உமாமகேஸ்வரபுரம் உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
உமாமகேஸ்வரபுரம் உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர் சிவன்கோயில்,
உமாமகேஸ்வரபுரம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர்
இறைவி:
உமாமகேஸ்வரி மற்றும் பாலாம்பிகை
அறிமுகம்:
திருவாரூரின் தெற்கில் திருத்துறைபூண்டி சாலையில் 13வது கிமீ-ல் உள்ள மாவூர் பாலத்தை தாண்டியதும் முதல் வலதுபுறம் திரும்பும் சாலையில் ஒரு கிமீ தூரம் சென்றால் உமாமகேஸ்வரபுரம். அகத்திய மாமுனி தென்னகம் வந்தபோது அவருக்கு, இறைவன் இறைவி தம்பதி சமேதராக பல இடங்களில் திருமண காட்சி நல்கியதாக கூறுவர். அப்படி திருமண காட்சி கண்ட இடங்களில் ஒன்று தான் இந்த தலம். அதனால் இந்த தலம் உமாமகேஸ்வர புரம் என பெயர் வந்தது என்பது வரலாறு.
அந்த உமாமகேஸ்வரர் கோயில் ஊரின் மேற்கில் செல்லும் ரயில் பாதை இருக்குமிடத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டனாராம். அக்கோயில் மூர்த்திகள் ஊரின் மற்றொரு சிவன்கோயிலான பாதாளீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டன என்கின்றனர்.
சப்பாத்திகள்ளிக்கு பாதாளிமூலி என ஒரு பெயர் உண்டு. சப்பாத்திகள்ளி காட்டில் இருந்த இறைவன் என்பதால் பாதாளிமூலிஈஸ்வரர் / பாதாளீஸ்வரர் என பெயர் வந்திருக்கலாம். காலப்போக்கில் இரு கோயில்களும் சிதைந்து போய் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன.
பிரதான நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் நுழையும் இடத்தில் பெரிய குளத்தின் கரையில் தான் இரு சிவாலயங்களும் உள்ளன. சமீபகாலத்தில் ஊர்மக்கள் ஆர்வத்துடன் களமிறங்கி இரு கோயில்களையும் செப்பனிட்டு மிக அற்புதமான முறையில் கட்டி குடமுழுக்கும் செய்துள்ளனர். கோயிலின் மூர்த்திகளை காணும்போது இக்கோயில் சோழர்கால காலத்தை ஒத்தது என கூறலாம், ஆனால் இன்று உள்ள கோயில் சில நூறு ஆண்டுகள் பழமை மட்டுமே கொண்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
கிழக்கு நோக்கிய இறைவன் பாதாளீஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக கருவறையில் உள்ளார். கருவறை வாயிலில் பிரதான விநாயகர் ஓர் மாடத்திலும் தண்டாயுதபாணி மற்றொரு மடத்திலும் உள்ளனர். கருவறை கோட்டங்களில் நர்த்தன விநாயகர் தக்ஷணமூர்த்தி ஓர் லிங்கோத்பவர் துர்க்கை ஆகியோர் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர். கருவறை விமானம் உயர்ந்து காட்சியளிக்கிறது. இறைவன் சன்னதியின் எதிரில் தனி மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.
இந்த மண்டபத்தினை ஒட்டி ஒரு பெரிய சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் கோயில்களுக்கு வரி நீக்கப்பட்ட இறையிலி நிலங்கள் தேவதானமாக வழங்கப்பட்டு, இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோவிலின் தினசரி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிவன் கோவிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தைக் குறிக்கவே இந்த சூலக்கல் நடப்பட்டிருக்கவேண்டும்.
இறைவி பாலாம்பிகை சன்னதியின் நேர் பின்புறம் கிழக்கு நோக்கிய உமாமகேஸ்வரர் சன்னதியும், அவரின் இடப்பாகத்தில் உமாமகேஸ்வரியும் உள்ளனர். இறைவன் சன்னதியை ஒட்டி சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கு பகுதியில் பைரவரும், சூரியனும் உள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்:
இறைவன் கருவறையின் வலதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சன்னதி உள்ளது. இப்படி இறைவனுக்கு வலப்புறமாக அம்பிகை சன்னதி இருப்பது திருமணத்திற்கு முந்தைய கோலம் என்பர். அதனால் திருமணமாகாதவர்கள் வந்து இறைவன் இறைவியை வழிபட்டால் உடனடியாக திருமணம் கைகூடும் என்பது கூடுதல் சிறப்பு. அருகில் உள்ள சூரிய தீர்த்தத்தில் குளித்து, இறைவன் பாதாளேஸ்வரரை நெய்விளக்கிட்டு வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும், முன்னொரு காலத்தில் மகாளய அமாவாசை இங்கு வெகு சிறப்பாக நடைபெறுமாம். கார்த்திகை பௌர்ணமி நாளில் விரதமிருந்து இந்த உமாமகேஸ்வரரை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்,
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உமாமகேஸ்வரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி