கரிசல்பட்டி கைலாசநாதர் திருக்கோயில், சிவகங்கை
முகவரி :
கரிசல்பட்டி கைலாசநாதர் திருக்கோயில்,
கரிசல்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630309.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
கமலாம்பிகை அம்பாள்
அறிமுகம்:
மாங்கல்ய பாக்கியம் கிட்டிட அருளும் மகேசன் எழுந்தருளிய திருத்தலங்களில் ஒன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள கரிசல்பட்டி. முற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் புறமலை நாடு என்ற உள்நாட்டு பிரிவில் அடங்கியிருந்தது. திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது கோயில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. துவாரங்குறிச்சி பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கரிசல்பட்டி திருத்தலம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
அக்காலத்தில் (கி.பி.550-950) ஊருக்குத் தெற்கே கிழக்கு பார்த்த வண்ணம் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது. திருக்கோயிலில் பூஜை பணிகளுக்கு முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) நிலதானம் வழங்கிய செய்தியும், அவ்வேளையில் பாண்டியநாடு இராஜராஜ பாண்டிய நாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டதும் அர்த்த மண்டபத்தின் பின் சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் (கிபி.1191-1311) இக்கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அவ்வேளையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1248) தானமளித்த செய்தி கருவறை தெற்கு கண்ட பகுதியில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
இவை தவிர கருவறை மேற்கு வடக்கு சுவர்களிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. கோயில் மராமத்து பிரித்து கட்டப்பட்ட நிலையில் பல கல்வெட்டுகள் இடம் மாறியுள்ளனர். சுற்றில் பிரம்மாண்ட பாறாங்கல் ஒன்று கோயிலுக்கு தானமளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயம் கிபி 9-10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கோயில் வாசலில் பழமையான இரு நந்தி சிலைகள் காணப்படுகின்றன. எதிரில் நந்தி மண்டபம் இருந்துள்ளது ஒருகட்டத்தில் அது சிதிலமானதால் அங்கிருந்து கோயிலுக்கு உள்ளே முக மண்டபத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அந்த மண்டபத்தை பிரதான வாசலில் பின்புறம் விநாயகர் சன்னதியில் கட்டி வைத்துள்ளனர். கோயிலுக்கு எதிரே பிரம்மாண்டமான தீர்த்தக்குளம் உள்ளது. பிரதான வாசல் கோபுர அமைப்புடன் இருக்கிறது. தொடர்ந்து விரிந்து பரந்து ஒரு சுற்று காணப்படுகிறது. முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கலைநயத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. மகாமண்டபம் நடராஜர் சன்னதியிலும், பிட்சாடனர் விக்ரமும் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் துவார பாலகர்களும் அனுக்ஞை விநாயகரும் இருக்கின்றனர்.
நம்பிக்கைகள்:
இத்தலத்தில் திருமண வைபவம் நடத்தினால் மணவாழ்க்கை சகல வளங்களும் நிம்மதியாய் ஆரோக்கியம் ஆயுள் பலத்துடன் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
கருவறையில் மூலவராக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். கல்யாண வரமருளும் பெரும் வரப்பிரசாதம் இவர் என்கின்றனர். இவருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவாக தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மூலவர் விமானம் வேசர வகையில் அமைந்துள்ளது. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை உள்ளனர். தெற்குச் சுற்றில் பழமையான வன்னி மரம் உயர்ந்து நிற்கிறது. திருசுற்றில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், பைரவர் சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதிக்கு இடது புறமாக கமலாம்பிகை அம்பாள் சன்னதி கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அம்பாள் வலது கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தியும் இடது கையை தொங்கவிட்டபடி காட்சி அளிக்கிறார்.
திருவிழாக்கள்:
தற்சமயம் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆண்டுக்கு ஆறு கால நடராஜர் அபிஷேகம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், கார்த்திகை மகா தீபம், மார்கழி மாத திருப்பள்ளிஎழுச்சி, ஆருத்ரா தரிசனம், தை பொங்கல், மாட்டு பொங்கல், மாசிமகம், மகாசிவராத்திரி, பிரதோஷம், அஷ்டமி வழிபாடு, பங்குனி உத்திரம் ஆகியவை உற்சவங்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.
காலம்
கி.பி.550-950 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கரிசல்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை