Wednesday Dec 25, 2024

இலுப்பூர் பொன்வாசி நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி :

இலுப்பூர் பொன்வாசி நாதர் திருக்கோயில்,

இலுப்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம் – 622102.

இறைவன்:

பொன்வாசி நாதர்

இறைவி:

பொன்னம்பாள்

அறிமுகம்:

இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது இந்த பொன்வாசி நாதர் ஆலயம். விராலிமலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. மேற்கூறிய மூன்று ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.            

புராண முக்கியத்துவம் :

திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பெற வேண்டியும் பள்ளியறையில் 48 நாட்கள் பால் பழம் வைக்க, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். ராமபிரானும், லட்சுமணரும் சீதா பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் போது, இத்தலத்தின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்குள்ள இறைவன் -இறைவியை சிவபூஜை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது. ‘சொர்ணம்’ என்றால் ‘பொன்.’ தங்கள் பெயரிலேயே பொன்னைக் கொண்ட இத்தல இறைவன், இறைவிக்கு அர்ச்சனை தட்டில் நகைகளுடன் ஆராதனை செய்து நகைக் கடை தொடங்குபவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பது உண்மை. புதியதாய் நகை வாங்கும் பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பூ, பழம், தேங்காயுடன் வாங்கிய நகைகளை வைத்து இறைவன் இறைவியை ஆராதனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. இதனால் அவர்கள் மேலும் மேலும் நகைகள் வாங்குவது நிஜம். களவு போன நகைகள் திரும்ப கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட பக்தர்கள், இங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரு மண்டல காலத்திற்குள் களவு போன நகைகள் திரும்ப கிடைப்பது உறுதியாம்.

சிறப்பு அம்சங்கள்:

                ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது. இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம், மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது. கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் முன் மண்டபம் உள்ளது. கொடி கம்பம், பலி பீடம், நந்தி ஆகியவை இங்கு காட்சி தருகின்றன. முன் மண்டபம் 12 தூண்களுடனும், யாளி, ஆறு கரங்களுடன் நர்த்தன விநாயகர் மற்றும் நாயக்கர் மன்னர்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. வலது புறம் நடராஜ சபை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பொன்வாசி நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிறபெயர்கள் ‘ஹேம விருத்திஸ்வரர்’ மற்றும் ‘பொன் வளர்ச்சி நாதர்’ என்பதாகும். இதுவே நாளடைவில் மருவி ‘பொன்வாசி நாதர்’ என அழைக்கப்படுகிறது. இங்கு அன்னை தென் முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேலிரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்கிறாள். இத்தல இறைவி, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் சக்தியுடன் இணைந்து கருணையுடன் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

இறைவனின் வட்டவடிவ விமான கோபுரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் காணப்படுகிறது. மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பழமையான சிவன் கோவில்களில் தான் இது போன்ற அமைப்பு உள்ள விமானத்தைக் காணலாம். இந்த ஆலய திருச்சுற்றின் தெற்கில் நால்வர் திருமேனிகளும், மேற்கில் கன்னிமூலை கணபதி, வீர விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண – புஷ்கலா சமேத ஐயனார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, வீரபத்ரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இலுப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top