ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில்
ஐவநல்லூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611106.
இறைவன்:
ருத்ரபுரீஸ்வரர்
இறைவி:
முத்தாம்பரநாயகி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் இரண்டுகிமீ தூரத்தில் வலதுபுறம் உள்ளது இந்த ஐவநல்லூர். இந்த ஐவநல்லூர் ஒட்டி இரு பெரும் சாலைகள் சேருமிடம் புத்தூர் நாலுரோடு எனப்படுகிறது. ஐவர் எனப்படும் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலம் ஆதலால் ஐவர் நல்லூர் எனப்படுகிறது,
சிறிய தெருவில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த சிவன் கோயில். கோயிலின் தென்புறம் ஒரு குளம் உள்ளது, தற்போது பெரும் ஆக்கிரமிப்பில் கிடக்கிறது கோயிலின் வடமேற்கில் ஒரு பெரிய தாமரை குளமும் உள்ளது. கிழக்கு நோக்கிய அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டு விளங்குகிறது திருக்கோயில். இக்கோயிலின் நேர் எதிரில் சிறிய விநாயகர் கோயில் ஒன்றும் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இறைவன் – ருத்ரபுரீஸ்வரர் இறைவி: முத்தாம்பரநாயகி முத்துக்களால் ஆன ஆடையை அணிந்தவள் என பெயர்.
மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டியவுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் செப்பு கொடிமரம், அதன் முன்னர் ஒரு நந்தி ஆகியவை உள்ளன. பலிபீடத்தின் கீழ் கொடிமர விநாயகரும் உள்ளார், முக மண்டப வாயிலில் இருபுறமும் விநாயகரும் முருகனும் மாடங்களில் உள்ளனர். இறைவன் கருவறை முன்னம் கூம்பு வடிவம் கொண்ட ஒரு பெரிய மகாமண்டபம் உள்ளது அதில் தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை சேர்கிறது.
இறைவனின் கருவறை இருபுறமும் விநாயகர் முருகனுக்கு இரு சன்னதிகள் உள்ளன. கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். வழமையான இடத்தில் சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். பிராகார வலம் வரும்போது விநாயகர்கள் முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளனர். வடமேற்கில் ஒரு வில்வமரம் ஐந்து பாகங்களாக கிளைத்து உள்ளது. வடகிழக்கில் நவகிரகமும், மதிலை ஒட்டிய மண்டபத்தில் ஜுரதேவர் பைரவர் சூரியன் ஆயோர் உள்ளனர். நவகிரகம் அருகில் அரை வட்ட கிணறு ஒன்றும் உள்ளது பார்க்க வித்தியாசமாக உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஐவநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இரயில் நிலையம் : நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி