Saturday Jan 11, 2025

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்,

உவரி,

திருநெல்வேலி மாவட்டம் – 628 658.

போன்: +91 99625 69495, 93847 28151, 94437 22885

இறைவன்:

சுயம்புலிங்க சுவாமி

இறைவி:

 பிரம்ம சக்தி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி கிராமத்தில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் சுயம்பு நாதர் என்றும், தாயார் பிரம்ம சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் என்பது கடம்ப மரம். வரலாற்று ரீதியாக இந்த இடம் வீரை வளநாடு என்று அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் – கன்னியாகுமரி மார்க்கத்தில் உவரி அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் நாங்குநேரியில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி மற்றும் மதுரையில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

       அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

‘சுயம்பு’ என்றால் ‘தானாகத் தோன்றுவது’. சுவாமிக்கும் சுயம்புலிங்கநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது. அம்பாளை பிரம்மசக்தி என்பர்.இதையடுத்து, பக்தர்கள் ஏராளமாக அங்கு வர ஆரம்பித்தனர். அவர்களது வேண்டுதல்கள் பலிக்க ஆரம்பித்தன. இதையடுத்து பெரிய கோயில் உருவானது. இவ்வூரை ‘வீரை வளநாடு’ என்றும் அழைப்பர்.

நம்பிக்கைகள்:

எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீருகிறது. நொண்டிகள், கூன், குருடு, மனநோயாளிகள், பில்லி, சூன்யம், பேய் பிசாசு பிடித்தவர்கள் அகியோரது பிரச்னைகள் இங்குள்ள சுயம்புலிங்கநாரை வழிபட்டால் தீருகிறது. கல்யாண வரம், குழந்தைபாக்கியம் வேண்டுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அந்த வரங்கள் கிடைத்து வருவது இத்தலத்து பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை. மனஅமைதி இழந்து தவிப்போர் இத்தலத்துக்கு வந்தால் மனநிம்மதி கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்:

இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக உள்ளார்.

சூரிய அபிஷேகம் : சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே தனி அழகு என்று சொல்லலாம். மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான்.

இயற்கையே இறைவனுக்குக் கவரி வீசுவது உவரியில்தான். கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம். மனமுருக வழிபட்டால் வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய்குணமாகிறது. இந்த கடற்கரைக்கோயிலுக்கு ஒருமுறை சென்றவர்கள் மிகுந்த மனநிம்மதியோடு திரும்பி வருவார்கள். சுற்றுலாப்பயணிகள் வந்து போகுமளவுக்கு சிறப்புடைய அழகிய கோயில்.

திருவிழாக்கள்:

வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் – 3 லட்சம் பேர் கூடுவர். தைப்பூசம் – 1 நாள். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெள்ளமாக கூடுவர். தவிர வைகாசி விசாகம், தைபூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு தைப்பூசம் பிரதோசம் தீபாவளி, பொங்கல், ஆகிய நாட்களில் கோயிலில் விசேச பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடக்கும். அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உவரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாங்குநேரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம், தூத்துக்குடி மற்றும் மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top