Wednesday Dec 18, 2024

கட்டிமாங்கோடு மகாதேவர் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், கட்டிமாங்கோடு, ஆளுர் அருகில், நாகர்கோவில் வழி, கன்னியாகுமரி மாவட்டம் – 629801. போன்:+91 8220394666, 9486269465, 9943754334

இறைவன்

இறைவன்: மகாதேவர்

அறிமுகம்

நாகர்கோவிலை அடுத்துள்ள கட்டிமாங்கோடு எனும் ஊரிலும் பாண்டவர்கள் ஓராண்டு காலம் வசித்ததாகக் கூறுவர். அதற்கு சாட்சியாகத் திகழ்கிறது இவ்வூரின் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில். நாகர்கோவிலிலிருந்து சுமார் 12 கி. மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது கட்டிமாங்கோடு கிராமம். செழித்து நிற்கும் வாழைகளும் நெடிதுயர்ந்த தென்னைகளும் நிறைந்திருக்க பசுமை வனப்புடன் திகழ்கிறது கட்டிமாங்கோடு. இங்கே ஒரு குளத்தின் கரையில் மகாதேவரின் ஆலயம் அமைந்துள்ளது. சிவலிங்கத் திருமேனியராக அருள்கிறார் கட்டிமாங்கோடு மகாதேவர். அவரின் எதிரில் கல் மண்டபத்தில் நந்திதேவர் வீற்றிருக்கிறார். கன்னிமூலையில் அருள்மிகு சக்தி கணபதி கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகில் தர்மசாஸ்தா சந்நிதி, நாகராஜ சந்நிதியை தரிசிக்கலாம். கருவறையின் முன்பகுதியில் இடப்பக்கமாக தெற்கு நோக்கி பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் பைரவ மூர்த்தி. கருவறையின் வலப்பக்கத்தில் யோகீஸ்வரருக்கு தனி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

