Saturday Jan 18, 2025

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமாலீஸ்வரர் !!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் திருமாதலம்பாக்கம் திருத்தலத்தில் உள்ளது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சுயம்பு   திருமாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தினை திருமால்+தவம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி உறையும் தலம் என்றும் கூறுவர். திருமால் மிகுந்த விருப்பமுடன் ஈசனை வழிபட்டு, தமது மனக்கவலைகள் ஒழிந்து மனோபலம் பெற்ற தலம் என்றும் பொருள் சொல்வார்கள்.

 இது மஹாலக்ஷ்மி மனம் உவந்து உறைந்துள்ள தலமாதலால் மங்கலம் நிறைந்த தலம் என்றும் கூறுவர்.

ஒவ்வொரு முறையும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழும்யுத்தத்தில் திருமால் ஒவ்வொரு அவதாரம் எடுத்து தேவர்களைக் காத்து ரட்சிக்கும் மனோபலம் எப்படிப்பட்டது என்பதை உலகோர்க்கு உணர்த்தவே ஈசன் இங்கு தோன்றினார். திருமால் ஈசனுக்கு அனுதினமும் இங்கே நித்ய பூஜைகள் செய்து வருகிறார் என்பது ஐதீகம்.

திருமாலின் பூஜைக்கு மனமகிழும் ஈசன் ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் அனுக்கிரகம் செய்கிறார். இந்த சூரிய ஒளிபிரகாசத்தில் ஈசனின் திருமேனி பொன்னிறமாகக் காட்சி அளிக்கிறார். மேலும், திருமால் ஈசனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டதால், ‘ஸ்ரீ பொன்னிறங் கொண்ட திருமால் ஈஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.

ஜலந்திரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றி, அரிய வரங்களைப் பெற்றான். ‘தன்னை அழிக்கும் சக்தி எதுவாயினும் அது தான் பிறந்த தலத்தில் இருந்து வந்தே தம்மை அழிக்க 

வேண்டும்’ என்று வரம் பெற்றிருந்தான்.

ஈசனிடம் வரம் பெற்ற கர்வத்தில் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினான். 

தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். ஆனால், மகாவிஷ்ணு அவன் பெற்றுள்ள வரத்தை அவர்களுக்குக் கூறி, ஜலந்திரனை ஈசனே அழிக்க வேண்டும். அதனால், ஈசனைப் பிரார்த்தனை செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனையை ஏற்ற ஈசன், ஜலந்திரன் தோன்றிய திருமாதலம்பாக்கத்திலே சுயம்புத் திருமேனியராகத் தோன்றி, அவனை காரைக்கால் அருகில் உள்ள திருவற்குடியில் சம்ஹாரம் செய்தார் என்பது தல வரலாறு.

இத்தல ஈசனை திங்கட்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்று அனுபவத்தில் கண்டவர் கூறுகின்றனர்.

தேவலோக கற்பக விருட்சத்துக்கு இணையானவள் இத்தல அம்பிகை திரிபுரசுந்தரி. அம்பிகையைப் பார்க்கும்பொழுது நம்மைக் கனிவோடு பார்ப்பது போல் இருக்கிறது. அம்பிகையை மனத்தில் நினைத்து நம் பிரார்த்தனையை வைத்தால் நிச்சயம் நடந்தேறும் என்று இங்கு வரும் பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் கூறுகின்றனர். அம்பிகையை வெள்ளிக் கிழமைகளில் சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால் ஜாதகத்தில் ஏற்படும் திருமண தோஷங்கள் நிவர்த்தியடையும்.  

சித்தர் பெருமக்கள் உருவாக்கும் நவபாஷாண மூர்த்திக்கு உள்ள சிறப்பம்சம் பொருந்தியவர் இத்தல ஸ்ரீனிவாசப் பெருமாள். பல அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்ட பெருமாள் நம் உடலில் ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்கிறார். இதன் ஆதாரமாக பெருமாளின் மேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது பெருமாளின் திருமேனி நீலநிறமாக மாறும் அபூர்வக் காட்சியை இங்கு காணலாம்.

இத்தல ஸ்ரீனிவாச பெருமாளை 11 ஏகாதசி அல்லது 11 சனிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு அந்த அபிஷேகப் பாலை உட் கொண்டு வந்தால் சகல சரீர ரோகமும் நிவர்த்தியாகும்.

தந்தை ஜமதக்னியின் சொற்படி, தாய் ரேணுகா வின் சிரசைக் கொத பரசுராமர் தோஷத்துக்கு உட்பட, இத்தல ஈசனை பூஜித்து தோஷப் பரிகாரம் செய்து கொண்டார். அதனால், இந்த சிவாலயம் பித்ருதோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறது.

ஒருசமயம் துர்வாச மகரிஷி, மகாலக்ஷ்மி தாயார் தமக்களித்த புஷ்பமாலையை இந்திரனுக்கு பிரசாத மாகக் கொடுத்தார். இந்திரன் கர்வத்துடன் அம்மாலையை தமது ஐராவத(யானை)த்திடம் கொடுத்து முனிவரை அவமானப்படுத்தினான். அதனால் சின மடைந்த முனிவர், உனது செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டுப் போகட்டும்” என சாபம் கொடுத் தார். வருந்திய இந்திரன் முனிவரிடம் சாபவிமோசனம் கேட்க, எங்கு மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ்மியும் ஈசனை அனுதினம் பூஜை செய்கிறார்களோ அங்கே சென்று ஈசனை பூஜித்தால் நீ இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீட்பாய்” என்று கூறினார்.

அதன் படி இத்திருத்தலம் வந்த இந்திரன், தினசரி இங்குள்ள புஷ்கரணியில் ஸ்நானம் செய்து வருகையில் அதன் எதிரே மூன்று விருட்சங்கள் (செடிகள்) தோன்றின. அவை நெல்லி, அகத்தி, துளசி. நெல்லி ஈஸ்வர   ஸ்வரூபமாகவும், அகத்தி திருமாலாகவும், துளசி மகா லக்ஷ்மியாகவும் அருள்பாலிக்கின்றன. இவையே இன்றும் இத்திருத்தல விருட்சங்களாக விளங்குகின்றன. விசாலமான ஆலயப் பரப்பு. கோயில் அமைந்த இப்பகுதியை இரண்டு சோழ அரசர்கள் ஆண்டதாகக் கூறுகின்றனர்.

ஒருமுறை புதிய கங்கை மன்னன் என்னும் பல்லவ மன்னனுக்கும் ராஜராஜ சோழ னுக்கும் தக்கோலம் எனும் இடத்தில் பெரியயுத்தம் நடந்தது. அப்பொழுது ராஜராஜ சோழனின் படை வீரர்கள் திருமாதலம்பாக்கம் தலத்தில் முகாம் இட்டு யுத்தம் செய்தனர். அப்பொழுது, ‘தோல்வி பெறுவோமோ’ என்று பயந்த சோழ மன்னனுக்கு ஈசன் அசரீரி மூலமாக, தாம் இங்கே உறைவதாகவும் தம்மை 11 முறை பிரதட்சணம் செய்து யுத்தத்துக்குச் சென்றால் வெற்றியடையலாம் என்று கூறினார்.

அப்படியே செய்து வெற்றி பெற்றான் ராஜராஜசோழன். அதை முன்னிட்டு இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் பல செய்தான் ராஜராஜ சோழன் என்று தல புராணம் மூலம் அறிய முடிகிறது

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top