காரைக்கால் சோமநாதர் திருக்கோயில்
முகவரி :
காரைக்கால் சோமநாதர் திருக்கோயில்
காரைக்கால் மாவட்டம்,
காரைக்கால் வட்டம் – 609607.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
காரைக்காலின் பிரதான் சாலையோரம் கிழக்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் விநாயகர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயிலுடன் நீண்ட மண்டபம் கொண்டு விளங்குகிறது. உள்ளே நுழைந்தவுடன் நீண்ட கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளது. இறைவன் முன்னர் அர்த்தமண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கி அம்பிகையும் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் கஜபிருஷ்ட விமானம் கொண்டு விளங்குகிறது அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம், மகாலட்சுமி சிற்றாலயமும் அமைந்துள்ளது. , கருவறையின் நேர் பின் புறம் மேற்கு திக்கு திருவாயில் அமைந்துள்ளது, வடக்கில் பெரிய வில்வமரம் காய்த்து நிற்கிறது. கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர்.
சந்திரன் இங்கு தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இது சிறிய அழகான கோயில். இவரே இக்கோயிலின் மூலவர். இங்குள்ள சிவனின் திருநாமம் சோமநாதர். அம்பிகை ஆனந்தவல்லி இக்கோயிலில் ஆனி மாதத்தில் நடக்கும் “மாங்கனி அழைத்தல்” திருவிழா மிகவும் பிரசித்தம். இம்மாத பவுர்ணமியன்று சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர். மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது.
அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும். பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும். அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள். பங்குனியிலும் அம்மையார் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
புராண முக்கியத்துவம் :
சந்திரன் பேரழகோடு பூலோகத்தை வலம் வருவது வழக்கம், பூலோகத்தின் மீது மெதுவாய் படர்ந்து, தன் அமுதமான கிரணங்களை தவழ விடுவான். அவன் கிரணங்களுக்கேற்ப மன ஓட்டம், கூடி, குறைந்து வெவ்வேறு விதமாய் சிந்தித்தது. அதனால் மனோகாரகன் என்று ஜோதிடத்தில் தனி இடம் பிடித்தான். தட்சனின் இருபத்தேழு பெண்களும் வானுலகில் வண்ணமயமான நட்சத்திரங்களாய் ஒளிர்ந்தார்கள். சந்திரனின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவனைப் பார்த்து முகம் மலர்ந்தார்கள், சந்திரனை திருமணம் செய்து கொள்ள தவமிருந்தார்கள். அதைக் கண்ட தட்சன் இருபத்தேழு பெண்களையும் அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தான். ஆனால், சந்திரன் ரோகிணியை மட்டும் நன்றாக கவனித்து கொண்டான். அதனால் அவர்கள் குன்றிப்போனார்கள். தட்சன் விஷயம் கேட்டு ‘‘உன் அழகு குறித்து உனக்கு இவ்வளவு கர்வமா? அப்படிப்பட்ட உன் அழகு குலையட்டும்.’’ என்று கடுமையாய் சபித்தான். சந்திரன் எனும் சோமன் தன் சோபையை இழந்தான். தன் ஒளி மங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்காக சிவனை பூஜித்தான், சந்திரன். சிவனும் காட்சி தந்தார். “தட்சன் சாபம் இட்டது இட்டதுதான். ஆகவே, நீ முற்றிலும் தேயாது, தேய்வதும் மறைவதுமாக ஒரு வட்ட சுழற்சியில் வா. அதுவும் உலக உயிர்களுக்கு நன்மை புரியட்டும்’’ என்று அருளினார். அதனாலேயே அவன் வழிபட்ட இங்குள்ள ஈசனுக்கு சோமநாதர் என்று பெயர். அம்பிகை, ஆனந்தவல்லி எனும் நாமத்தோடு காட்சியருள்கிறார்.
காலம்
1800 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி