கல்பட்டு லட்சுமி கணேஷர் திருக்கோவில், விழுப்புரம்
முகவரி
கல்பட்டு லட்சுமி கணேஷர் திருக்கோவில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் – 605302.
இறைவன்
இறைவன்: லட்சுமி கணேஷர்
அறிமுகம்
விழுப்புரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள கல்பட்டு என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. 28.12.1871ம் ஆண்டு ராமசாமி சாஸ்திரிஜானகி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் அவதூத ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள். பெற்றோர் அவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் சூட்டினார்கள். அந்த மகான் அவதரித்த கல்பட்டு கிராமத்தில் அவரால் வழிபடப்பட்ட மிகப் பெரிய ஆயிரம் ஆண்டுகள் பழைமையான லட்சுமிகணேசர் கோவில் இன்று சிதிலம் அடைந்து கிடக்கிறது. ஒப்பற்ற அவதூத மகானால் வழிபடப்பட்ட அந்த விநாயகர் ஆலயம் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டும் என்று அந்த அவதூத மகான் திருவுள்ளம் கொண்டுவிட்டதுபோல் இப்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து திருப்பணிகளைத் தொடங்கி உள்ளனர். இங்கு அமைய உள்ள ஆலயத்தில் லட்சுமிகணேசருடன், கேதாரீஸ்வரர், லட்சுமிநரசிம்மர், சீதாராமலட்சுமண, அனுமன், ஸ்வயம்பிரகாச அவதூத ஸ்வாமிகள் ஆகியோரின் சந்நிதிகளும் அமைய இருக்கின்றன.
புராண முக்கியத்துவம்
குடும்பத்தில் வறுமை இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் சாஸ்திரம், வேதம் போன்றவற்றைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார் தந்தை. ஆனால், தந்தையின் விருப்பப்படி வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தாலும்கூட, கிருஷ்ணமூர்த்தியின் மனம் ஆன்மிக சாதனைகளில்தான் லயித்திருந்தது. நாராயணசாமி சாஸ்திரிகளிடம் வேதம், சாஸ்திரம், தர்க்கம், மீமாம்சம் போன்றவற்றையும், தமிழில் புலமை பெற தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் திருக்குறள் ஆகியவற்றையும் குறைவில்லாமல் கற்றுத் தெளிந்தார். பின்னர், குடும்பம் என்ற பந்தத்தில் சிக்கிக் கொள்ள விரும்பாதவராக வாரணாசிக்குச் சென்றவர் அங்கிருந்த ராஜு சாஸ்திரிகள், தொடர்ந்து திருவண்ணாமலை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியோரிடம் சிஷ்யராக இருந்து அனுக்கிரகம் பெற்றார். மதுரைக்குச் சென்றவர் அங்கிருந்த ஜட்ஜ் ஸ்வாமிகளை சந்தித்து அவரிடம் சந்நியாச தீட்சை பெற்றார். ஸ்வயம்பிரகாசர் என்னும் சந்நியாச பெயரும் ஏற்றார். உணவு, உடை, வீடு வாசல் என்று எதிலும் பற்று இல்லாத அவதூதராக விரும்பியவர், அதற்கான வழியை ஜட்ஜ் ஸ்வாமிகளிடம் கேட்டார். அவர் சொன்னபடி இடுப்பில் ஒரே வஸ்திரத்துடன் தன் தாயிடம் வந்து மூன்றுமுறை வலம் வந்து நமஸ்கரித்த வேளையில் அவருடைய இடுப்பில் இருந்த ஒற்றை வஸ்திரம் நழுவிவிட்டது. அந்த நிமிடமே அவர் தாம் விரும்பிய அவதூத நிலையை பூரணமாக அடைந்துவிட்டார். அவதூத நிலையில் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்தார். அவருடைய பாதங்கள் பதிந்த ஊர்கள் எல்லாம் புனிதம் பெற்றன. சுமார் 18 ஆண்டுகள் தொடர்ந்த அவருடைய யாத்திரை சேந்தமங்கலம் என்ற ஊரில் நிறைவு பெற்றது. அங்கிருந்தபடி பல ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்த ஸ்வாமிகள் பலருக்கும் லௌகிக வாழ்க்கைக்கும், ஆன்மிக சாதனைகளுக்கும் பெரிதும் துணை நின்றார். 1948ம் ஆண்டு அவர் ஸித்தி அடைந்தார்.
நம்பிக்கைகள்
இந்த கோவிலில் வந்து லட்சுமி கணேஷரை வழிபட்டால், ஆன்மீக ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி