எருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் (இராஜேந்திர பட்டினம்) திருக்கோயில், கடலூர்
முகவரி
அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம் -608 703 . கடலூர் மாவட்டம் . போன்: +91- 4143-243 533, 93606 37784
இறைவன்
இறைவன்: திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), இறைவி: வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி)
அறிமுகம்
சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்திலுள்ள இராஜேந்திரபட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் என்றும் புராணக் காலத்தில் அறியப்பட்டுள்ளது. இச்சிவாலயத்தில் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரமாக வெள்ளெருக்கு அறியப்படுகிறது. வியாக்ரபாதர் வேடன் புலிக்கால் முனிவராக வழிபட்ட தலம்.[2] முருகக்கடவுள் உருத்திரசன்மராகத் தோன்றி வழிபட்டதால் குமரேசம் என்றும் தேவகணங்கள் வழிபட்டதால் கணேசுரம் என்றும் பெயர் பெற்ற தலம்.
புராண முக்கியத்துவம்
கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால், அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு “உருத்திரசன்மர்’ என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் “குமாரசாமி’ ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது.
நம்பிக்கைகள்
பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு. மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எருக்கத்தம்புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி