Tuesday Jul 02, 2024

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்-639 001. கரூர் மாவட்டம். போன்: +91- 4324 – 262 010

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: கிருபாநாயகி, சௌந்தரியநாயகி

அறிமுகம்

கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக, அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில், இக்கோவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து , வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “”புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு,’ என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், “”நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்,’ என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம். முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்த புராதான சிறப்பு பெற்ற தலம் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்தனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது. இங்குள்ள ஆனிலை எனும் லிங்க வடிவமானது முற்றிலும் சுயம்பு மூர்த்தியாகும். புற்றிடங்கொண்ட ஈசரை முதலில் வழிபடும் பெருமை பெற்றவராக பிரம்மதேவர் குறிப்பிடுகிறார். காமதேனுவால் வழிபடப்பட்ட சிவாலயம் இது. காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளது. கருவூர் சித்தர் : பதிணென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற, மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது, குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமானதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம் – நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. நடராஜர் சன்னதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில் ஒரு சுவாமி சன்னதியும், இலக்குமி சன்னதியும் அடுத்து ஆறுமுகர் சன்னதியும் உள்ளது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரத் திருவிழா -13 நாட்கள்.மார்கழித் திருவிழா – ஆருத்ரா தரிசனம் – 13 நாட்கள். பிரதோச காலங்கள் , குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top