கட்டீல் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கர்நாடகா
முகவரி :
கட்டீல் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்,
கோவில் சாலை,
தட்சிண கன்னடா மாவட்டம்,
கர்நாடகா – 574150.
இறைவி:
துர்கா பரமேஸ்வரி
அறிமுகம்:
கட்டீல் அல்லது கடீல் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நகரமாகும். இது இந்தியாவின் புனிதமான கோவில் நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது நந்தினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. துளுவில் ‘கடி’ என்றால் ‘மையம்’ என்று பொருள். ஆற்றின் பிறப்பிடமான கனககிரிக்கும், ஆறு கடலில் சேரும் பவஞ்சேக்கும் நடுவே கடேல் உள்ளது. ‘இலா’ என்றால் பகுதி (நிலம்), இதனால் அந்த இடம் ‘கடி + ல்லா’, கடேல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. புனிதமான நந்தினி நதியின் நடுவில் ஒரு தீவில் பரந்த காட்சிகள் மற்றும் கண்கவர் பசுமைக்கு மத்தியில் இந்த கோவில் அமைந்துள்ளது. துர்கா பரமேஸ்வரி அம்மனிடம் ஆசிர்வாதம் பெற தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கட்டீலுக்கு வருகிறார்கள். இக்கோயில் 1000 – 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
ஒரு காலத்தில் உலகில் பஞ்சம் தாண்டவம் ஆடியது. ஜாபாலி முனிவர் வறுமை நீங்க இறைவனை எண்ணி தவம் மேற்கொண்டார். இதனால், காமதேனு பசுவின் மகளான நந்தினி பசுவை பூலோகம் சென்று வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். பாவிகள் நிறைந்த பூலோகத்திற்கு செல்ல நந்தினி மறுத்தது. அத்துடன் தன்னை பூலோகத்திற்கு அனுப்பக்கூடாது என அன்னை உமையவளை வேண்டியது. உமையவள் அவளிடம், நீ பசுவாகச் செல்ல வேண்டாம். புண்ணியம் மிக்க நதியாக மாறி பூமிக்குச் சென்று மக்களுக்கு பணியாற்று, என்றாள். நந்தினியும் நேத்திரவதி என்ற பெயரில் ஓட ஆரம்பித்தாள்.
அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன், பூவுலகில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து உயிர்களைக் காக்கும்படி தேவியை முனிவர்கள் வேண்டினர். அசுரனைச் சம்ஹாரம் செய்ய அம்பிகை, மோகினியாக தோன்றினாள். அவளது அழகில் மயங்கிய அசுரன் அம்பிகையை விரட்டினான். நேத்திராவதி நதி நடுவில் இருந்த பாறையின் பின், அம்பிகை ஒளிந்து கொள்வது போல பாவனை செய்தாள். அருணாசுரன் அவளைப் பிடிக்க முயன்றான். அவள் வண்டு வடிவெடுத்து அவனை சம்ஹாரம் செய்தாள். மிகுந்த உக்கிரத்துடன் இருந்த அவளை சாந்தப்படுத்துவதற்காக. முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர். உக்கிரம் தணிந்த அவள், நந்தினி நதியின் நடுவில் துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் கோயில் கொண்டாள். இவள் லிங்க வடிவில் இருப்பதாகவும், அம்பாளாக அலங்காரம் செய்து உள்ளதாகவும் சொல்கின்றனர். நதியின் மடியில் தோன்றியதால் அம்பிகை தோன்றிய இடம் கடில் எனப்பட்டது. கடில் என்றால் மடி. கடில் என்பது மருவி தற்போது கட்டீல் எனப்படுகிறது.
நம்பிக்கைகள்:
வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை தீர இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலின் பின்பகுதியில் நந்தினி ஆறு இரண்டாக பிரிந்து, மாலை அணிவித்தது போன்று சுற்றி ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்டு பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்குள் நுழையும் போது சலசல என ஓடும் நதியின் சத்தம் ரம்மியமாக உள்ளது. நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இளநீர் அபிஷேகம்: உக்கிரமாக இருந்த அம்மனை தேவர்களும், முனிவர்களும் அபிஷேகம் செய்து குளிர்வித்தனர். இதன் அடிப்படையில் அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் நடக்கிறது. வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை தீர பக்தர்கள் இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் காலை கோயில் இவற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். வாரம் மூவாயிரம் இளநீர் அபிஷேகம் செய்யப்படும்.
உடுப்பி சங்கரபுரம் மல்லிகை: தமிழகத்தில் மதுரை மல்லிகைக்கு பெயர் பெற்றுள்ளது போல, கர்நாடகாவில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை புகழ்பெற்றதாக உள்ளது. அம்பாளுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, இந்த மலரை வாழைநாரில் தொடுத்து அணிவிக்கின்றனர். கர்நாடக மக்கள் இந்த அம்பாளை துர்க்காம்மா என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
கோலா ஆட்டம்: கோயிலில் யட்சகானம் என்ற கோலா ஆட்ட வழிபாட்டுக்கு வரும் 25 ஆண்டுகளுக்கும், சண்டி ஹோமத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தெய்வ வேடமிட்டு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுவது போல், இங்கும் 16 கைகளுடன் கூடிய அம்மன் வேடமிட்டு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுவதே கோலா ஆட்டம். இதற்காக, ஒரு கோஷ்டியே இங்குள்ளது. இவர்களிடம் பதிவு செய்து கொண்டால் இந்த பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவார்கள். பக்தர்களே வேடமிட்டும் நடத்தலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை அதிகமாக இந்த வழிபாட்டை நடத்துவர். தினமும் 6,500 கூவின பூஜை (மல்லிகை அர்ச்சனை), வாகன பூஜை, அன்னதானம் உண்டு. கோயில் வருவாயிலிருந்து பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுகிறது. இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை கோயிலில் தான் நடத்துகின்றனர். இதற்கு 300 ரூபாய் செலுத்தினாலே போதும்.
திருவிழாக்கள்:
ஏப்ரல் 13 முதல் 20 வரை பிரம்மோற்ஸவம், நாக பஞ்சமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்டீல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சூரத்கல், முல்கி
அருகிலுள்ள விமான நிலையம்
மங்களூர்