டலில் மண் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பறந்துள்ளது.
இரண்டாம் முறையும் தோண்டிய போது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டும்போது, அது சுயம்புவாக உள்ளே இருந்த லிங்கத்தின் மீது விழுந்தது. உடனே ரத்தம் பெருகியது. இந்த அதிசயத்தைக் கண்டு மண்ணைக் கவனமாய் தோண்டியபோது உள்ளே இறைவன் லிங்கவடிவில் இருப்பதைக் கண்டனர்.
அந்தத் திருக்காட்சியைக் கண்ட ஞானசம்பந்தர், மெய் மறந்து பாடல் ஒன்றைப் பாடித் துதித்துள்ளார். சிலையை அங்கிருந்து தூக்க முடியாமல் இருக்கவே, இறைவனின் சித்தம் அங்கே கோயில்கொள்வதுதான் என்பதை உணர்ந்த மன்னன், அங்கே ஈசனுக்கு ஒரு கற்கோயிலைக் கட்டினான். அன்று முதல் இன்றுவரை அனைவருக்கும் ஈசன் அங்கிருந்து அருள்பாலிக்கிறார்.
நம்பிக்கைகள்:
இந்த ஆலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக இருந்துவருகிறது. இந்தக் கோயிலில் மணி சப்தத்தைக் கேட்டபிறகு குருவிடம் இசையைக் கற்க ஆரம்பித்தால், தூய்மையான இசை ஞானத்தைப் பெறலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை. பல ஆண்டுகளுக்கு முன், இந்தத் தலத்தில் மிகபிரமாண்டமாக வீணை இசைப்போட்டிகள் நடைபெற்றதாகவும் கூறுகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
இங்கு ஈசனின் திருநாமம் மணிகண்டேஸ்வரர் என்பது. இறைவியோ இங்கே உமா மகேஸ்வரியாக இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு, ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்கபெருமாள், நவகிரகம், பைரவர், கருடர், ஆஞ்சநேயர், பிரம்மா விஷ்ணு லிங்கோத்பவர், தட்சிணா மூர்த்தி, காசி விசாலாட்சி உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளன.
இசைக்கலைஞர்கள், தங்களின் அரங்கேற்றம் மற்றும் கச்சேரிகளுக்கு முன்பாக மணிகண்டேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், அவர்களுக்குக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் வெற்றி கிடைக்கிறது. திருஞானசம்பந்தர், இந்தத் தலத்தில் பாடிய பதிகங்கள், கல்வி ஞானத்தை அருள்பவை. அவற்றை இங்கு ஈசனின் சந்நிதி முன்பு நின்று சொல்ல கல்வியில் மேன்மையுண்டாகும் .
சிவபெருமான் ‘மணிகண்டேஸ்வரர்’ என்ற பெயரில் சுயம்பு லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி யோகவடிவில் அமர்ந்திருக்கிறார். இங்குள்ள லிங்கோத்பவரின் அமைப்பு, மிகவும் மாறுபட்ட வகையில் அமைந்துள்ளது. லிங்கோத்பவர் அருகிலேயே விஷ்ணுவும், பிரம்மாவும் தோன்றுகின்றனர். சிவபுராணக் காட்சிகளும் காணப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழமாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை