Sunday Jul 07, 2024

ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம் – 636 102. போன்: +91- 4282 – 270 210

இறைவன்

இறைவன்: லட்சுமி கோபாலர்’ இறைவி: வேதவல்லி

அறிமுகம்

ஸ்ரீதேவி பூதேவி சம்மேத ஸ்ரீ லக்ஷ்மி கோபால ஸ்வாமி கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஆத்தூருக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலும், சேலத்திலிருந்து கிழக்கே 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது ஈத்தாப்பூரில் அமைந்துள்ள லட்சுமி கோபாலனுக்கு சிறிய கோயில். இக்கோயிலுக்கு தெற்கே வசிஷ்ட நதி ஓடுகிறது. பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை “அருள்தரும் ஆஞ்சநேயர்’ என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி மட்டும் இருக்கிறது. இத்தல பெருமாளை “சமாதானம் செய்த பெருமாள்’ என அழைக்கின்றனர். இவருக்கு மேல் உள்ள மூலஸ்தான விமானம் “திராவிட விமானம் ‘ எனப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

பார்வதியின் தந்தை தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். தான் செல்லாத யாகத்திற்கு, பார்வதியை செல்லவேண்டாம் என தடுத்தார் சிவன். ஆனால், தன் கணவனுக்கு மரியாதை கொடுக்காத தந்தையிடம் நியாயம் கேட்பதற்காக அம்பாள், யாகம் நடத்திய இடத்திற்கு சென்றுவிட்டாள். கோபம் கொண்ட சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார்.கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணுதன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசி சமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை மன்னித்து ஏற்றுக் கொண்டதோடு லிங்கமாகவும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமான் சாம்ப மூர்த்தீஸ்வரர் என்ற பெயரில் பெருமாள் கோயில் அருகில் தனிக்கோயிலில் இருக்கிறார். சேலம் வட்டாரத்தில் உள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலமாகும். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இவ்விடத்தில் தானும் குடியிருப்பதாக பெருமாள் கனவில் உணர்த்தினார். எனவே, மன்னர் இவ்விடத்தில் பெருமாளுக்கும் தனியே கோயில் கட்டினார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, துன்பங்கள் நிவர்த்தியடைய தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சமாதான தலம்: பிரிந்திருந்த சிவன், அம்பிகையை சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமாதானமாக பேசி சேர்த்து வைத்தார். இதன் அடிப்படையில் இன்று வரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சிறப்பம்சம்: மூலஸ்தானத்தில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவிரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி “லட்சுமி கோபாலர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசிஷ்ட முனிவர் இத்தல பெருமாளை வணங்கிச் சென்றுள்ளார்.

திருவிழாக்கள்

தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஏத்தாப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம், ஆத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top