Saturday Dec 28, 2024

உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :

அருள்மிகு பிரம்மரந்தீஸ்வரர் திருக்கோயில்,

உச்சுவாடி,

திருவாரூர் மாவட்டம் – 610206.

இறைவன்:

பிரம்மரந்தீஸ்வரர்

இறைவி:

பிரம்மகுந்தளாம்பிகை

அறிமுகம்:

 திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த உச்சுவாடி கிராமத்தில் அருள்மிகு பிரம்மரந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டு, சித்தக் கலைகளைப் பயின்ற தலம் இது என்கின்றன புராணங்கள். அது மட்டுமன்றி, அர்ஜுனன் சிவபிரானிடம் பாசுபத ஆயுதம் பெற்றதும் இங்குதான் என்கிறது தலவரலாறு.

புராண முக்கியத்துவம் :

                          முருகப்பெருமான் சிறுபிள்ளையாக இருந்தபோது விளையாட்டாக தந்தைக்கே பிரணவ மந்திரத்தை குருபீடத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தார். இதனால் தகப்பன் சுவாமி என்றும் திருநாமம் கொண்டார். இதற்கு பிராயச்சித்தமாக திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் ஈசனை வழிபட்டு, அவரிடம் இருந்து சித்த யோகக்கலைகளைக் கற்றார் என்கிறது இந்த ஊர் தலபுராணம். இங்குள்ள ஈசன் பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இங்குள்ள முருகப்பெருமானும் யோக வடிவாக ஞான குருவாக அருளுகிறார். மேலும் மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த பாஷாண மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார் முருகன்.

 வெண்ணாற்றங்கரையில் உள்ள இந்த திருத்தலம் யோக-சித்த கலைகளைப் பயில்பவருக்கு அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக்கலையில் பிரம்மரந்திரம் என்றால் ஆதாரச் சக்கரங்களில் சகஸ்ராரம், அதற்கு மேல் துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார். அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக எழுந்தருளி இருக்கிறாள். இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்! அதுமட்டுமா, இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. ஈசனிடம் ஆசி பெற, இங்கு வந்து சகாதேவன் வழிபாடு செய்து வரங்கள் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்:

      அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, செவ்வாய் ஆகிய ஐவரின் அம்சத்தையும் தன்னுள் கொண்டவன் முருகப்பெருமான். இதனால் முருகனை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். செவ்வாய் உண்டாக்கும் சகல தடைகளும் விரயங்களும் நீங்கும். குருபார்வை பலமாகி மங்கல காரியங்கள் நடைபெறும். அதிகார பலமும் அளவற்ற செல்வ வளமும் சேரும். நல்ல உறவுகளை உருவாக்கித் தருபவன் முருகன், எனவே மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் உறவுச் சிக்கல்கள் நீங்கி உன்னத நிலையை அடையலாம்.

மேலும் ஆயுள் ஆரோக்கியம் கூடும். நீடித்த புகழ் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, அச்சமற்ற நிலை, விரயமற்ற செல்வம், துணிவு; தைரியம் பிறக்கும், பிள்ளைகளின் தீய பழக்க வழக்கங்கள் மாறும். நிம்மதியான வாழ்வு, திருஷ்டி-எதிரிகளின் பிரச்னைகள் நீங்கும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உச்சுவாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top