கீரிமலை நகுலேஸ்வரம் கோவில், இலங்கை
முகவரி
கீரிமலை நகுலேஸ்வரம் கோவில், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், இலங்கை தொலைபேசி: +94 217 900 470
இறைவன்
இறைவன்: நகுலேஸ்வரர் இறைவி : நகுலாம்பிகை
அறிமுகம்
நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை. முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது. இத்தலத்தின் சிறப்பே தீர்த்தம் தான். பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள், இம்மண்ணில் விழ, அது புனித தீர்த்தமானது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். கீரிமலைத் தீர்த்தம், கண்டகித் தீர்த்தம், சாகர தீர்த்தம் என பலவாறு இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. நகுலமுனிவர் கீரி முகம் நீங்கியது, சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்கியது என பெருமை வாய்ந்த தீர்த்தம் இது. மாசிமகம், மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள், மாவைக்கந்தன் எழுந்தருள்வார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆலயம் கிழக்கு முகமாய் நான்கு மாட வீதிகளைக் கொண்டும், மூன்று பிரகாரங்களைக் கொண்டும் விளங்குகின்றது. 117 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம் 9 கலசங்களைத் தாங்கி, விண்ணை முட்டி நிற்கிறது. ஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் நம்மை வரவேற்க, ஈசான்ய மூலையில் சித்தர் மூலம் உருவான சகஸ்ரலிங்கம் மற்றும் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் வசந்த மண்டபம் மற்றும் துர்க்கை சன்னிதி உள்ளன. கருவறையில் இலங்கையின் பெரிய சிவலிங்கத் திருமேனியராக ஐந்தரை அடி உயர நகுலேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அருளுகிறார். கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர் அமர்ந்துள்ளனர். சண்டிகேஸ்வரர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். தெற்கு வாசலில் அன்னை நகுலாம்பிகை அம்பாள், நின்ற கோலத்தில் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் கொண்டும் அருள்காட்சி தருகின்றாள். பஞ்சலிங்கம், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, சரபேஸ்வரர், மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதிகளும் அமைந்துள்ளன. உள்பிரகாரத்தில் உற்சவமூர்த்திகள் அறை அமைந் துள்ளது. இதில் விநாயகர், பிரதோஷ மூர்த்தி, இலங்கையின் பெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் தனி அறையிலும், வழக்கத்திற்கு மாறாக கூப்பிய செஞ்சடையோடு காட்சிதரும் அபூர்வ நடராஜர் மகா மண்டபத்தின் தனிச்சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர்.
நம்பிக்கைகள்
இத்தலம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே வந்து தலத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு சென்றால், அனைத்துவித தோஷங்களும் நீங்கி பலன் பெறலாம். இந்நாட்டில் உள்ள சிங்களவர்களும் வந்து செல்வது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதேபோல, சனிக்கிழமைகளில் நீராடி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. சனிதோஷம் நீங்க, காலசர்ப்பதோஷம் நீங்க, பித்ருக்கள் சாபம் நீங்க, தீர்த்தமாடி வழிபடுவது நல்ல பலனைத் தரும். மகப்பேறு பெற உகந்த தலம் இது. குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தத்து கொடுத்து, பின் காணிக்கை செலுத்தி குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது. எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தி வருகின்றனர். அதன்பின் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை, நிறைவு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், வடமேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருகோணேச்சரம், மேற்கே புத்தளத்தில் முன்னேச்சுரம், தெற்கே மாத்துறையில் தொண்டீச்சரம் என ஐந்து சிவாலயங்கள், இலங்கை வேந்தன் ராவணனால் எழுப்பப்பட்டன. இதில் ஐந்தாவது தலம் கடலில் அமிழ்ந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நந்தி சிலை மட்டும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக, தெய்வத்துறையில் சந்திரலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
தமிழ்மாத முதல்நாள், வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆவணி மூலம், புரட்டாசி சனி, கார்த்திகை தீபம் மார்கழி திருப்பாவை, திருவெம்பாவை, திருவாதிரை, தைப்பொங்கல், தைப்பூசம் மாசி மகம், பங்குனி உத்திரம் என மாத திருவிழாக்கள்பட்டியல் நீண்டுள்ளது. இந்நாட்களில் சிறப்பு உற்சவங்கள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் சோமவார விழாக்கள் பிரசித்தி பெற்றவையாகும். குறிப்பாக கார்த்திகை மாதத்து நித்திய சோமவார விழாக்கள் சங்காபிஷேகத்துடன் நிறைவுபெறும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று எள் – எண்ணெய் எரித்து வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடுவர். நவகிரஹசாந்தியுடன் சுவாமி உள்வீதி வீ புறப்பாடும் நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காங்கேசன்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
யாழ்ப்பாணம்
அருகிலுள்ள விமான நிலையம்
யாழ்ப்பாணம்