Monday Jan 27, 2025

கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,

கத்திரிநத்தம்,  

தஞ்சாவூர் மாவட்டம் – 613501.

இறைவன்:

காளகஸ்தீஸ்வரர்

இறைவி:

காளகஸ்தீஸ்வரர்

அறிமுகம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன.

புராண முக்கியத்துவம் :

ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது. இதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.

நம்பிக்கைகள்:

 விரைந்து திருமணம் நடக்கவும் தடைபட்ட விவாகம் விரைந்து நடக்கவும், குழந்தை பேறு வேண்டியும் வரும் பக்தர்களின் குறைகளை நீங்கவும் காளகஸ்தீஸ்வரரை தரிசிக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பலிபீடமும், நந்தியும் இருக்க முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகையின் சன்னிதி உள்ளது. முகப்பில் துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலை காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவி ஞானாம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. அதையடுத்த கருவறையில் இறைவன் காளகஸ்தீஸ்வரர், லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் கன்னி மூலை கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் காலபைரவர், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் ஆலய தேவக்கோட்டத்தில் வைஷ்ணவி, பிரமணி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.

இத்தலம் ராகு – கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது.

இக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.

திருவிழாக்கள்:

இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கத்திரிநத்தம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top