Saturday Nov 16, 2024

காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில், சென்னை

முகவரி :

காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில்,

பழைய மகாபலிபுரம் சாலை,

காரப்பாக்கம்,

சென்னை – 97.

இறைவி:

கங்கையம்மன்

அறிமுகம்:

சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொருகாலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி. ஏராளமான விவசாயிகள் வாழ்ந்த பகுதி. அன்று அவர்களுக்கு அருளவே “கங்கை அம்மன்’’ இங்கு (காரப்பாக்கம்) கோயில் கொண்டாள்.

புராண முக்கியத்துவம் :

 கபில முனிவர், இறைவனை வேண்டி கடும் தவமிருக்க, கங்கையிலிருந்து கமண்டலத்தில் தண்ணீரை எடுத்து வரும் பொழுது, கால் இடறி, கையில் இருந்த கமண்டலம் கீழே விழுந்துவிடுகிறது. அதினுள் இருந்த கங்கை நீர் சிதறின. சிதறிய நீரில், சுயம்பு வடிவ கங்கை அம்மன் தோன்றினாள். எஞ்சிய நீர், திருக்குளமாக மாறியது. அந்த திருக்குளம், வற்றாத குளமாக இன்றும் இருப்பது ஆச்சரியம். தோன்றிய சுயம்பு அம்மன், ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக பனைஓலையால் செய்த கொட்டகையில், வேப்ப மரத்தடியில் பக்தர்களுக்கு கங்கை அம்மனாக அருள்பாலிக்கத் தொடங்கினாள்.

குறிப்பாக, இந்த பகுதி விவசாயம் செய்யும் பகுதி என்பதால், விவசாயினர்களுக்கு அருளினாள் கங்கை அம்மன். ஆகையால், விவசாயிகள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். அதன் பிறகு, காரப்பாக்கத்தில் வசித்து வரும் லியோ சுந்தரம் என்பவர், 30 வருடங்களுக்கு முன்பு கோயில் கட்ட முடிவு செய்தார். சுயம்பு வடிவாக இருக்கும் கங்கையம்மனுடன், இன்னொரு கங்கை அம்மனை பிரதிஷ்டை செய்தார். அன்றிலிருந்து இவ்வாலயம் பிரசித்தி பெற தொடங்கியது.

சுமார், 8 ஆண்டுகளுக்கு முன்பு, 5 நிலை ராஜகோபுரங்களை கட்டி, பெரிய ஆலயமாக அமைத்து, அதில் மீண்டும் ஒரு கங்கை அம்மனை பிரதிஷ்டை செய்தார். ஆக, பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவமாக தோன்றிய கங்கை அம்மன், 30 வருடங்களுக்கு முன்பு அமைத்த கங்கையம்மன், மற்றும் 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கங்கை அம்மன் என மூன்று கங்கை அம்மன்கள் இருந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.

நம்பிக்கைகள்:

 கல்யாணம் சித்தி, வெளிநாட்டு வேலை, ஆகியவற்றுக்கு வட மாலை சாற்றி வேண்டி வழிபடவேண்டும். குழந்தை பாக்கியம் மற்றும், சுக பிரசவமாக இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சாற்றப்படும் வெண்ணெய்யை சாப்பிட்டு வந்தால், குழந்தை பேறு கிடைக்கும்.


சுக பிரசவமாகும்.குழந்தை பேறு, சுக பிரசவம் ஆகியவை, வேண்டுதலின் பெயரில் நடந்தால், குழந்தைவுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு, அர்ச்சனை செய்துக் கொள்கிறார்கள்

சிறப்பு அம்சங்கள்:

                அன்று விவசாயிகளின் இடமாக இவ்விடம் திகழ்ந்ததால், விவசாயினர்கள் ஆடி மாதம், ஏர் உழுது, தரமான விதை நெற்களை எடுத்து, கைக்குத்தல் அரிசி, அதில் கொஞ்சம் வெல்லத்தை கலந்து படையல் செய்து, கற்பூரம் ஏற்றி அதிகமான விளைச்சல்களுக்காகவும், செழிப்பாக நெல் பயிர்கள் வளரவும், நன்றாக மழை பெய்து விளைச்சல் அடையவேண்டுமென்றும் வேண்டிக் கொள்வார்கள். இப்படி வழிபட்ட பின்னர்தான் விதைகளை நட்டு நெற்பயிர்களை வளர்ப்பார்கள். இப்பொழுது, விவசாயிகளின் இடங்கள் கட்டிடங்களாக மாறிவிட்டாலும், அன்று பூஜை செய்த விவசாயிகளின் சந்ததிகள் இன்று கங்கை அம்மனை மறவாது வழிபட்டு வருகிறார்கள்.

