உத்திரமேரூர் வைகுண்டப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
உத்திரமேரூர் வைகுண்டப் பெருமாள் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603406
இறைவன்
இறைவன்: வைகுண்டப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
அறிமுகம்
வைகுண்டப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டிலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய கட்டிடக்கலையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பல்லவரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பிற்கால இணைப்புகள் சோழர்களால் ஏற்படுத்தப்பட்டவை. முதலாம் பராந்தக சோழன் (பொ.ச. 907-55) ஆட்சியின் போது கிராம சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக நடைமுறைகளை குறிக்கும் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன.
புராண முக்கியத்துவம்
உத்திரமேரூர் பல்லவர், சோழர், பாண்டியர், சம்புவரையர், விஜயநகர ராயர், நாயக்கர்களால் ஆளப்பட்டது. கோவில் கல்வெட்டுக்களின்படி, கிபி 750 ஆண்டுகளில் பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (730–795 CE) இச்சிற்றூரை நிறுவியதாகக் கூறப்படுகிறது. அவ்வரசனால் இவ்வூர் பிராமணர்களுக்கும் வைணவர்களுக்கும் நன்கொடையாக அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்பகுதி சோழர்களால் கைப்பற்றப்பட்டு 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்களது ஆட்சியின் கீழ் வந்தது. முதலாம் பராந்தக சோழன் (907–950), முதலாம் இராஜராஜ சோழன் (985–1014), இராஜேந்திர சோழன் (1012–1044), முதலாம் குலோத்துங்க சோழன் (1070–1120) ஆகிய சோழ அரசர்களின் காலங்களில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்களடங்கிய கல்வெட்டுக்கள் இங்குள்ளன. உள்ளூர் தலைவர்களைத் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கும் “குடவோலை” முறை பற்றிய விவரங்களும் இக்கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பராந்தக சோழன் காலத்தில் கிராமத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இக்குடவோலை வழக்கம் நடைமுறையில் இருந்ததற்கான குறிப்புகள் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியும் கிராமமும் பாண்டியர்களிடம் சென்று பின்னர் தெலுங்கு சோழ ஆட்சியாளரான விஜய கந்தகோபாலனிடம் சென்றன. பிற்காலத்தில், பல்லவத் தலைவர்கள், தெலுங்கு சோழர்கள், சம்புவரையர்கள் மற்றும் இறுதியாக குமார கம்பணன் ஆகியோரால் ஆளப்பட்டது. இவ்வூரிலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், சுப்ரமண்யர் கோவில் மற்றும் கைலாசநாத கோயிலுக்கு விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் (1502-29) பங்களித்தார். பாரம்பரிய மரபுரிமை நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
வைகுண்டப் பெருமாள் ஆலயம் சுமார் 0.5 ஏக்கர் (0.20 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இரு பக்கங்களிலும் உள்ள வைகுண்டநாதரின் உருவச்சிலை இந்த சன்னதியில் உள்ளது. 2,500 சதுர அடியில் (230 சமீ) ஒரு மண்டபம் உள்ளது. கோவிலின் கூரைகள் தூண்களின்றி சுவர்களால் தாங்கப்படுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குலோத்துங்க சோழர் மண்டபத்தைன் கூரையை அமைத்ததாகக் கருதப்படுகிறது. இந்த முழு அமைப்பும் முதலில் ஒரு கூடும் மண்டபமாக இருந்தது; குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது அது சரிந்ததால் வைகுண்ட பெருமாளின் உருவத்தைக் கொண்ட கோவிலுடன் அம்மண்டபத்தை அவர் மீண்டும் கட்டினார் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆகம நெறிப்படி கூடும் மண்டபம் கிராமத்தின் மையப்பகுதியில் கட்டப்பட்டு, அதைச் சுற்றி கோவில்கள் அமைக்கப்பட்டன என்ற விவரங்களும் கல்வெட்டுக்களில் உள்ளன.
காலம்
730-795
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை