Sunday Nov 24, 2024

இருகூர் (ஒண்டிப்புதூர்) நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், 

இருகூர்(ஒண்டிப்புதூர்), 

கோயம்புத்தூர் மாவட்டம் – 641103.

இறைவன்:

நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்

இறைவி:

சுயம்வர பார்வதி தேவி, மீனாட்சியம்மன்

அறிமுகம்:

கோவை இருகூரில் சுமார் 3000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயத்தில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். கோயம்புத்தூரில் இருந்து இருகூர் செல்லும் பேருந்தில் சென்றால், கோயிலை அடையலாம்.

புராண முக்கியத்துவம் :

 கரிகாற்சோழன் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. 28வது கோவிலாக சவுந்தரேஸ்வரர் கோயிலில் திருப் பணி செய்துள்ளார்.

இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சவுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக் கின்றனர்.

நம்பிக்கைகள்:

இங்குள்ள துர்க்கையை வழிபட்டால், இராகு தோஷம் நிவர்த்தியாகி திருமணத் தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷம், திருமணத் தடை நீங்க இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட்டு வரம் பெறுகின்றனர். நீண்ட ஆயுளுக்காக 60 வயதானவர்களுக்கு சாந்தி வழிபாடு (ஆயுள் ஹோமம்) செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனது எனவும், இருளர் தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டேஸ்வர இலிங்கம் சுயம்புவாக தோன்றியது. இலிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில் தண்டத்துடன், ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார். பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சவுந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் நான்கு திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வரலிங்கம் உள்ளது. பீடத்தில் அமிர்த கலசம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது.

உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு, திருமுருகன் பூண்டி செப்பேடுகளிலிருந்து இருகூரின் பழமையை அறியமுடிகிறது. பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரிய கதிர்கள் பட்டு, சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது.

திருவிழாக்கள்:

                ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்கார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடக்கிறது.

காலம்

3000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இருகூர்(ஒண்டிப்புதூர்)

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top