Sunday Nov 24, 2024

இளங்காடு பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி

இளங்காடு பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம் – 604408.

இறைவன்

இறைவன்: வைகுண்டவாசப் பெருமாள் இறைவி: பூமிநீளா

அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள வந்தவாசியிலிருந்து, 5 மைல் தூரத்தில் இளங்காடு என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் பூமிநீளா சமேத வைகுண்டவாசப் பெருமாள் என்ற பழைமையான ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முற்காலத்தில் க்ஷேத்திர விசேஷமானதாக இருந்திருக்கிறது. இந்த கோயில் சோழ அரசர் மற்றும் பல்லவ அரசர் காலத்திலும் மிகப்பெரியதொரு வரலாற்று ஆலயமாக இருந்திருக்க வேண்டும் . சுமார் 3000 வருஷமாக தொடர்ந்து திருவாராதனம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஊர் அக்ரஹாரத்தில் பெரிய மகான்கள் வாழ்ந்து . எப்போதும் வேத கோஷங்களுடனும், யாகங்கள் செய்தும், வசித்து இருந்திருக்கின்றனர். இந்த ஊர் மிகவும் ஒரு பழமையான, ஆலய பிரஸித்திபெற்ற நகரமாக இருந்திருக்கிரத்து. அக்ரஹாரவாசிகள் ஒருவரும் அந்த ஊரில் இல்லாததாலும், கோவிலுக்கு வருமானமே இல்லாததாலும் ஆலய விழாக்கள் நின்றுவிட்டன. தினசரி திருவாராதனம் மட்டும் அக்ரஹாரவாசிகளின் உதவியோடு விடுபடாமல் ஒரு வேளை நடைபெற்று வருகிறது. பெரியவர்கள் காலத்திலேயே இந்த பெருமாள் கோவில் கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் முதலியன முற்றிலுமாக இடிந்துவிட்டநிலையில் அவர்களே பெருமாளை முன்மண்டபத்தில் தடுப்புசுவர் ஏற்படுத்தி, பிரதிஷ்டை செய்துள்ளனர். தற்போது அந்த மண்டபம் மிகவும் பழுதாகி விட்டது. இதை உடனடியாக சீர்செய்யாவிட்டால், பெருமாள் விக்ரஹத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

புராண முக்கியத்துவம்

செஞ்சி ராஜகுருவான திருமலைநல்லான் சக்ரவர்த்தி சேஷாத்ரியாச்சார்யர் என்னும் ஸ்வாமி இந்த ஊரில் செஞ்சியிலிருந்து குடிவந்து அப்போதிருந்த சமணர்களின் தெருக்களை ஒழுங்கு படுத்தி அக்ரஹாரம் அமைத்து, செஞ்சியிலிருந்து தமது வாரிசுகளை குடிஅமைத்துள்ளார். இவர் பிறந்தது கி.பி.1315ம் ஆண்டாகும். அப்போதிருந்த அரசர் இந்த வைகுண்டவாசப் பெருமாள்கோவில் தர்மகர்த்தம், முதல் மரியாதை முதலியவைகளை இவரிடம் ஒப்படைத்து,. இன்றுவரை அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நிர்வாகம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் “வெங்குணம்கோட்டத்து பொன்னூர் நாட்டு இளங்காடாம் அழகிய சோழநல்லூர்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரில் அரசு அலுவலகமும், சந்தைப்பேட்டைகளும் இருந்ததற்கு அடையாளமாக இன்னமும் கட்டிடகடக்கால்கள் உள்ளன. மேலும் செஞ்சி திருமலைநல்லான் சக்ரவர்த்தி சேஷாத்ரியாச்சார்யர் கிருஷ்ணன்குட்டை என்னுமிடத்தில் சக்ரயாகம் செய்துள்ளதற்கு அடையாளமாக அங்கு மண்டபம் உள்ளது. மேலும் மேற்படி கூட்டஸ்தரான செஞ்சி திருமலைநல்லான் சக்ரவர்த்தி சேஷாத்ரியாச்சார்யர் ஸ்வாமி ஒரு காலத்தில் யசனூர் என்னும் ஒரு கிராமத்திற்கு தமது சிஷ்யர்களைக் காணச் சென்றபோது, இரவு வந்து இவரை மிரட்டியதாகவும், உடனே தமது மூன்றாவது யக்ஞோபவிதத்தை கழற்றி அதன்மீது வீசி தமது மந்த்ர சக்தியால் அடக்கி, தமக்கு வாகனமாக்கி அதைக் கொண்டு தினசரி செஞ்சி அரங்கநாத பெருமாளையும், காஞ்சி வரதராஜ பெருமாளையும், தரிசனம் செய்து இளங்காட்டிற்கு திரும்பியதாகவும் சிலகாலம் கழித்து அந்த பூதத்தை அடக்கி வீட்டுவேலைசெய்ய வைத்துக் கொண்டதாகவும் பெரியோர்கள் கூறுவர். அதன் அடையாளமாக அந்த பூதம் நெல் குத்திய உரல் அக்ரஹார வீட்டின் பின்புறத்தில் இன்றளவும் உள்ளதை அறியலாம்.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெருமாள் நின்ற நிலையில் பூமிநீளா ஸமேதராய் 7½ அடி உயரத்தில் மிகவும் அழகு மற்றும் ஆச்சர்யமான திருமுகமண்டலத் துடன் மக்களுக்கு காட்சி தருகிறார் .. இந்த பெருமாளை சமணம், சாக்கியம் மற்றும் சைவ மதங்களை முதலில் தழுவி, கடைசியாக வைஷ்ணவ மதத்தை தேர்வு செய்து விஷ்ணுவே மோக்ஷத்தை தருபவர் என்பதை முற்றிலுமாக உணர்ந்து அதையே உலகெங்கும் பறைசாற்றிய சித்தரான திருமழிசை ஆழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளது மிகவும் சிறப்பான விஷயமாகும். இந்த ஆழ்வார் சைவ மதத்தை தழுவியிருந்தபோது இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்கு தரிசனம் தந்துள்ளார். இவை தவிர அகோபில மடம், ஏழாவது பட்டம் ஜீயரான வண் ஸடகோப யதீந்த்ர சடகோப யதீந்த்ர மஹாதேசிகள் இந்த ஊரில்தான் பிறந்து, இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

திருவிழாக்கள்

இந்த திருக்கோவில் பெருமாளுக்கு சுமார் 3000 ஆண்டுகளாக திருவாராதனம் விடுபடாமல் வைகாணஸ ஆகமமுறைப்படி நடைபெற்று வருவது மிகவும் விசேஷமாகும். இக்காலம்வரை பார்வேட்டை, தேசிகன் சாற்றுமுறை நவராத்ரி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி ஆகிய உற்சவங்கள் நடந்து இருக்கின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இளங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top