ஆகம சரித்திர புகழ் பெற்ற கட்டிசாங்கோடு மகாதேவர் கோயில் 1956 மொழிவழி பிரிவினையில் திருவிதாங்கூர் மன்னரால் அரசமானியத்தில் தமிழகத்திற்குக் கொடுக்கப்பட்ட திருக்கோயில்களில் ஒன்றாகும். பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வனவாசமிருந்து, வாக்குறுதியை நிறைவேற்றிய வனம் அல்லது காடு பஞ்சவன் காடு. பஞ்ச பாண்டவர்கள் பெரும் தூரத்தை மேற்கு தொடர்ச்சி மலைவழியாகவும், பெரும்காடு வழியாகவும் கடந்து பஞ்சவன்காடு வந்தடைந்தனர். பஞ்ச பாண்டவர்கள் பல யாகங்கள் புரிந்து வாழ்ந்தமையால் அக்காடு அவர்கள் பெயராலேயே பஞ்சவன்காடு ஆயிற்று. பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வன வாசத்தில் ஒரு வருடம் வந்து தங்கிய இடந்தான் ‘ அற்ற மாங்கனி பொருந்திய அருமைக் கட்டிமாங்கோடு‘, என வழங்கப்பட்டு வருகிறது. திண்மை பொருந்திய அதாவது கட்டிமையான மாவிற்கு கட்டிமாவு என பெயர் வருவதாயிற்று. காட்டினூடே அந்த மாவு இருந்த எல்கையே அதாவது வரையறுக்கப்பட்ட இடுமே கட்டிமாங்கோடாயிற்று. பஞ்ச பாண்டவர்கள் அவ்விடம் வரும் முன்பே, அம்மாமரத்தைப் பேணியவரும், அவ்விடத்தையே தன் வழிபாட்டுத் திருத்தலமாகவும் கொண்டு, வாழ்ந்த மாமுனிதான் கலைக்கோட்டு மாமுனி என போற்றப்பட்ட மாமுனியாகும். இவ்விடம் ‘காளை மகரிஷி வனம்‘ எனவும் கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் பஞ்சவன் காட்டை நோக்கிய பயணத்தின் போது மேற்படி மாமரத்தின் அழியாத நெட்டுகளை காண்கின்றனர். அவ்விடமே நெட்டுண்ட நெட்டாங்கோடு என பெயர் பெற்றதாக சொல் வழக்கு உள்ளது. அப்படி நெட்டுக்கண்ட மரத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்ததில் அருமையான, கண்ணைக் கவரும் விதமான கனிந்த நிலையிலான மாங்கனியைக் கண்ட மாத்திரத்தில் அர்ச்சுனன் அந்த கனியை அம்பினால் எய்து வீழ்த்தி விட்டான். முக்காலத்தையும் உணரும் சோதிட வல்லுனரான சகாதேவன் பதறினான். அண்ணன் அர்ச்சுனனை பார்த்து ‘பெரும் குற்றம் செய்து விட்டீரே. இந்த கனி ஒரு மகா முனிக்கு சொந்தமானது ‘. இன்று சித்திரை முதல் நாள் (சித்திரை விஷூ) ஆண்டவனுக்கு கலைக்கோட்டு முனிபிரான் கனி படைக்கும் புனிதநாள். முனிவர், பக்கத்திலுள்ள சுனை நீரில் தீர்த்தமாடிவிட்டு தியான நிலையில் நிற்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் தியானம் முடித்து விட்டு வந்து வருடத்திற்கு ஒரு தடவை கனியும் இக்கனியை இறைவனுக்கு அற்பணம் செய்ய வருவார். அற்று வீழ்ந்த கனியை கண்டு மிகவும் சினமடைந்து, நம்மை சபித்து விடுவார்‘, எனக் கூறியதும் ஐவரும் பயந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை தியானம் செய்து வரவழைத்தனர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தரிசனம் கொடுத்து, ‘ஒவ்வொருவரும் தங்கள் மனதில் மறைத்து வைத்திருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தச் சொல்லி மனதை தூய்மைப்படுத்தினால், அந்த கனி திரும்பவும் பொருந்தும், ‘ என திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி ஐவரும் தங்கள் மனதில் ஒளிந்திருந்தவற்றை வெளிப்படுத்தினர். தரையிலிருந்து மாங்கனி எழும்பி நின்றதே தவிர நெட்டோடு சேர்த்து பொருந்தியபாடில்லை. இறுதியில் பாஞ்சாலி தன் மனதிலிருந்தவற்றை வெளிப்படுத்த கனி பொருந்தியது. கனி பொருந்தியதும், தியானத்திலிருந்த முனிபிரான் வரவும் சரியாக இருந்தது. பஞ்சபாண்டவர்களிடம் ‘நடந்து முடிந்தவை அனைத்தும் பகவானின் திருச்செயலே. உங்கள் ஐவரோடும் பாஞ்சாலியினுடையவும் மனதை தூய்மைபடுத்தவே பகவான் இவ்வாறு ஆட்டுவித்தார்‘ என மொழிந்தருளினார். முனிபிரான் கையேந்த மாங்கனி முனிபிரானின் கையில் வீழ்ந்தது. அதை மகாதேவனுக்கு படைத்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்து தானும் உண்டு கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பஞ்ச பாண்டவர்கள் அனைவரது பசியும் அடங்கியது. அதிலும் பீமனுடைய பசி பூரணமாக அடங்கியதை உணர்ந்து ஆச்சரியமடைந்து நின்ற பஞ்ச பாண்டவர்கள் முனிபெருமான் கண்மூடி தியானத்தில் அமர்ந்ததை கவனியாமலிருந்துவிட்டனர். உடனே முனிபிரானிடம் விடைபெற்று பஞ்சவன்காடு செல்ல முடியாமல் போயிற்று. எனவே மறுவருடம் முனிபிரான் கண் திறந்து தியானம் முடிக்கும் நாள் வரை அவ்விடத்தினருகே தங்கி, மறுபடியும் மகாதேவனுக்கு மாம்பழம் வைத்து வழிபட்டு மாம்பழ பிரசாதம் பெற்ற பிறகே பஞ்சவன்காடு சென்றனர். இடைப்பட்ட இந்த ஒரு வருடமும் பஞ்சபாண்டவர்கள் தனியாக ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, முனிபிரான் வணங்கும் சுயம்புலிங்கத்திற்கருகே வைத்து வழிபட்டு வந்தனர். தனித்தனியே இருந்த சிவலிங்கங்கள் காலப்போக்கில் ஒன்றாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருவதாயின.

திருவிழாக்கள்

சோமவார வழிபாடுகள், சிவராத்திரி விழா, திருவாதிரை அகண்டநாம பெருவேள்வி, சித்திரை வருட பிறப்பு அன்று மாங்கனி அளிக்கும் விழா.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கட்டிமாங்கோடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகர்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top