Saturday Jan 18, 2025

கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்

முகவரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல் மாவட்டம். போன்: +91 4268-254100, 90957 24960.

இறைவன்

இறைவன்: பாலசுப்பிரமணியசுவாமி

அறிமுகம்

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி – வேலூர் வட்டத்தில் காவிரிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. பரமத்தி வேலூருக்கு மேற்கே 7 ஆவது கிலோ மீட்டரிலும் நாமக்கல்லுக்குத் தென் மேற்கே 24 ஆவது கிலோ மீட்டரிலும் கபிலர்மலை உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 150 அடி உயரத்தில் மலையின் நடுவில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்து ஒரு தென்றல் காற்று வீசி முருகன் அருகே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தீபத்தை எப்போதும் அசைத்துக்கொண்டே இருக்கிறது. சைவத் திருத்தலமான இந்தக் கோயில் தூண்களில் வைணவத் திருத்தலத்திற்குறிய நரசிம்மர் சிற்பம் காணப் படுகின்றது. மேலும் அழகிய வடிவோடு மீன் சிற்பம் முதலான பல்வேறு சிற்பங்களும் அமைந்துள்ளன.

புராண முக்கியத்துவம்

கபிலர்மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்திருக்கும் பாறையில் தான் முக்காலத்தில் கபிலமகரிஷி என்ற முனிவர் அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து பெரும் வேள்வி செய்து பின் தவம் செய்து வந்தார். இன்றும் அந்தப் பாறையில் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித்தன்மையாக தெரிகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு கபில மகரிஷிக்கு தினசரி பூஜை நடந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கபில மகரிஷி தவம் செய்த இடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கபில மகரிஷி இம்மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக விளக்கிய முருகப்பெருமானை வணங்கி வந்தார். அதன்பிறகு, அவரால் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. கபில மகரிஷி இங்கு தங்கி தவம் இருந்து முருகனை வழிபட்டு வந்ததையொட்டியே இம்லைக்கு அவர் பெயரால் கபிலர்மலை என சிறப்பு பெயர் பெற்று புகழுடன் விளங்குகிறது. இங்கு மலையுச்சியில் கபில தீர்த்தமும் உண்டு. இச்செய்திகள் வடமொழி தல புராணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கபிலர்மலை குழந்தைக் குமாரர் வருக கோவை நூலில் தலவராறு குறிப்புகள்: கருவை என்ற ஊரில் கபில என்ற காரம் பசுவொன்று பிறந்து நன்கு வளர்ந்து வந்தது. பின் அங்கு மழை பெய்யாததால், பசுமையான புல்லின் தழை காண்பது அரிதாயிற்று. மேய்ச்சலுக்குரிய புல் கிடைக்கவில்லை. நெடு நாளாக பசியால் வருந்திய கபிலைப் பசு மேய்ச்சலின் பொருட்டு விறகிரி என்ற பினாக மலையை சென்று அடைந்தது. அம்மலையில் கடும்பசியால் வருந்திய கொடும்புலி ஒன்று பசுவைப் பற்றியது. அப்பசுவின் துயர் நிலையை கண்ட கடும்புலி அம்மலைவாழ் தெய்வத்தின் அருளால் இரக்கமடைந்து, அதை விட்டது. அப்பசு அம்மலையில் மேய்ந்து இரவில் அம்மலையை அடுத்த ஊரில் தங்கி கழித்து முடிவில் உயிர்பதம் பெற்றது. எனவே கபிலையின் சம்பந்தத்தைப் பெற்ற மலைக்கு கபிலை மலை எனவும், ஊருக்கு கபிலக் குறிச்சி எனவும் பெயர் உண்டானது என்பது வரலாறு. இதுபற்றிய செய்தி கபிலைமலைக் கோவை 104வது பாடலில் வரலாறு தெரிவிக்கிறது.

நம்பிக்கைகள்

பக்தர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பாலசுப்ரமணியரை வழிபட்டுச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கபிலர்மலை குறித்து சங்க நூலகம் சிலவற்றில் குறிப்புகள் உள்ளன. அதன்படி கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் காணம் பொன் மற்றும் நாடும் பெற்ற அந்தணர், இம்மலையில் தங்கி பெரும வேள்வி, தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. சேர மன்னன் செல்வக் கடுங்கோவாழியாதன் இக்குன்றின் மேல் ஏறி நின்று கபிர் என்னும் புலவருக்கு தானம் செய்து கொடுத்த நாட்டை காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டு மூலம் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் 7ம் பாட்டின் இறுதியில் கபிலர் பாடிய பத்து பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். அதற்காக நூறு ஆயிரம் காணம் பொன் கொடுத்து, இக்குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டி கொடுத்தான் எனவும் சான்றுகள் தெரிவிக்கிறது. இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது. கபிலம்-செந்நிறம். அதற்கு பரிபாடல் 3ம் பாட்டில் பதினொரு உருத்திரைப் – பாதினொரு கபிலர் என குறப்பிடப்படுகிறது. கபிர்மலையை அடுத்து வடக்கரையாற்றில் வாழ்ந்த அல்லாளன் என்ற திருமலையினைய நாயகன் வேட்டுவ குல தலைவன் விளெரசன் கலியுக சகாப்தம் 5560ல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் திருச்செங்கோடு வேலவருக்குப் பல திருப்பணிகளை செய்தவர். திருச்செங்கோடு திருப்பணி மாலையில் பாடப் பெற்றவர். மதுரை திருமலை நாயக்கரிடம் அதிகாரம் பெற்றவர். அவர் கபிலர்மலையில் குழந்தை குமாரரை குல தெய்வமாகக் கொண்டு பல திருப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றிய பாடல் ஒல் ஒன்று கபிலமலை கோவையில் 77ம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கபிலைமலைக் கோவை: பிள்ளை பெருமான் சிறை மீட்டான் கபிராயர் என்பவர் கபிலைமலைக் கோவை என்ற அகப்பெருமாள் இலக்கிய நூலை சுவைமிகப் பாடியுள்ளார். அவரது காலம் கலியுக சகாப்தம் 4740. தற்போது கலியுக சகாப்தம் 5095 ஆகும். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தவர். பாகை எனும் நகரத்தில் அவர் பிறந்தார். அவர் கபிலைமலை குழந்தை குமாரரைக் குலதெய்வமாக கொண்டவர். கபிலைமலைக் கோவை இந்நூல் காப்பு செய்யும் முதலாக 105 செய்யுளை கொண்டது. இந்நூலின் பாட்டுடை தலைவனாகிய முருகக் கடவுளை ஞானக் குழந்தை குமாரர் என்றும் இவர் பூமியின் மேல் முற்றும் துறந்த முனிவர்களாலும், தேவர்களாலும் அரசர்களாலம் துதிக்கப்படுவராவர்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கபிலர்மலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top