திருச்சி, மதுரை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் விவசாயிகள், கங்கை அம்மனை வழிபட்டு, இன்றும் சிறப்பு பூஜைகளை செய்கிறார்கள். அதே போல், அருகிலேயே மென்பொருள் நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதினால், அங்கு பணி புரிபவர்கள், இவ்வாலயத்திற்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டியது நிறைவேறியதும் அன்னதானம், அபிஷேகம், புடவை சாற்றுவது என பலவற்றை செய்கிறார்கள்.

மேலும், இவ்வாலய அருகிலேயே, சுமார் 25 ஆண்டுக் காலமாக, கற்பகம்பாள் சமேத கற்பக ஈஸ்வரர் என்னும் சிவன் கோயில் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சில சிவன் அடியார்கள் ஒன்று தேர்ந்து கொட்டகையில் சிவனை பிரதிஷ்ட்டை செய்தார்கள். அதன் பின், ஓட்டினால் கோயில் அமைத்தார்கள். சில ஆண்டுகள் பிறகு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கட்டிட வேலைப்பாடுகளுடன் கூடிய கோயிலை எழுப்பினார்கள்.

இந்த கோயிலானது, பழைய மகாபலிபுரம் சாலை செல்லும் வழியில், ரோட்டில் இருந்து சற்று உயர்ந்த நிலையில் காணப்படும். காலப் போக்கில் சாலையானது உயர்வாகவும், சிவன் கோயில் தாழ்வானதாகவும் மாறின. உலகத்திற்கே படியளக்கும் பரமசிவன், தாழ்வான பகுதியில் இருப்பதை கண்ட அவ்வூர் மக்கள், சிவன் கோயிலை, தாழ்வான பகுதியில் இருந்து உயர்த்த வேண்டும் என்பதற்காக, அசாம் மாநிலத்திலிருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு கோயிலை இடிக்காது,  சிவன் கோயிலை உயர்த்திவுள்ளனர்.

கங்கை அம்மன், சிவன் ஆகிய தெய்வங்களை தவிர, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேச பெருமாள், ராமர், கற்பகம்மாள், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், வலம்புரி விநாயகர், வள்ளி தேவயானை சமேத ஸ்ரீ முருகப் பெருமான், சுவாமி ஐயப்பன், நவகிரக நாயகர்கள், தனி சந்நதியாக சனி பகவான், பைரவர் மூர்த்தி, வரிசையாக 63 நாயன்மார்கள் என ஒரே ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் இருப்பது சிறப்பிலும் சிறப்பு.

திருவிழாக்கள்:

                கங்கை அம்மனுக்கு, ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். அன்று பொங்கல் வைத்து வழிபடுவது இங்கு மிகவும் விசேஷம். இங்குள்ள ராமருக்கு, பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் வருகின்ற “ராம நவமி’’ விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்று, காலை முதலே ராமருக்கு பானகம், மோர் ஆகியவை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பிரதி பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அனைவருக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 7.00 மணியளவில் மஹா தீபாராதனை நடைபெறும். பங்குனி உத்திரம் அன்று சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும். சிவனும், பார்வதியும் பங்குனி உத்திரத்தன்று, வற்றாத குலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, தெப்ப திருவிழா நடைபெறுகிறது. பின்னர், ஊஞ்சல் சேவை, பாட்டுக் கச்சேரி என சிறப்பாக கொண்டாடப்படும். அன்றிரவு பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவடையும். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. அன்று மட்டும் சுமார் 10,000 பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கார்த்திகை தீபத்தன்று சொக்கப் பானை விழா கொண்டாடப்படுகிறது. மார்கழி 30 நாட்களும் சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி கூறி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பாடுவார்கள்.

பிரதி சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மேலும், காரிய சித்தி, `ராம பக்த ஆஞ்சநேயர்’ என்று பெயர்க் கொண்ட 11-அடி ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தி அன்று பிரம்மாண்டமான அபிஷேகம் செய்யப்படுகிறது.  பிரதி சனிக்கிழமை அன்று 108 வடை மாலை சாற்றப்படும். ஐயப்பனுக்கு, கார்த்திகை 1 முதல் மகர ஜோதி வரை பக்தர்கள், மாலை அணிந்து வழிபாடு செய்கிறார்கள். திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று, மாலை 6.00 மணி அளவில், ஐயப்பனுக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெறும். மேலும், சனீஸ்வரன் தனி கோயில் கொண்டுள்ளது சிறப்பாக பார்க்கப்படுவதால், சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கங்கை அம்மன் குளம், அரவிந்த் திரையரங்கம் அருகில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top