கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்,
கிளாங்காடு,
திருநெல்வேலி மாவட்டம் – 627852.
இறைவன்:
ஜமதக்னீஸ்வரர்
இறைவி:
நல்ல மங்கை
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிளாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானம் ஜமதக்னீஸ்வரர் என்றும் அன்னை நல்ல மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தென்காசியிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 8 கி.மீ தொலைவில் கிளாங்காடு சிவன் கோவில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தென்காசியில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும் முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். விநாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல் திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான். மன்னனுக்கும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர். எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல் உரைத்தார் மாமுனிவர்.
நாடாளும் மன்னன் மனதில் சிலநச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான். முனிவர் ஜமதக்னியோ, அது தெய்வீகப் பசு… ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது, என்று மறுத்தார். அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு கண்ஜாடை காட்டினார். அவ்வளவுதான் தனது கொம்புகளை சுழட்டி சிலுப்பிய வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்த பின் மறைந்து போயிற்று. ஆயிரங்கைகள் கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்துவிட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம் வைத்தான். கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமத்னி முனிவர் சிவலிங்கத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எதிர்ப்பார்த்த சூழ்நிலை இயற்கையாய் கிடைக்க, வஞ்சம் வைத்த மன்னன் மாமுனியை சிரச்சேதம் செய்துவிட்டான். அப்போது அங்கு வந்த ரிஷிபத்தினியை இருபத்தொரு முறை வாளால் குத்திவிட்டு விரைந்தான். மகன் பரசுராமன் வரும்வரை தன் உயிரைத் தக்க வைக்குமாறு தெய்வத்தை வேண்டினார் ரிஷி பத்தினி, அதற்குள் பரிதவித்து வந்து சேர்ந்தான் பரசுராமன். நடந்ததையெல்லாம் மகனிடம் சொன்ன பின் உயிர் நீத்தார் ரேணுகாதேவி. ஈமச்சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் காளியாக அவதாரம் எடுத்த ரேணுகா தேவி. மகன் முன்தோன்றி அவனுக்கு மழு (கோடரி) ஆயுதம் தந்து மறைந்தாள். இருபத்தோரு தலைமுறைக்கு சத்திரிய வம்சத்தை கருவறுக்க சபதம் செய்தான் பரசுராமன். அதை நிறைவேற்றியபின், தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.
நம்பிக்கைகள்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவபெருமானை பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இந்த சிவாலயத்தின் ஈசானிய மூலையில், ரேணுகாதேவி தனியாக வீற்றிருக்கும் சன்னதி உள்ளது. கங்கையைத் திரட்டி வந்து ஜமதக்னி முனிவரின் பூஜைக்கு உதவியதால் கங்கைக்கு வாய்த்த அம்மன் என்ற காரணப் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தைக் காட்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் இவ்வழியாக குதிரையில் சென்றபொழுது கால் இடறி கீழே விழுந்த குதிரை எழுந்திருக்க மறுத்தது. அப்போது அசரீரியின் வாக்கு மன்னனுக்கு பூமியைத் தோண்டுமாறு கட்டளையிட உடனே தன் படைகளைப் பணித்தான் மன்னன் பராக்கிரமன். அப்படித் தோண்டிய போது தான் ஜமதக்னி முனிவரால் பூஜிக்கப்பட்ட இந்த சிவலிங்கம் கிடைத்தது. அதன் பலனாகவே இறைவனுக்கும் ஜமதக்னீஸ்வரர் எனவும் பெயரிட்டனர்.
திருவிழாக்கள்:
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கிளாங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம்