எம்.பி.கே. புதுப்பட்டி முத்து இருளப்பசாமி திருக்கோயில், விருதுநகர்
முகவரி :
எம்.பி.கே. புதுப்பட்டி முத்து இருளப்பசாமி திருக்கோயில்,
எம்.பி.கே. புதுப்பட்டி,
விருதுநகர் மாவட்டம் – 626110.
இறைவன்:
முத்து இருளப்பசாமி
அறிமுகம்:
முத்து இருளப்பசாமி எழுந்தருளி இருக்கும் திருத்தலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டா கரிசல்குளம் புதுப்பட்டி. அதுவே சுருக்கமாக எம்.பி.கே. புதுப்பட்டி என அழைக்கப்படுகிறது. முத்து இருளப்பசாமி பேச்சுவழக்கில் முத்திருளப்பசாமி எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் மம்சாபுரம் செல்லும் வழியில் புதுப்பட்டி விளக்கு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து சற்று தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை மிக்க இத்தலம் பிற்கால பாண்டியர் ஆட்சியில் ஆண்மர்நாடு என்னும் உட்பிரிவில் அடங்கி இருந்தது. ஒரு காலகட்டத்தில் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த சில குடும்பத்தினர் தங்கள் பிழைப்புக்காக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதிக்கு வந்து மூன்று இடங்களில் புதுக்குடியிருப்பு உருவாக்கினார். எனவே தங்கள் ஊருக்கு காரணப்பெயராக எம்.பி.கே. புதுப்பட்டி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டனர். அதேவேளையில் தாங்கள் தொன்றுதொட்டு வழங்கிவரும் சிவனின் அம்சமான முத்து இருளப்பசாமி ஊருக்கு வடக்கே செங்கல் கட்டுமானத்தில் சிறிய கோயில் ஒன்றைக் கட்டினர் தவறாமல் நித்திய பூஜை மற்றும் விழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதிய குடியிருப்பு வந்த பிறகு விவசாயம் நன்கு செழிப்படைந்து அனைவரும் பழைய செல்வாக்கையும், நல்ல நிலைமைக்கு வந்து விட்டனர். இவர்கள் வளர்ச்சியை கண்டு அக்கம்பக்கத்து கிராமத்தினர் இந்த தளத்தில் நம்பிக்கையோடு நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். நாலாபுறமும் உயர்ந்த திருமதில் உடன் முழு கோயிலும் கல் கட்டுமானத்தில் சமீபத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கிழக்கே வயல்கள் அமைந்துள்ளதால் வடக்கு வாசலை பிரதானமாக உள்ளது. வாசல் தாண்டியதும் சிவனின் அம்சமாக சாமி கருதப்படுவதால் நித்திய பூஜைகளும் விழாக்களும் சிவாலயத்திற்கு உரிய வண்ணம் அமைந்துள்ளது.
நம்பிக்கைகள்:
நம்பிக்கையோடு இவரை வணங்கினால் இழந்த சொத்தை மீண்டும் பெற்றிடலாம் என்கின்றனர் பக்தர்கள்.
சிறப்பு அம்சங்கள்:
மூலவர் அம்பாள் இருவருக்கும் தனித்தனியே சன்னதிகள் அமைந்துள்ளன. கோயில் மூலவர் சன்னதி, மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. மகாமண்டபத்தில் பலிபீடம் நந்தி தேவர் உள்ளன. அர்த்தமண்டப வாசலில் துவாரபாலகர்கள் உள்ளனர். இருபுறமும் அழகிய விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சிலைகள் உள்ளன. கருவறையில் மூலவராக முத்து இருளப்ப சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
தட்சிணாமூர்த்தி, உலகளந்த பெருமாள், பிரம்மா சன்னதிகள் உள்ளன. இவற்றில் முத்து தீர்த்த கிணறு அமைந்துள்ளது. கிழக்குச் சுற்றில் வனப்பேச்சி அம்மன், லாட சன்னியாசி, தவசி தம்பிரான், சிவனணைந்த பெருமாள், பெரிய ஓட்டக்காரன், சின்ன ஓட்டக்காரன் சன்னதிகளும் இருக்க சுற்றி தளவாய் மாடன், பிரம்மராட்சசி, ராக்காச்சி அம்மன், பேச்சி அம்மன் சன்னதிகளும், மேற்கு சுற்றிய கன்னிமூலை கணபதி, ரிஷபாரூடர், நாகநாதன், வல்லப விநாயகர், சங்கர விநாயகர் சன்னதிகளும், வடக்குச் சுற்றில் கருப்பசாமி, நீலகண்டி சந்நிதிகளும் அமைந்துள்ளன. அம்பாள் நீலோத்பல மலர் ஏந்தி இடக்கையை தொங்கவிட்டபடி காட்சி அளிக்கிறாள்.
திருவிழாக்கள்:
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், கார்த்திகை மகா தீபம், திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுப்பட்டி விளக்கு
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை