கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கன்னியாகுமரி
முகவரி :
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில்
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629702.
இறைவன்:
வெங்கடாசலபதி
அறிமுகம்:
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை ‘ஏழுமலையான்’ என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை ‘கடல் திருப்பதி’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது. குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புராண முக்கியத்துவம் :
திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.
சிறப்பு அம்சங்கள்:
கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
திருவிழாக்கள்:
தரிசன நேரம், பூஜை விவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும். நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும். தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது.
காலம்
2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கன்னியாகுமரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கன்னியாகுமரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்