Saturday Jan 18, 2025

எண்கண் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் எண்கண், திருவாரூர் மாவட்டம் – 612 603. போன்: +91 -4366-278 531, 278 014, 94884 15137

இறைவன்

இறைவன்: சுப்ரமணியசுவாமி

அறிமுகம்

இது தமிழ்நாடு திருவாரூர் மாவட்டதில் அமைந்துள்ள எண்கண் கிராமத்தில் உள்ளது. இது ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் எண்கண் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோவிலைப் பற்றியும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

புராண முக்கியத்துவம்

பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப் பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டி தொழிலையும் தானே ஏற்றார். சிறை விடுத்தும் பிரம்மாவிடம் சிருஷ்டி தொழிலை தராது தானே செய்தார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலை தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முக கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இந்தத் தலத்தில் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, திருமண தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

பிரார்த்தனை தலம் : இத்தலத்து முருகப்பெருமான் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால் அவனது சன்னதியை சபை என்றே சான்றோர் அழைப்பர். தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி ரூபராய் தென்திசை பார்த்து நின்றருளி ஞானக்காரனாகவும், தென்திசையாம் எமதிசையை நோக்கி காலசம்காரமூர்த்திபோல் நின்றருளி ஆயுள் ஆரோக்கியகாரனாகவும் முருகப்பெருமான் காட்சியளிப்பதால் அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய அரும்பேறுகளை அடியார்க்கு அளிப்பவர் ஆகிறார். இப்பேறுகளுக்காகப் பிரார்த்தித்து பலன் கண்டோர் பலராவர். அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம், கண்பார்வை இவற்றுக்கு இது சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம். சண்முகார்ச்சனை : கண்பார்வை குறைந்தவர்கள் பிரதி தமிழ் மாதம் விசாக நட்சத்திர நாளில் தொடர்ந்து 12 மாதங்கள் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை செய்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு வர கண்பார்வை முழு குணம் பெறுவது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க அற்புதம் ஆகும். சிற்பக்கலை (மூலவர்) : மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர். ஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள் தான் தாங்கியிருக்கிறது. அத்தனை சிறப்புக்கும் அற்புதத்திற்கும் அருமையான கதை உண்டு. அதிசய சிற்பத்தின் கதை: முத்தரச சோழன் சிக்கலில் ஆறுமுகன் சிலை வடித்த சிற்பியின் வலக்கை கட்டைவிரலை தானமாக பெற மீண்டும் கட்டைவிரலை இழுந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கக் கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் பறிக்க, வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் அடர்ந்த வனமாகிய சமீவனம் என்ற இடத்தில் இருந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வடிவமைத்து ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிபீ ட்டு சிற்பியின் கண்களில் பட்டு சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது. சமீவனம் என்ற இடமே இக்காலத்தில் எண்கண் என்ற இந்த தலம் என்பது சிறப்பு. தன் சிருஷ்டி தொழிலை முருகனிடமிருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது. எட்டுக் கண்கள் – எண்கண். தந்தையின் ஆலோசனையை முருகனும் ஒப்புக் கொண்டு பிரம்மாவிற்கு உபதேசம் செய்த ஊர் இது. இத்தலத்தின் சிறப்பை அருணகிரி நாதர் திருப்புகழில் வெகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளது சிறப்பானது.

திருவிழாக்கள்

தைப்பூசம் – பிரம்மோற்சவம் – 14 நாட்கள் திருவிழா – தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால் சிம்மவர்ம மன்னனுக்கு ஏற்பட்ட சிங்கமுகம் மாறி மனித உருவம் திரும்ப பெற, சிம்மவர்ம மன்னன் தினசரி விருத்த காவிரியில் (வொட்டாற்றில்) நீராடி எண்கண் வேலவனை தரிசித்துவர சிம்மவர்மனுக்கு தைப்பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிய சுபதினத்தில் முருகன் மயில்மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் தோள்களில் காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் மாதாந்தர கார்த்திகை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். ஐப்பசி – கந்த சஷ்டி – 8 நாள் திருவழா. தவிர ஆடிக் கார்த்திகை, திருக்கார்த்திகை, மாசி கார்த்திகை, மாசிமகம், தை கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேஷ ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிமிழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top