இராமேஸ்வரம் நம்புநாயகி திருக்கோவில்

முகவரி :
அருள்மிகு நம்புநாயகி திருக்கோவில்,
ராமேஸ்வரம் மாவட்டம் – 623536.
இறைவி:
தாழைவன ஈஸ்வரி / நம்பு நாயகி
அறிமுகம்:
இராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் நம்பு நாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.
புராண முக்கியத்துவம் :
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரங்களை வெட்டும் போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.
அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் “இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்றார். அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர். ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.
சிறப்பு அம்சங்கள்:
கருவறைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில், பழைய சுதையம்மன் மறைந்துள்ளது. இத்தல அம்மன், ‘தாழைவன ஈஸ்வரி’ என்று அழைக்கப்பட்டாலும், ‘நம்பு நாயகி’ என்றே அனைவராலும் போற்றப்படுகின்றாள். தன்னை நாடி வருவோருக்கும் குழந்தைப்பேறு வழங்குவதில் கண்கண்ட தெய்வமாக இவள் விளங்குகின்றாள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னனின் மகனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி வாட்டியது. மன்னன் தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டி வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “ராமேஸ்வரம் தீவில் உள்ள தட்சிண காளியிடம் சென்று வந்தால் குணம் பெறலாம்” என்றது. அதன்படி இங்கு வந்து, அம்மன் முன்பு மகனைக் கிடத்தி, மனமுருகி வேண்டி நின்றான் மன்னன்.
கருணை தெய்வமான தட்சிணகாளி அங்கு தோன்றினாள். தன் சூலாயுதத்தை பூமியில் வீச அங்கு ஒரு தடாகம் தோன் றியது. அதில் குளித்த மன்னனின் மகன் நலம்பெற்றான். இக்கோவிலை ராமநாதபுரம் வெள்ளாளர் மரபினர், ஏழாவது தலைமுறையாகப் பூஜை செய்து வருகின்றனர். கி.பி. 1830-ல் இந்தக் கோவிலின் நிர்வாகத்தை ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டு, பூஜைகளை மட்டும் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் தற்போது இந்து சமய அற நிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.






காலம்
600 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராமேஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை